நான் : என்னப்பா, லக்கி 25-30 நிச்சயம் என்கிறார். இட்லி வடையும் அதேதான் சொல்றாரு. ஆனா, அம்மாவுக்கு அவ்வளவு கிடைக்கும் என்கிறார்.
அவர் : சான்சே இல்ல. தி.மு.க.கூட்டணி குறைஞ்சது 25.
நான் : நீங்க என்ன தி.மு.க.வா? இதுவரை நடுநிலை ஆசாமிகள் யாரும் தி.மு.க.வுக்கு இவ்வளவு கிடைக்கும்னு சொல்லவே இல்ல?
அவர் : உண்மைய சொன்னா உங்களுக்கு அப்படித் தெரியுது. ரிசல்டு வரட்டும்.
நான் : அப்படியில்ல. பலமான கூட்டணி. ஈழ அதரவு. அதனால எனெக்கென்னவோ இது ஒரு 20-20 மேட்ச் தான்னு தோணுது.
அவர் : பாப்போம்.
தேர்தல் முடிவு தினம்; காலை எட்டு மணி.
என் அலைபேசி ஒளிர்கிறது. அவரேதான்.
"ஹலோ, பாத்தீங்களா ரிசல்ட்ட?"
"இன்னும் சரியா தெரியலியே"
"தி.மு.க. அமோக வெற்றி. வை.கோ., பா.ம.க., இளங்கோவன், தங்கபாலு எல்லாரும் தோல்வி முகம்."
"வாவ். சூப்பர். நா அப்பவே சொன்னேன்ல. நா நினைத்த மாதிரியே, லக்கி சொன்ன மாதிரியே இவ்வளவு ஸ்ட்ராங் ஃ பெர்பார்மன்ஸ்.
அந்தப் பக்கம் பல் கடிக்கப்படும் சப்தம் கேட்டது. லைன் கட்..
இதற்கு மேல் அந்தப் பதிவரை மரியாதையுடன் விளிக்க முடியவில்லை. கொலை வெறியில் எனக்கு ஃபோன் பண்ணி உசுப்பேற்றிய புண்ணியவான் நம் எல்லோருக்கும் சகா தான்.
இப்போது வெற்றி நடை போடும் 32 கேள்விகள் குசும்பன் மூலம் என்னையும் தீண்டினாலும், நான் பங்கேற்க விருப்பமில்லாததை அவரிடன் சொன்னவுடன், பெரிது படுத்தாமல் 'லூஸ்ல விடுங்க' என்ற பெருந்தன்மைக்கு ஒரு நன்றி. எனக்குப் பொதுவாகவே இந்த me-me களில் அலர்ஜி. அதாவது 'நான் தனி' என்ற அகந்தையினால் இருக்கலாம்; அல்லது 'இதுவரை சொன்னதை விட நாம என்ன புதுசா சொல்லப் போறோம்' என்ற அடக்கமும் இருக்கலாம். இரண்டும் சந்திக்கும் ஒற்றைப்புள்ளியில் (ஆஹா, என்ன ஒரு பி.ந.நடை) இது வந்ததால், மறுத்து விட்டேன்.
அத்திரி நான் அறிந்தவரை ஒரு innocent kid. அவருக்குக் கோபம்/வருத்தம் என்றால், அதனை வெறும் சாமர்த்திய வார்த்தைகளால் மட்டும் எதிர்கொள்ளாமல் ஏன் அந்தக் கருத்து நிலவுகிறது என்று எல்லா பிரபலங்களும் எண்ணிப் பார்ப்பது நல்லது. ஏனென்றால், அத்திரி வலையுலகில் நிறைய பதிவர்களின் வருத்தத்தை ஒரு பிரதிநிதியாகச் சொல்லியிருப்பது போல எனக்குப் படுகிறது. ஆதியோ, கேபிளோ தவறு செய்ததாக எனக்குத் தோன்றாவிட்டாலும், ஒரு சுய சோதனை எல்லாருக்கும் நலம் பயக்கும். அதே சமயம், எல்லோரும் பொதுவாக சுட்டிக்காட்டும் 'குரூப்' மனப்பான்மை உண்மை என்றாலும் அதில் என்ன தவறு என்று புரியவில்லை. நான் கவனித்து வந்ததில், தண்ணீர் தனது நிலையை நாடுவது போல, ஒவ்வொரு பதிவரும் தனக்கு ஒத்திசையில் உள்ள சக பதிவர்களுடன் நட்பை நாடுவது நடந்து கொண்டேதான் இருக்கிறது. அலைவரிசைகள் வேறானால் சற்று சிக்கல் ஏற்படுகிறது.
சுவாரஸ்ய ஆட்கள் மற்ற சுவாரஸ்ய ஆசாமிகளுடனும், இலக்கியவாதிகள் சக ஹிருதயர்களுடனும், பெண் பதிவர்கள் ஏனைய பெண் பதிவர்களுடனும், கவிஞர்கள் பிற கவிஞர்களுடனும், மிக முக்கியமாக மொக்கைவாதிகள் எல்லா மொக்கைவாதிகளுடனும் ஒரு குழுமமாக செயல் படுவதை ஒரு ஒப்புக்கொள்ளக் கூடிய இயல்பாகவே நான் எடுத்துக் கொள்கிறேன்.
ரொம்ப சீரியசாகப் போகிறதா? சமயம் கிடைக்கும் போதெல்லாம் வண்ணதாசன் படிப்பதில் கொஞ்சமாவது உங்களுக்கு கொடுக்க வேண்டாமா? அய்யனாருக்கு (நம்ம அய்ஸ் இல்ல) எழுதும் கடிதத்தின் நடுவே இப்படி சில வரிகள்:
"சுஜாதாவை நான் பார்த்ததில்லை என்று சத்தியம் பண்ணினால்கூட யாரும் நம்ப மாட்டார்கள். சிரிப்பது சௌகரியமான பதிலாக இருக்கிறது. சுஜாதா பற்றி ஒரு தனி அத்தியாயம் எழுத வேண்டிய அளவுக்கு தற்காலத் தமிழ் உரைநடையில் அவருக்கு தாக்கம் இருக்கிறது. மிகச்சிறிய ஆயுதங்களுக்கு மிக நுட்பமான சாணை பிடிக்கிற காரியத்தை அவர் செய்திருக்கிறார். தோட்டக் கத்திரியால் மீசை வெட்டிக்கொண்டிருந்த உரைநடையின் பெருவிரலிலும், சுட்டு விரலிலும் சின்னஞ்சிறிய கத்திரியைக் கொடுத்து டிரிம் பண்ணினார். தமிழ் மீசைகள் ஒத்துக்கொள்ளாது போனாலும், கன்னம் இழைக்கிற தமிழ் மீசையின் இளங்காதலிகள் இதை ஒத்துக் கொள்வார்கள், அந்தரங்கமாகவேனும்.”
வண்ணதாசனுக்கு நன்றி. அவர் சொல்வது சரியா என்று பார்ப்போம் - இப்போது சுஜாதா:
உரைநடையை எளிதாக எழுதுவதற்கு ஒரு கழகம் ஆரம்பித்தால் அதற்கு நான் உடனே ஆயுள் சந்தா அனுப்புவேன். தற்போது தமிழில் கொஞ்சம் தீவிரமாகச் சிந்திப்பவர்கள் மிகச் சிக்கலாக எழுதுகிறார்கள்.அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று தெரிந்து கொள்வதற்கு திரும்பத் திரும்பப் படித்துப் படம் வரைந்து பாகங்களைக் குறிக்க வேண்டியிருக்கிறது. என்னைச் சராசரிக்குச் சற்று மேற்பட்ட வாசகனாகக் கொள்ளலாம். எனக்குப் புரியவில்லை என்றால், புரிவது கஷ்டமாக இருக்கிறது என்றால் இது யார் தவறு?
உதாரணம் சொல்கிறேன்: "இலக்கியத்தில் நேற்று இல்லாதிருந்து இன்று இக்கணம் புதிதாக நிகழ்ந்து சாத்தியமாகி உள்ள ஒரு பரிமாண விஸ்தாரம் புகைப்படக்கலை அல்லது தியேட்டரைச் சார்ந்துள்ள எல்லைகளிலிருந்து பிய்த்து எடுக்கப் பட்டதனாலும் விஸ்தாரம் சாத்தியமாகிவிட்ட இக்கணத்திலிருந்து அது இலக்கியத்தைச் சார்ந்த எல்லையாகி விடுகிறது."
இந்த வாக்கியம் ஒரு தீவிரமான பத்திரிகையில் சமீபத்தில் வெளியானது. அதை எழுதியவர் தீவிரமான ஒன்றைச் சொல்ல முயன்றிருக்கிறார். ஆனால் விஷயம் பஞ்சு படிந்து வாக்கியச் சிக்கலில் தன்னைத்தானே சுருட்டிக்கொண்டு இருக்கிறது. நத்தை போல் தொட்டால் உள்ளே போய்விடுகிறது. இந்தத் தீவிர எழுத்தாளர்களைவிட, "அடேய், பக்கெட் சாம்பார்" என்று நேர்முகமாகத் தாக்கும் 'சவுக்கடி' போன்ற பத்திரிகைகளின் வசன நடை மேல் என்று தோன்றுகிறது.
இன்னொரு தருணத்தில் இப்படி: ‘புதுக் கவிதை இப்போது இயக்க ரூபத்துக்கு வந்து விட்டது. 'கணையாழி' ஆசிரியர் ஒரு வருசத்துக்கு கவிதை சேர்ந்து விட்டது என்னும்போது சற்று பயமாகக் கூட இருக்கிறது. அதற்கு ஒரு காரணம் தபால் கார்டு .... சட்டென்று பத்து பைசா கொடுத்து வாங்கி ...
"தமிழக அரசு
ரூட் நம்பர் 21 இல்
அவளைப் பார்த்தபோது
அவள் உதட்டின் மேல்
மெலிதான மீசை"
என்று அந்த பஸ்சிலேயே எழுதிவிட்டு அருகில் உள்ள தபால் பெட்டியில் சேர்த்துவிடும் சௌகரியம் அதில் இருக்கிறது..’
சமீபங்களுக்குச் செல்வோமா?
படைப்புகள் ஆ.வி.யில் வரும் புண்ணியம் செய்தவர்கள்: வெண்பூ, கேபிள் சங்கர், ஆதி, ஜ்யோவ்ராம் மற்றும் வழக்கம் போல் நர்சிம். அனைவருக்கும் பாராட்டுகள்.
உயிரோசை, வார்த்தை, நவீன விருட்சம் போன்ற இலக்கியப் பத்திரிகைகளில் அடிக்கடி வெளிவரும் கவிதைகளுக்குச் சொந்தக்காரர்கள் நமக்கு பரிச்சயமான அக நாழிகை, யாத்ரா, லாவண்யா, முத்துவேல், நந்தா, மண்குதிரை, சேரல், பிராவின்ஸ்கா , ஆதவா, முத்துராமலிங்கம். இவர்கள் எல்லோருமே அவ்வளவு நன்றாக எழுதுகிறார்கள்.
பிரபல கவிதைகள்: யாத்ராவின் 'திருவினையாகாத முயற்சி' மற்றும் ஜ்யோவின் 'காற்றில் படபடக்கும் பக்கங்கள்'. யாத்ரா கவிதைக்கு அக நாழிகையின் பின்னூட்டம் சிறப்பு. ஜ்யோவ் கவிதை, அதைச் சிலாகித்த பை.காரன் பதிவு, அதைப் பகடி செய்த வளர் பதிவு, இவை அனைத்திலும் வந்த பின்னூட்டங்கள் அட்டகாசம்.
பரபரப்பு: 'உரையாடல்' அமைப்பு நிகழ்த்தும் சிறுகதைப் போட்டி. சாட்டிலும், மின்னஞ்சல்களிலும் கதை/கருத்துப் பரிமாறல்கள். இதுவரை கருத்து கேட்டு என்னிடம் பதினேழு கதைகள் வந்திருக்கு. ஒவ்வொரு கதையின் ஒரு பத்தியை வெட்டி, ஒட்டி ஒரு புது கதை நானே தயாரித்து வைத்திருக்கிறேன். மிகப் பிரமாதமான பின் நவீனக் கதையாக உருவாகியிருக்கிறது. உண்மையிலேயே பன்முகம் தெரிகிறது. மற்றவர்கள் பிழைத்துப் போகட்டும் என்று அதை அனுப்பப் போவதில்லை.
பெரிய ஆச்சரியம்: பிரபாகரன் பற்றிய என் பதிவுக்கு ஒரே நாளில் சுமார் 900 ஹிட்ஸ் வந்தது. தொடர்ந்து மூன்று நான்கு நாட்கள் ஹிட்ஸ் நிறைய இருந்தன. இப்போது ஜுரம் முற்றிலும் வடிந்து, சகஜ நிலை திரும்பி, ரசம் சாதம் சாப்பிட்டுக் கொண்டே இது வரை வந்த பதினான்கு பேருக்கு வணக்கம் சொல்லுகிறேன்.
ஏமாற்றம் : ஒரு வருடத்தில் ஒரு முறைகூட சூடான இடுகை இன்ன பிற என்று தமிழ்மணத்தின் இடது பக்க சமாச்சாரங்களில் என் பெயர் வராமல் இருந்த பெருமை, பிரபாகரனால் பாழாகிவிட்டது. வாசகர் பரிந்துரை/சூ.இடுகை எல்லாம் ஏதோ கெட்டவர்கள் பிரபலத்துகாகவோ அல்லது பிரபலங்கள் கெட்டதற்காகவோ செய்யும் காரியங்கள் என்று பொறாமையில் இருந்தேன். வெறும் நான்கு தினங்கள் நல்லவனாகி, மீண்டும் இப்போது பொறாமை வந்து விட்டது.
படபடப்பும் நிம்மதியும்: நண்பனின் உறவினர் குழந்தைக்கு உடல் நலம் பாதித்து, கொஞ்சம் சிக்கல் என்று முதலில் சொல்லப்பட்டதும், சரியான சிகிற்சை, நிறைய பேரின் பிரார்த்தனைகள் மூலமும் அது எல்லாம் சரியாகி இப்போது குழந்தை போகோ சேனல் பார்ப்பதும்.


.jpg)