தொலைந்து போன வானம் மெல்ல விசும்புகிறது வீசும் காற்றில் தூரத்து மரங்கள் கூச்சம் கொள்வதைக் கண்ணாடிச் சுவர்கள் விவரிக்கையிலேயே வியர்க்கத் துவங்குகின்றன நீண்ட வாலுடன் வீங்கிய தலையுடன் நீந்தியோடும் ஆயிரம் திவலைகளுக்கு நான் நானாகும் முன்னே ஓடிய ஓட்டத்தைச் சொல்கிறேன் தோற்கும் திவலைகள் போலவே அன்று வெல்லாதவைகள் முதுகில் சுமந்தது பெருக்கல் குறியா அல்லது என்னைப்போல பிரியும் சாலையா
[யாருமே பிரசுரம் செய்ய இயலாத கவிதை. இதுக்குத்தான் வலைப்பூ இருக்கணும்கறது]
பரிச்சயமற்ற நகரின் பிரதான பெண்தெய்வத்தின் தரிசனம் வேண்டுமென்றாள் வயோதிகத்தால் நிதானமானவள் என் கைப்பிடித்து நடந்தாள் ஒரு முக்கிய நாற்சந்தியின் ஏதோ ஒரு திருப்பத்தில் திரண்டிருந்த மக்களுடன் கடவுளை நெருங்குகையில் வழி மாறியதை உணர்ந்து கொண்டாள் வேற்று மார்க்கத்தின் பிரத்தியேக இறைவனை குளிரூட்டும் பசுமையை வேறு மனிதர்களை சிறுமியின் ஆர்வத்துடன் பார்த்தாள். தவறுக்கு வருந்தி அவள் தெய்வத்திடம் கூட்டிச் செல்ல விழைந்தேன் பணிவாக மறுதலித்த அவள் கண்களில் மதங்களுக்கு முந்தைய கடவுளுக்கு முன் பிறந்த ஆதி மனுஷியின் ஆனந்தமும் அமைதியும் கண்டேன் பேருந்தில் திரும்புகையில் கடவுளர்கள் சிறைப்பட்டிருந்த கட்டிடங்களின் உச்சி விளக்குகள் அணைந்து எரிந்து அளவளாவுவது புரியத் தொடங்கியது அன்றுதான்