என் பிரிய ஆகாஷ், உனக்கு நான் கடிதம் எழுதுவது எனக்கே வித்தியாசமாக இருக்கிறது. முதலிலேயே சொல்லி விடுகிறேன். இதுவே உனக்கு என் முதலும் கடைசியுமான கடிதம். நீ பதற்றப்...நீ எப்போதுமே என்னைப் பற்றி பதற்றப்பட்டதில்லையே. நிதானம் உன் சுபாவம். எனக்குத்தான் படபடப்பு மற்றும் வேகம். மும்பை-பூனா வேக சாலையில் நூற்று அறுபதில் உன் வயிற்றைக் கலக்கினேன். நகருக்குள் கூட அறுபதுக்குக் குறைவாகச் செல்வதற்கு பேசாமல் தூக்கு மாட்டிக் கொள்ளலாம் என்பது என் தீர்மானமான எண்ணம். இப்போது தான் கவனிக்கிறேன். பேச்சுவாக்கில் 'தூக்கு மாட்டிக் கொள்வதைப்' பற்றி நிறைய முறை குறிப்பிடுகிறேன். சரி சரி முகம் சுளிக்காதே. | |
| நமக்குள் எவ்வளவோ ஒற்றுமைகள் இருந்தாலும் ... நாம் எவ்வளவு வித்தியாசமான ஜோடி என்று எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறாயா? இருவரும் மார்வாடிக் குடும்பம். கொல்கத்தா. பொறியியல். பிறகு எம்.பி.ஏ. இரண்டு குடும்பமும் பிஜினஜ் (அப்படித்தானே உன் அப்பாவும், என் அப்பாவும் சொல்வார்கள்?). கொல்கத்தாவின் கட்டுப்பெட்டி வாழ்வு தந்த இறுக்கத்தில் மும்பை வந்தேன். வாவ், என்ன நகரம் இது. நான் தேடிய சுவர்க்க நகரம்! விருப்பம் போல் உடை உடுத்தலாம். இரவு இரண்டு மணிக்கு தனியே வரலாம். ஒரு குட்டி இந்தியா மட்டுமில்லாது, ஒரு சிறிய உலகமே இங்கு இருக்கிறது. உனக்கு ஓவியத்தில் விருப்பமில்லை என்று தெரியும். காலா கோடா திருவிழாவும், ஜகாங்கீர் ஆர்ட் காலரியும் எப்படி உன்னால் ரசிக்க முடியாமல் இருக்கிறது ஆகாஷ்? நீ இன்னமும் ஷாந்தி நிகேதனை விட்டு .... சரி அதை விடு. என்ன சொல்லிக் கொண்டிருந்தேன். ஹ்ம்ம். மும்பை. இந்த ஆறு வருடங்களில் ஐந்து வித்தியாசமான வேலைகள். இரண்டு வங்கிகள், ஒரு மியூச்சுவல் ஃபண்டு, ஒரு நியூஸ் வயர் நிறுவனம், ஒரு தொலைகாட்சி நிறுவனம் என்று களை கட்டும் வாய்ப்புகள். வித்தியாசமான மனிதர்கள். பல்வேறு பெண்கள். அதைவிட பல்வேறு ஆண்கள். நான் ஆண்களைப் பற்றிப் பேசும்போதெல்லாம் நீ வைத்துக் கொள்ளும் உம்மணா மூஞ்சியைப் பார்த்தால் முதலில் எரிச்சல் வந்தாலும், பிறகு சிரிப்பும் வரும். நான் என்னுடைய இரண்டாவது வேலையிலிருந்து மூன்றாவதற்குத் தாவும் தருவாயில் என் அப்பா அவசரமாக கொல்கத்தா வரும்படி கூப்பிட்ட போது சத்தியமாக உன்னைப் பார்க்கப் போகிறேன் என்றோ, அடுத்த இரண்டு தினங்களில் நமக்குத் திருமணம் ஆகப் போகிறது என்றோ கற்பனை பண்ணக்கூட முடியவில்லை. நான் உன்னிடம் போட்ட நிபந்தனைகளுக்கெல்லாம் நீ தலையாட்டிய போதே என் கனவு ராஜகுமாரன் ஒரு சேவகனாக மாறியிருந்ததைக் கண்டேன். உன்னுடைய தோற்றத்திற்கு நான் கொஞ்சம் அதிகம் என்பது நம் இருவருக்குமே தெரியும். அதனாலென்ன! பொதுவாகவே ஆண்களை விட பெண்கள் அழகாகவும், வசீகரமாகவும் இருக்கும் பொது விதியின் தனிப்பட்ட உதாரணங்கள் நாம் என்று விட்டு விட்டேன். ஆனால் நீ அதை அப்படிப் பார்க்கவில்லை என்று இப்போது புரிகிறது. இதை ஒரு மாபெரும் பிரச்சனையாக நீ பார்த்திருக்கிறாய். எப்போதிலிருந்து நீ என்னை சந்தேகிக்கத் துவங்கினாய் ஆகாஷ்? என் ஆபிஸ் பார்ட்டி முடிந்தவுடன் உன்னுடல் காரில் வராமல், விமலுடன் பைக்கில் வந்தேனே அன்று இரவா? பார்ட்டியில் வியர்க்க வியர்க்க ஆடிவிட்டு ஏ.சி. காரில் வருவதை விட, இயற்கையான வெளிக்காற்றில் எண்பது கி.மீ.யில் வருவதன் சுகம் உனக்குத் தெரியாது. பல முறை நீ தாமதமாக வரும்போது பக்கத்துக்கு வீட்டு குனால் (உனக்கு அவன் பெயர் இது வரை தெரியுமா?) எனக்கு டிவி பார்க்கவோ, இசை கேட்கவோ கம்பெனி கொடுத்ததை நீ பார்த்த பார்வை நிச்சயம் அந்த கல்லூரி மாணவனை எரித்திருக்கும். அசந்தர்ப்ப தருணங்களில் எத்தனை முறை என் அலுவலகம் வந்து நான் என்ன செய்கிறேன் என்று பார்த்திருக்கிறாய்? நிச்சயம் பாஸ் என்று ஒருவர் இருப்பார். அவருக்கு காபின் என்று ஒன்று இருக்கும். காபின் கண்ணாடிகளால் மட்டுமே உருவாக்கப்பட வேண்டும் என்னும் உன் பதட்டம் எனக்கு சிரிப்பைத்தான் தரும். வயதான பாஸ்கள் இளைமையாகக் காட்டிக் கொள்ள முதுகில் தட்டுவதும், தலையைக் மெல்ல தொடுவதும் இப்போதெல்லாம் சாதாரணம் என்று உனக்குப் புரியவில்லை ஆகாஷ். என் நண்பர்கள் அனைவருக்கும் நீ ஒரு சந்தேகப் பேர்வழி என்று தெரியும்.அவர்களின் பரிதாபம் என்னை மெல்ல மெல்ல ஆக்கிரமித்தது. சுய பச்சாதாபத்தில் குடிக்க ஆரம்பித்தேன். வாவ், மது என்பது எவ்வளவு மிருதுவான, அருமையான விஷயம். திடப் பொருள்கள் ஆண்கள் என்றால், திரவங்கள் பெண்கள் என்பேன். ஸ்டைல், கிரேஸ், எலிகன்ஸ் எல்லாம் திரவத்திற்குத் தான். நான் இப்படிப் பேசுவது கூட குடியின் உளறல் என்று நீ ஒதுக்கி விட்டாய். உனக்குத் தெரியுமா? கவிதை எழுத மென்போதையை விட சிறந்த தருணம் இல்லை ஆகாஷ். நான் கவிதை எழுதுவதையோ படிப்பதையோ கொஞ்சமும் சட்டை செய்யாமல், மழை இரவுகளில் சுடோக்கு, குறுக்கெழுத்து போடும் உன்னை அப்போதே சிரச்சேதம் செய்திருக்க வேண்டும். இப்போது பார், எனக்கு கொலை ஆர்வமும் எங்கிருந்தோ ஊற்றிலிருந்து கசிகிறது. எஜமான விசுவாசம் என்னும் காலாவதியான கோட்பாட்டில் சிக்கியிருக்கும் உன்னால் என்னளவு வேகமாக உன் அலுவகத்தில் வளர முடியவில்லை. உனக்குப் பதவி உயர்வு கிடைத்து ஐந்து வருடங்கள் ஆகி விட்டது என்று ஞாபகம் இருக்கிறதா? என்னுடைய பதவி உயர்வுகளுக்கு நீயாகவே வேறு கற்பிதங்கள் இட்டுக்கொண்டது எனக்கு எவ்வளவு வருத்தம் என்று உனக்குத் தெரியுமா? இதெல்லாம் பரவாயில்லை ஆகாஷ். போன வெள்ளி இரவு நீயே எனக்கு வோட்கா கலக்கித் தர முயன்ற போது உள்ளுணர்வு எச்சரிக்கை செய்தது. சரியாக மூழ்காத ஒரு வஸ்து, அந்த வோட்காவின் (பகார்டி ப்ரீசர் கலந்த) பர்கண்டி நிறத்தை ஒரு அசட்டு நிறத்திற்கு மாற்ற முயற்சி செய்து கொண்டிருந்தது. நான் கேட்ட கேள்விக்கு நீ என் கண்களைத் தவிர்த்து மழுப்பி பதில் சொன்ன போது சந்தேகம் ஊர்ஜிதமாகியது. வேறு வழியில்லாமல் நான் அந்தக் கண்ணாடி தம்ளரைத் தவற விட்டு, தப்பித்தேன். பிறகு நீ அடுத்த நாள் அலுவலகம் சென்ற பிறகு ஒரு மூலிகைத்தனமான பொடியைப் பார்த்தேன். வாசனை, 'இது சரியில்லை' என்றது. நம் கணினியில் நீ திரிந்த இடங்களை மேய்ந்தேன். ஆகாஷ், பரவாயில்லை. நீ என்னை 'ராணி போலப் பார்த்துக் கொள்கிறேன்' என்று என் அம்மாவிடம் சொல்வது ஓரளவு உண்மைதான். C34H47NO11 என்றால் நினைவில் இருக்கிறதா? அதன் மாலிகியூலின் படம் காப்சியூல்களாலான ஒரு ஆமை உருவம் போல இருக்கும். ஆம், விஷங்களின் ராணி என்னும் அகோநிடைன் என்னும் வேதியியல் வஸ்துவை எனக்காகச் சேமித்து வைத்திருக்கிறாய். நம்மை ஒருவர் கொலை செய்யும் அளவுக்கு வெறுப்பதை அறியும்போது முதல் கட்ட அதிர்ச்சி, கோபம், சிறிது பயம் எல்லாம் தாண்டி சுயபரிசோதனையில் நம் மீதே ஒரு ஏமாற்றம் வரும். எனக்கு இப்போது அப்படி இருக்கிறது ஆகாஷ். பிடிக்கவில்லை அல்லது ஆழ்ந்த வெறுப்பு என்றால் பேசலாம். முடியாவிட்டால் பிரிந்து விடலாமே. இன்னொரு உயிரை கொலை செய்வதென்பது ... திருப்ப முடியாத முடிவு என்று உனக்கு ஏன் புரியவில்லை? கண்ணே ஆகாஷ், உனக்கு அவ்வளவு சிரமம் தந்து விட்டேனா? நான் பிற ஆடவர்களுடன் பழகுவது உனக்கு அவ்வளவு துன்பம் தருகிறதா? நான் உண்மையிலேயே அவர்களிடம் படுக்கையைப் பகிர்ந்துகொண்டேன் என்று நம்பத் துவங்கி விட்டாய் என்பது புரிகிறது. அப்படி எல்லாம் இல்லை என்பதை நிருபிக்கும் கருவிகளோ, சோர்வற்ற மனமோ எனக்கும் இல்லை. ஒரு பேச்சுக்கு அது உண்மை என்றாலும், அது என் உயிரை எடுக்கும் தார்மீக உரிமையை உனக்குத் தருகிறதா? மிகவும் நைந்த மனதுடன் நேற்று மாலை அளவுக்கதிகமாகக் குடித்து விட்டேன். விமலுடன் பேசிக்கொண்டிருந்த போது உன் சந்தேகத்தை உண்மையாக்கினால் என்ன என்ற வெறி தோன்றியதை, விமல் மட்டுப் படுத்திவிட்டான். புழுக்கமான இரவில், அதைவிட புழுக்கமான மனதுடன் வண்டியை வெறிச்சோடி இருந்த நள்ளிரவுச் சாலையில் வெறியாக ஓட்டினேன். ஒரு திருப்பத்தில் நடைபாதை ஓரம் படுத்திருந்த கணவன் மனைவியைத் தவிர்க்கும் பதட்டத்தில் ஒரு பெண் குழந்தையை இடித்து விட்டேன். இலேசாகத் தான். அவள் பின் தலையில் இரத்தம். சிறு முனகலுடன் விழுந்த குழந்தை இறந்து விட்டாள் என்பது எனக்குப் புரிந்து விட்டது. மிக மிக ஆதி உணர்வான தப்பித்தல் மட்டும் என்னை ஆக்கிரமிக்க வண்டியில் விரைவாக ஏறி, வீடு வந்து சேர்ந்து விட்டேன். இப்போது கொலை செய்த குற்றவுணர்வு என்னை வியாபிக்கிறது. நுரையீரல் முழுதும் சுதந்திரம் என்ற காற்றை வாழ்நாள் முழுதும் சுவாசிக்க நினைத்திருந்த எனக்கு இப்போது மரணிப்பதன் அவசியம் தெரிகிறது. அந்தக் குழந்தையைக் கொன்ற பாவத்தின் சம்பளம் நிச்சயம் என்னளவில் மரணம் தான். தவறான முடிவு என்று தோன்றுகிறதா? பரவாயில்லை...எங்கும் எதிலும் வேகமான எனக்கு, இந்த முடிவும் அப்படியே இருக்கட்டும். இதை நான் எழுதுவது ஒரு நதிக்கரையில், என் மடிக்கணினியில். எந்த நதி? என்னைத் தாங்கிப் பிடித்துக்கொள்ளப் போகும் அன்னை நதி. இன்னும் சில நிமிடங்களில் நான் மிதப்பேன் ஆகாஷ். நிச்சயம் உன்னைப் பார்த்துக் கொண்டே. ஆம், ஆகாசத்தை வெறித்தபடி. உனக்கு நான் தரும் தண்டனை....மன்னிப்பு தான். ஒரு குறிப்பு: இரண்டு நாட்கள் கழித்து நம்ரதாவை - அவள் உடலை நர்மதை நதியின் ஒரு திருப்பத்தில், ஒரு மரவோரத்தில் கண்டு பிடித்தனர். அப்போது அவள் கண்கள் பிரதிபலித்த ஆகாயத்தில் இருந்த மேகம் நகராமல் இருந்தது (அதீதம் மின்னிதழில் பிரசுரம் ஆகியது) | |
Tuesday, February 14, 2012
ஒரு கொலை.. சில காரணங்கள்
Tuesday, January 10, 2012
அந்த நாள்
சூல் கொண்ட மேகங்களால்
தொலைந்து போன வானம்
மெல்ல விசும்புகிறது
வீசும் காற்றில்
தூரத்து மரங்கள்
கூச்சம் கொள்வதைக்
கண்ணாடிச் சுவர்கள்
விவரிக்கையிலேயே
வியர்க்கத் துவங்குகின்றன
நீண்ட வாலுடன்
வீங்கிய தலையுடன்
நீந்தியோடும் ஆயிரம் திவலைகளுக்கு
நான் நானாகும் முன்னே
ஓடிய ஓட்டத்தைச் சொல்கிறேன்
தோற்கும் திவலைகள் போலவே
அன்று வெல்லாதவைகள்
முதுகில் சுமந்தது
பெருக்கல் குறியா
அல்லது என்னைப்போல
பிரியும் சாலையா
[யாருமே பிரசுரம் செய்ய இயலாத கவிதை. இதுக்குத்தான் வலைப்பூ இருக்கணும்கறது]
Monday, January 2, 2012
தரிசனம்
பரிச்சயமற்ற நகரின்
பிரதான பெண்தெய்வத்தின்
தரிசனம் வேண்டுமென்றாள்
வயோதிகத்தால் நிதானமானவள்
என் கைப்பிடித்து நடந்தாள்
ஒரு முக்கிய நாற்சந்தியின்
ஏதோ ஒரு திருப்பத்தில்
திரண்டிருந்த மக்களுடன்
கடவுளை நெருங்குகையில்
வழி மாறியதை
உணர்ந்து கொண்டாள்
வேற்று மார்க்கத்தின்
பிரத்தியேக இறைவனை
குளிரூட்டும் பசுமையை
வேறு மனிதர்களை
சிறுமியின் ஆர்வத்துடன்
பார்த்தாள்.
தவறுக்கு வருந்தி
அவள் தெய்வத்திடம்
கூட்டிச் செல்ல விழைந்தேன்
பணிவாக மறுதலித்த
அவள் கண்களில்
மதங்களுக்கு முந்தைய
கடவுளுக்கு முன் பிறந்த
ஆதி மனுஷியின்
ஆனந்தமும் அமைதியும் கண்டேன்
பேருந்தில் திரும்புகையில்
கடவுளர்கள் சிறைப்பட்டிருந்த
கட்டிடங்களின் உச்சி விளக்குகள்
அணைந்து எரிந்து அளவளாவுவது
புரியத் தொடங்கியது அன்றுதான்
(நவீன விருட்சம் மின்னிதழில் பிரசுரம் ஆகியது)
Friday, July 22, 2011
மகத்தான
சின்ன மகள்
மேடையில் பாடுகிறாள்
அழகாகப் பாடும் வரிகளில்அம்மா இலயிப்பதில்லை
ஸ்வரம் பிறழும் போதெல்லாம்
தவறாமல் நெளிகிறாள்
பாடிய மற்ற குழந்தைகள்
அவள் நினைவிலேயே இல்லை
முடிவை அறிவிக்கும் முன்
பயந்திருக்கிறாள்
அறிவித்த பின்பு
அழத் துவங்குகிறாள்
ஆனந்தமோ அயர்ச்சியோ
அல்லது அழுபவள் மட்டும்
அறிந்த வேறெதுவோ
அம்மாவின் கைப்பிடித்து
உள்ளே நுழைந்த குழந்தை
அம்மாவைக் கைத்தாங்கி
அழைத்துச் செல்கையில்
வடகிழக்கில் பயணிக்கும்
பச்சை அம்பை
சில விரல்கள் வருடுகின்றன[நவீன விருட்சம் இதழில் பிரசுரம் ஆகியது]
Wednesday, June 29, 2011
எகிப்து - இரு நாட்கள்
சமீபத்தில் அலுவலக நிமித்தம் கெய்ரோ இரண்டரை நாட்கள் செல்ல நேரிட்டது. முதலில் செல்ல அச்சமாக இருந்தாலும் அதைத் தாண்டி, மடம், நாணம், பயிர்ப்பு என்று எல்லாவற்றையும் ஒரேயடியாகத் தாண்டி வந்து விட்டேன்.
கெய்ரோ - இது ஒரு வட இந்திய மாநகரமில்லை என்பதை நம்புவது சற்று கடினம். கிட்டத்தட்ட டில்லி மாதிரி உள்ளது. எண்பதுகளின் டில்லி எனலாம். நிறைய இடங்கள் இன்றைய மும்பை போலவும் இருக்கிறது. நகரின் பிரதான இடங்களில் நைல் நதி அமைதியாக ஊர்ந்து கொண்டிருக்கிறது. அல்லது நதிக் கரையைச் சுற்றி நகரம் அமைந்திருக்கிறது. வைரமுத்துவின் கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது:
நாம் மிகவும்
பொல்லாதவர்கள்;
மல்லிகைப் பூவில் கூட
ஜாதி பிரித்து விடுகிறோம்
நதிக்கரையில் பிறந்ததாம்
நாகரீகம்
நதிக்கரையில் பிறந்துமா
இத்துணை அழுக்கு!
உண்மைதான் இல்ல! இங்கும் மாலை வேளையில் மல்லிகைப்பூ மாலையாகத் தொடுக்கப்பட்டு விற்கிறார்கள். விற்பது ஆண்கள். அநியாயத்திற்கு அரபிக் பேசுகிறார்கள். முதல் நாள் இரவு ரொம்ப நேரம் டிவி பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு வார்த்தை கூட பிடிபடவில்லை. 'சுக்ர' என்று காதில் விழுந்த வார்த்தையை நன்றி சொல்ல உபயோகப்படுத்துகிறார்கள். இது கிட்டத்தட்ட நம்ம இந்தியின் (புதசெவி மன்னிக்க!) 'சுக்ரியா' (உருது மூலம்?) அருகில் உள்ளது. போலவே 'கல்லாஸ்' என்னும் வார்த்தையும். தமிழில் 'மேட்டர் க்ளோஸ்' என்று சொல்வோமே. அத்தகைய தருணங்களுக்கு 'கல்லாஸ்' சொல்கிறார்கள் என்று சுயபுரிந்து கொண்டிருக்கிறேன்.
எல்லா வித சேனல்களிலும் பார்த்தேன். ஒரே அரபிக் வெள்ளம். அந்தக்கால தூர்தர்ஷனின் ஆரம்பகால அசட்டுத்தனங்கள் அரபிக் சானலில் மிகுந்து இருப்பதில் ஒரு தெனாவட்டான திருப்தி கிடைத்தது. தொலைக்காட்சிப் பெண்கள் பெரும்பாலும் நல்ல நிறத்தில், உடல் வடிவம் பற்றியச் சற்றும் கவலையின்றி அனாயாசமாக நடிக்கிறார்கள். ஆண்கள் நம் பஞ்சாபிகளை விட ஆஜானுபாகுவாக, அவர்களை விட முகத்தில் ஒரு களையின்றி சிநேகமாகச் சிரிக்கிறார்கள். நான் இதுவரை பார்த்ததில் கெய்ரோவில் தான் அதிகமாகப் பெண்கள் கார் ஓட்டுகிறார்கள். ஒரு மாறுதலுக்கு ஆண்களைவிட நன்றாகவே ஓட்டுகிறார்கள்.
மல்லிகைப் புரட்சியின் வாசம் நன்றாகவே வீசுகிறது. ஏழை-பணக்காரர் இடைவெளியில் தோன்றிய பலநாள் கோபம் புரட்சியாக பரிணாமம் எடுத்ததை உணர முடிகிறது. கெய்ரோவில் பலருக்கு 'முஸ்லிம் சகோதரத்துவம்' என்னும் அமைப்பின் தீவிர மத நிலை அச்சமூட்டுகிறது. கிராமப்புற, கல்வியறிவு கிடைக்காத ஏழைகளிடம் இவர்களுக்குச் செல்வாக்கு மிகவும் அதிகமாம். எகிபத்தில் 15%-20% வரை கிருத்துவர்கள் என்பது எனக்கு ஆச்சரியத் தகவல்.
புரட்சி வெடித்த நகரின் பிரதான நாற்சந்தி வழியே சென்றேன். சம்பிரதாயமாக புகைப்படங்கள் (ஓடும் காருக்குள்ளிருந்து, பாதுகாப்பாக) எடுத்தேன்.
எகிப்தைப் பொறுத்தவரை எனக்கு இந்தப் புரட்சிக்காரர்களிடம் ஒரு நம்பிக்கை ஏற்படவில்லை. அதிகாரம் (ஸ்ஸப்பாஆ) ஒரு கும்பலிடமிருந்து புதுக் கூட்டத்திற்குச் செல்லப் போகிறது. மக்களுக்கும் - வெகுநாள் பார்த்துச் சலித்த முகத்திற்குப் பதில் புதிய கொள்ளையர்கள் முகங்கள் கொஞ்ச நாட்களாவது ஆர்வமூட்ட வேண்டும். அஷ்டே. (உயிரைப் பணயம் வைத்து புரட்சி செய்பவர்களை எவ்வளவு எளிதில் புறங்கையால் ஒதுக்க முடிகிறது என்னால்! - "தலைவா! அரசியலுக்கு வா" என்று ஏன் ஒருவரும் என்னைப் பார்த்து சொல்லவில்லை!)
ஆபிஸ் தோழி மாலையில் தானே காரோட்டி உணவகத்திற்கு அழைத்துச் சென்றாள். எனக்காக வெஜ் உணவகம் வேண்டாம். எங்க வேணாலும் போகலாம் என்றேன். ஈஸ்தர் முடிந்த பின்னும் அசைவம் உண்ணா நோன்பில் இருப்பதால் சைவ உணவு கிடைக்குமிடத்திற்குக் கூட்டிச் செல்வதாக அறிவித்தாள் அந்தக் கிருத்துவத்தோழி. நம்ம ஊரு போவன்டோவில் கொஞ்சம் புளியைக் கரைத்த மாதிரி செம்ம கூல் ட்ரின்க். அப்புறம் ரொட்டி, தொட்டுக் கொள்ள சட்னி மற்றும் துவையல். கூல் ட்ரின்க் பெயர் எவ்வ்ளாவ் கஷ்டப்பட்டாலும் வாயில் நுழையவில்லை. மற்றவை பெயர்கள் முறையே பலாஜி (ஏடு கொண்டல வாடா!), அழ்ழ்ஜிமா, ஹாரம்மஸ். "தமய்ய்யா" சாப்பிடுகிறாயா என்றபோது நம்ம தமன்னாவை நினைவு படுத்தியதால் சரி என்றேன். நம்ம ஊர் மசால் வடையில் மசாலா குறைத்து கொஞ்சம் கட்லெட்டையும் சேர்த்தால் எப்படி இருக்கும். அப்படி இருந்தது. தலைவியை நினைத்துக் கொண்டே சாப்பிட்டால் ஒப்பேத்தி விடலாம். வயிறு நிரம்பிய உற்சாகத்தில் அரபிக் பேசியே ஆக வேண்டும் என்ற வெறி ஏற்பட்டு 'அல்ஹழ்ழும்ம்மஸ் கரோஹஸ்' என்றேன். பதறியவளிடம் மறந்து போய் இந்தியாவின் மணிப்பூரி மொழி பேசிவிட்டேன் என்றேன்."நீ கவிதை எழுதுவது இந்த மொழியில் தானே" என்றாள். இதுவரை இல்லை. இனிமேல் நடக்கலாம் என்றேன். மேலே ஒன்றும் பேசாமல் பில்லுக்குப் பணம் கொடுத்தாள். அது!
சமீபத்தில் இந்தியாவில் கிரகணத்தில் சிக்கிக்கொண்ட சந்திரன் கெய்ரோ ஃபோர் சீசன்ஸ் ஹோட்டலின் மேல் திடீரென (ஆமாம் பாஸ், ஒரு ஹேய்னேகென் கேன் முடிப்பதற்குள்) தொங்கியது. எனக்கான பிரத்யேக செய்தி ஆல்டபரானிலிருந்து வந்ததைச் சொல்லியது. ஞாயிறு இங்கு வாரத்தின் முதல் நாள். வெள்ளி, சனி விடுமுறைகள். ஞாயிறு அலுவலகம் வெகு மந்தம். நாலு நாள் வேலை, மூன்று நாள் சாகவாசம் என்னும் டீலிங் எனக்கு ரொம்பவே பிடிக்கிறது. இரண்டு நாட்களும் நைல் நதிக்கரையோர டிஸ்கோக்களில் இருந்து "திம் தும் பம்" என்று ரகுமான்தனமான தாளங்கள். ரகுமான் இசை போலவே அந்தச் சமயத்திற்கு கால்களை ஆட்டிவிட்டு மனதில் தங்காத இசை. (இந்த வரிகள் பஸ்ஸில் எனக்குப் பிடித்த இரண்டு
'னோ' க்களுக்காக).
நகரின் பிரதான மனிதர் ஒருவரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. புரட்சியின் விளைவுகள், எதிர்காலம் பற்றி நிறைய கவலைகள், எதிர்ப்பார்ப்புகள் இருப்பதை ஒப்புக்கொண்டார். ஆனால், முத்தாய்பாக அவர் சொன்னது. "எகிப்திற்கு எப்போதுமே எதிர்காலம் பிரகாசம். பைபிள், குரான் இரண்டிலும் குறிப்பிடப்பட்டுள்ள பெருமைக்குரிய நாடு எமது".
இன்ஷால்லா & ஆமென். ஆபிரகாமிய மதங்களின் தாயாக எப்போதும் எகிப்து விளங்கட்டும்.
Wednesday, June 22, 2011
காலப்பிழை
கால இயந்திரத்தின்
தவறான பொத்தான்களை
அழுத்தி விட்டேன்
முன்னாலும் இல்லாமல்
பின்னாலும் செல்லாமல்
பக்கவாட்டில் நகர்வதால்
எங்கும் அசைவில்லை
அவளின் மூடிய
இமைகள் திறக்கவேயில்லை
இவனின் திறந்த
வாய் மூடவேயில்லை
இந்த ஊர் சூரியன்
45 பாகையிலேயே நிற்கிறான்
தேங்கியிருக்கும் நதியலை
தொங்கும் மழைநீரென
பிரம்மாண்ட வினாடியொன்றுள்
சிக்கிக்கொண்டேன்
தாழம்பூ மணம் கமழ
முளைக்கத் துவங்கிய
நான்காம் சிரத்திலிருந்து
ஆணைகள் பிறப்பிக்கப்பட
கையிலிருந்த களிமண்ணால்
படைக்கத் தொடங்கினேன்
முன் செய்த பிழைகளையும்
விடுபட்ட இன்னபிறவையும்
இம்முறையாவது ஈடுகட்டி
இருவரும் மனிதராக
(வெகு நாள்கள் முன் அகநாழிகையில் பிரசுரமானது)
Subscribe to:
Posts (Atom)










