Sunday, January 30, 2011

தமிழக மீனவர்களைக் காப்போம்




தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை சுடுவது இப்போதெல்லாம் தினசரி செய்தி ஆகிவிடும் அளவுக்கு நடந்து கொண்டிருக்கிறது.  ஈழப் போராட்டத்தின் உச்சத்தின் போதாவது மீனவர்கள் என்ற போர்வையில்  புலிகளுக்கு வேண்டியவற்றைக் கொண்டு சென்றவர்கள் என்று மீனவர்களைக் குருட்டுக் குற்றம் சாட்ட முடிந்தது. இன்றைய நிலையில் சிங்கள கடற்படை தமிழக மீனவர்களைச் சுட்டுத் தள்ளுவதற்கு 'தமிழன்' என்ற அடையாளத்தின் மீதான வன்மம் மற்றும் காழ்ப்புணர்வு மட்டுமே காரணமாக இருக்க முடியும். எந்த அளவுக்கு இந்தியா தாழ்வுடன் பணிவுடன் இந்தக் கொலைகளை அனுமதிக்கிறது என்று சிங்கள அரசு கணித்துக் கொண்டும் இருக்க வேண்டும். 


ஈழப் போராட்டத்திலேயே இந்திய தேசத்தின் 'பொது நலனை' முன்னிட்டு, சிங்கள அரசுடன் கைகோர்த்து ஈழத் தமிழர்களின் வாழ்வையும், இந்தியத் தமிழர்களின் உணர்வையும் ஒரே நேரத்தில் இந்தியா தூரக் கடாசியது. இப்போது இன்னும் ஒரு படி மேலே சென்று தமிழகத்தின் மீனவர்கள் சிங்களக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. பல்வேறு அரசியல் காரணங்களுக்காக மாநில அரசும் திடமான, தீவிரமான முடிவுகளை எடுக்க முன்வராதது இந்த எளிய மீனவ மக்களின் அவலமே. 


சரி, சாமானியர்களான நாம் என்ன செய்யலாம்? செய்ய முடியும்? ட்விட்டர் என்னும் ஊடகத்தின் மூலம் நிறைய தமிழர்கள் ஒரு குறிப்பிடத்தக்க அலையை, கவன ஈர்ப்பை கொண்டு வந்திருப்பதாகத் தெரிகிறது. நான் 'கீச்சு' (Twitter), 'முகப்புத்தகம்' (Facebook) போன்ற ஊடகங்களில் உறுப்பினராக இல்லாததால் தமிழ் இணையத்தில் இதன் தீவிரம் தெரிய வருவதற்கு எனக்கு தாமதம் ஆகியது. கூகிள் நிறுவனம் வழங்கும் 'பஸ்' (buzz) சேவையும் கிட்டத்தட்ட 'ட்விட்டர்', முகப்பத்தகம்' போன்ற வீச்சைக் கொண்டிருப்பதால், அங்கு நிறைய பதிவர்கள் மற்றும் பிற தமிழ் நண்பர்களின் ஒருமித்த வருத்தத்தைப் பகிர்ந்து கொள்ள முடிந்தது. 

http://www.savetnfisherman.org/ என்னும் இந்தச் சுட்டியில் சென்று பார்த்தால் மேலதிக விவரங்கள் கிடைக்கும். ட்விட்டரில் சமீபத்திய டவிட்கள் (திட்டுகள் என்றும் சொல்லலாம்) காணப் பெறலாம். அதே தளத்தில் தமிழக மீனவர்களின் அவல நிலை பற்றிய கட்டுரைகளும் படிக்க வாய்ப்பு இருக்கிறது. 


முதல் படியாக http://www.petitiononline.com/TNfisher/ இந்த சுட்டியில் சென்றால் 'இணைய மனு' வில் உங்கள் பெயரையும் பகிர்ந்து கொள்ள முடியும். இதனை எழுதும் போது 1695 பேர் இந்த மனுவில் தம் பெயர்களைச் சேர்த்திருக்கிறார்கள். நானும் நேற்று இணைந்து கொண்டேன் (எண் 627). நீங்களும் இந்த சுலபமான செயலைக் குறைந்த பட்சம் செய்யலாமே- ப்ளீஸ்? 

நம் பதிவுலகிலேயே பல்வேறு அரசியல் கட்சியில் முக்கியப் பிரமுகர்களை அறிந்தவர்கள் இருக்கிறார்கள். ஒரு இலட்சம் பேர் இல்லாவிட்டாலும், ஒரு ஐம்பதாயிரம் பேராவது இந்த இணைய மனுவில் கையெழுத்து போட்டால் அரசியல் கட்சிகள் இதன் தீவிரத்தை உணர முடியும். இணையம் என்ற ஊடகத்தின் வலிமையை அனைவரும் உணரச் செய்யும், உணர்ந்து கொள்ளும் வாய்ப்பாகவும் இது இருக்கும். 

அதனால் உங்களிடம் நான் கேட்பது இவை தான்:

1.   இந்த இணைய மனுவில் உங்கள் பெயரைச் சேர்த்துக்  கொள்ளுங்கள்
2.   நான் முதலில் குறிப்பிட்ட சுட்டிக்குச் (http://www.savetnfisherman.org/) சென்று தகவல் மற்றும் தற்போதைய நிலவரங்களை அறிந்து கொள்ளுங்கள் 
3.   உங்கள் நண்பர்களுக்கு மின்னஞ்சல் மூலம் இந்த அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் படி வேண்டுகோள் விடுங்கள். 
4.   ஊடகங்கள், அரசு மற்றும் அரசியல் கட்சி இவற்றுடன் நேரடித் தொடர்பு இருப்பவர்கள் இதனை அவர்கள் கவனத்திற்குக் கொண்டு வாருங்கள். 
5.   கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள் கொடுங்கோலர்களுக்கு ஒரு முடிவோ அல்லது நல்ல புத்தியோ வரவேண்டுமென்று பிரார்த்தனை செய்யுங்கள்.  
  நன்றி. 

Friday, October 8, 2010

கடற்கரையில் ஓர் காலை - மீள் பதிவு!


பழுப்பு நிறத்தில்
கறுப்புத் தீற்றல்களுடன்
வால் குழைத்துச்
சுற்றி வந்தது அவளை;
பூமியைச் சுற்றும் நிலாபோல
அவள் நகர்ந்தாலும்
சுற்றியபடியே தொடர்ந்தது;
அதிகாலையின் ஆரஞ்சும்
அலைகள் தெறித்த நீரும்
இந்த குட்டி சொர்க்கமும்
இரம்மியமாயின அவளுக்கு;
வாரியணைத்து எடுத்துச் செல்ல
அவளுக்கு விருப்பம்; அதற்கும்;
அவன் அந்தப்பக்கம் இந்தப்பக்கம்
தலையசைத்து விலகிப்போக
அவளும் அதுவும்
பார்த்துக் கொண்டனர் கடைசியாக
ஒன்றும் பேசாத அவள்
வாலாட்டாமல் தொடர்ந்தாள்
ஒன்றும் பேசாத அதுவும்
தொடர்ந்து வாலாட்டியது


(உயிரோசை 17.11.08 மின்னிதழில் பிரசுரமானது)

எழுத, படிக்க ஒன்றும் தோன்றாமல், பிடிக்காமல், வெறுமையின் உச்சகட்டமாக என் பழைய கவிதைகளையே படிக்கும் உன்மத்த நிலை ஏற்பட்டது. இதற்கு முந்தைய இடுகையை விட இது எவ்வளவோ தேவலாம் என்றும் தோன்றுகிறது :(.



முதன் முறை இடுகையாகப் போட்ட போது பின்னூட்டம் இட்டவர்கள் பட்டியலை இப்போது பார்க்கிறேன். வேலன்-மாதவ்-நர்சிம்-சந்தனமுல்லை-கார்க்கி என்று நல்ல நட்புகள். ஹ்ம்ம். காலம் எல்லாவற்றையும் எப்படிப் புரட்டிப் போடுகிறது! போலவே மீண்டும் மாற்றிப் போடுமா?  - இந்த மீள் பதிவைப் போல்!


எனக்கே சிரிப்பு வந்தாலும் எனக்கே சொல்லிக் கொள்கிறேன்..நீ ரொம்ப்ப்ப நல்லவன்டா...

மற்றபடி இப்போதைக்கு எழுதுவேன் என்று தோன்றவில்லை. காரணம் - எழுதும் ஆர்வம் வடிந்து விட்டதும், வாசிப்பு முற்றிலும் நின்று விட்டதும் தான். ஆதலினால் ...என்ஜாய் மாடி.
 

Tuesday, June 22, 2010

(நர்சிம்மைப்) பற்றியும் பற்றாமலும்

எவ்வளவு நல்ல விஷயமாக இருந்தாலும் ஒரு முடிவுக்கு வருவதென்பது தவிர்க்க முடியாதது தானே! அதனால்... நான் மீண்டும் எழுத வந்துவிட்டேன்.



முதலில் கனடா நாட்டுக்கு அலுவல் நிமித்தம் சென்றிருந்தேன். பிறகு விடுமுறைக்கு உத்தர்கான்ட் மாநிலத்தில் சில இடங்களுக்குச் சென்றிருந்தேன். அதனால் பல நாட்கள் தமிழ் இணையம் அருகிலேயே வர முடியாத இனிமையான சூழல். சாவகாசமான ஒரு சனி (என்ன ஒரு குறியீடு!) மாலையில் தமிழ்மணத்தைத் திறந்தால் ... மன்னிக்கவும் நெடி தாங்க முடியவில்லை. Pulp Fiction படம் பார்ப்பது போல் எந்தப் பதிவை முதலில் படிப்பது, எது அதற்கான எதிர்வினை என்று புரிந்து கொள்ள முடியாத சிக்கல். முதலில் ஆர்வமாக, பிறகு அதிர்ச்சியாக, மேலும் ஆபாசமாக முடிவில் ஆயாசமாக எல்லாவற்றையும் படித்து முடித்தேன்.


விரிவாகச் சொல்ல நிறைய இருந்தாலும், ஒன்றும் சொல்லாமல் இருப்பதே குறைந்த பாதிப்பு தருவதாக அமையும் என்று தோன்றுவதால் ஒன்றும் சொல்லப்போவதில்லை. கிடைக்கும் கெட்ட பெயர்களில் 'கள்ள மௌனம்' ஓரளவு பரவாயில்லை என்பதும் ஒரு காரணம். ஆயினும் ஒரு சில எண்ணங்களைச் சொல்ல வேண்டுமென்றும் தோன்றுவதால்:


நர்சிம் எழுதிய புனைவை மிக சிரமப்பட்டு தேடிக் கண்டுபிடித்துப் படித்தேன். மிகத் தரக் குறைவாக எழுதப்பட்டது. நிச்சயம் கண்டிக்கப் பட வேண்டிய எழுத்து. நான் அவருடைய 'நண்பர்கள்' பட்டியலில் இடம் பெறுபவன். ஆம், இன்றும் கூட. அதனால் அதற்கு உரிய அதிக பொறுப்பும் வெட்கமும் எனக்கும் இருக்கிறது. அவரிடம் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசினேன். எனது வருத்தத்தையும், வலுவான கண்டனங்களையும் தெரிவித்தேன். நான் பேசியபோது இருந்த நர்சிம் பெரிதாக சறுக்கியவர். ஆனால் அந்த வருத்தத்துடன் ஒரு நைந்து போன உள்ளத்தையும் உணர முடிந்தது.


வக்கிர எண்ணங்களே என்னிடம் இல்லை என்று சத்தியம் செய்யும் கனவான்களையும், நாரிமணிகளையும் நமஸ்கரித்து விட்டு விடுவோம். மீதமுள்ள பெரும்பாலோரான நமக்குள் ஆழ் மன வக்கிரங்கள் இருக்கத்தான் செய்யும் - பல சமயம் நமக்கே தெரியாமல். அவற்றை பிறரிடம் பேசும்போதே தவிர்த்து விடுதல் உசிதம். அதையும் மீறி பேசிவிட்டாலும், எழுதுவது என்பது ஒரு வழிப் பாதை. திரும்பப் பெற முடியாதது. அப்போது அதீத கவனம் தேவை. இவ்வாறு பேசுதல், பிறகு எழுதுதல் முதலிய காரியங்களுக்கு முன் வார்த்தைகளையும், வாக்கியங்களையும் சல்லடையில் போட்டு சலித்த பின்பே - குறிப்பாக கோபத்தின் வசத்தில் இருக்கையில் - வெளிக்கொணர்தல் கற்றோருக்கும், நாகரீகம் அறிந்தோருக்கும் அழகு. இந்த விஷயத்தில் நர்சிம் நம்ப முடியாத அளவுக்கு சறுக்கி இருக்கிறார். அதற்கான பலனாக வட்டியும் முதலுமாகப் பெற்றும் இருக்கிறார்.


மற்றபடி அவரை ரவுண்டு கட்டி அடித்த மற்ற எல்லா நல்லவர்களுக்கும்.... ஆத்மநாமின் இந்தக் கவிதையை சமர்ப்பிக்கிறேன்.

இந்த செருப்பைப்போல்
எத்தனைபேர் தேய்கிறார்களோ
இந்தக் குடையைப்போல்
எத்தனைபேர் பிழிந்தெடுக்கப்படுகிறார்களோ
இந்தச் சட்டையைப்போல்
எத்தனைபேர் கசங்குகிறார்களோ
அவர்கள் சார்பில்
உங்களுக்கு நன்றி


இத்துடனாவது விட்டதற்கு


சரிந்து விழுந்த பிரபலங்கள், நட்புக்குப் புது இலக்கணம் வகுத்தவர்கள் மற்றும் வெற்றி கொண்ட புரச்சி வீரர்கள் நடுவே நான் வியந்தது மணிகண்டனின் அபாரமான, பாரபட்சமற்ற பின்னூட்டங்கள், கல்வெட்டு அவர்களின் 'நச்' கருத்துகள் மற்றும் 'அதுசரி' என்னும் பதிவரின் நேர்மையான கண்டனங்களும், அதற்குப் பின்பான வாதங்களும்.


இப்போதெல்லாம் தமிழ் வலைகளைப் படித்தாலே என் முகம் பீதியில் வெளிறுவதைக் கண்ட என் சகோதரனிடம் பேசிக்கொண்டே என் மனைவி கொடுத்த காபி கோப்பையை வழக்கம் போல அலட்சியமாக இடது கையில் வாங்கப் போனவன், கண நேரத்தில் சுதாரித்துக்கொண்டு பணிவுடன் இருகைகளிலும் கோப்பையைப் பெற்றுக்கொண்டேன். 'இன்னாபா மேட்டரு; அளவுக்கதிகமா அண்ணிய கும்புடற?' என்ற சகோதரனிடம் ஆணாதிக்கவாதிகளின் அபாயகரமான நிலையைச் சொல்லி அங்கலாய்த்தேன். அவன் 'என்னது? காப்பி நீ போடுவதில்லையா? உங்க தமிழ்மணத்தில் போட்டுக் கொடுக்கட்டுமா உண்மைகளை' என்று பயமுறுத்துகிறான். ஆமாம், புடவைகளைத் துவைக்க சிறந்த சோப்பு ஏரியலா சர்ஃப் எக்ஸல்லா பாஸ்?

Friday, May 21, 2010

சா(ல்)மன் மீன்கள்

நகருக்குப் புறம் காட்டி
அன்பு செலுத்தும் காதலர்கள்
மற்றும்
காதல் செய்யும் அன்பர்கள்
வழிந்தோடும் காதலை
உள்வாங்கும் அலைகள்
காதலின் உத்வேகத்தில்
நிறம் மாறும் வானம்
முற்றிய காதல்
முழுதாய் வற்றியபின்
கடல் துறந்து
நகருள் நுழைந்து
நிரந்தரமாய் தொலையும்
சா(ல்)மன் மீன்கள்
புதிய காதலரின் அன்புக்கும்
அன்பர்களின் காதலுக்கும்
சில காதல் தோல்விகளுக்கும்
எப்போதும் தயாராக அலைகள்
அனைத்தையும் கண்காணிக்கும்
மௌனக் கண்ணாடியாக
வியாபித்திருக்கும் வானம்

(அகநாழிகை இதழில் பிரசுரம் ஆகியது)

Saturday, May 15, 2010

ஹாங்காங் பயணம்



கடந்த மார்ச் மாதம் சில நாட்கள் ஹாங்காங் சென்றிருந்தேன். முன்பே சென்றிருந்தாலும், தனியே அதுவும் வெளிநாட்டுப் பயணம் என்பதில் வரும் வழக்கமான அஜீரண உபாதைகள் ஒரு வாரம் முன்பே வரத் துவங்கியது. கனடாவில் இருந்து வரும் இரண்டு பெருசுகளுக்கு, வேறென்ன, மீண்டும் மீண்டும் பவர் பாயிண்ட் வித்தைதான். என்றைக்கு இதற்காகவே வெளியே துரத்தப் போகிறார்களோ !



பாஸ், பிசினஸ் கிளாஸ்.... என்றதும், 'என்னது? உன்னோட பவர் பாயிண்ட்ல உன்னோட சாதனைகள நீயே பார்க்கலையா? ஏதோ கள்ளத் தோணியில அனுப்பாம விமானத்தில் போவதே உனக்கெல்லாம் அதிகம்'னு துவங்கி அடுத்த பதினைந்து நிமிடங்கள் அன்பாக அர்ச்சனை செய்தார். 'சரி போறும், பி கேர்ஃபுல்' என்று என்னை நோக்கி ஆள்காட்டி விரல் காண்பித்து அவரை அடக்கி, ஐந்து மணிநேரப் பயணத்திற்கு தயார் ஆனேன்.




ஜெட் ஏர்வேஸ். வழமை நேர்த்தியில் ஜெட் ஏர்வேஸ் பெண்கள் (இந்த மாதிரி துவங்கும் ஒரு அருமையான கவிதை இருக்கிறது..விளம்பரங்கள் வேண்டாமென்று..மேலே சொல்லவில்லை). ஒரு சிக்கலும் இல்லாமல் ஹாங்காங் விமான நிலையம் சென்றடைந்தேன். சென்ற முறை பரிச்சயம் இல்லாததால் டாக்சியில் சென்று, எக்கச்சக்க செலவு செய்திருந்தேன். இம்முறை மெட்ரோவில் ஹாங்காங் ஸ்டேஷன் சென்று, அங்கிருந்து நான் தங்கும் ஹோட்டலுக்கு டாக்சியில் சென்று விட்டேன். ஹாங்காங் மெட்ரோ பன்னிரண்டு தடங்களில் வெவ்வேறு இடங்களுக்குச் செல்கின்றன. நம்பவே முடியாத திறன். சுத்தம்.




என்ன, எல்லா பெயர்களும் 'ஹிங் வாங் யூங்' என்பது போலவே இருக்கிறது. என்னுடைய தென்னிந்திய உச்சரிப்பில், அவர்கள் ஆங்கில அறிவில் - அவர்களுடன் பேசுவதைவிட - ஞாயிற்றுக் கிழமை மதியம் தூர்தர்ஷனில் வருவது போல் சைகை மொழியில் பேசுவது சுலபம் என்ற முடிவுக்கு இரு சாராரும் வந்திருந்தோம். அவர்கள் சொல்லித்தான் தெரிந்தது -'இந்தியர்கள் சரி என்பதற்கும், முடியாது என்பதற்கும் பக்கவாட்டிலேயே தலையை அசைக்கிறார்கள்' என்று. அவர்கள் எல்லோரும் 'ஓகே, எஸ்' போன்ற நேர்மறைகளுக்கு மேலும் கீழும் என்றும், 'முடியாது, இல்லை' போன்ற எதிர்மறைகளுக்குப் பக்கவாட்டிலும் தலையாட்டுகிறார்கள். அவங்களுக்குள்ளும் ஏதோ ஒண்ணு இருக்கு பாரேன்.




நகரெங்கும் கேள்வி கேட்காமல் நாற்பது அல்லது அறுபது மாடி கட்டிடங்களை நட்டு விடுகிறார்கள். சிங்கப்பூருடன் ஒப்பிடுகையில், இது இன்னும் பெரிய நகரம் என்று தோன்றுகிறது. சிங்கை நிச்சயம் இன்னும் சுத்தமாக இருக்கிறது. மற்றபடி இந்த இரு நகர்-நாடுகளுக்கிடையில் நிறைய ஒற்றுமைகள். தாலாட்டுப் பாடும் தொனியில் கேட்டுக் கொண்டேயிருக்கும் மாண்டரின் மொழி. சில சமயம் கேண்டனீஸ். எங்கு பார்த்தாலும் கடல் உணவு மையங்கள். தண்ணீரில் எது மிதந்தாலும், நீந்தினாலும், கிடந்தாலும் பிடித்து வந்து பச்சையாகவோ, வறுத்தோ, மற்ற சித்திரவத்தைகள் செய்தோ நாவில் நீரொழுகச் சப்புக் கொட்டிக்கொண்டே இரண்டு குச்சிகளால் சாப்பிட்டுத் தள்ளுகிறார்கள். ஆனால், உபசரிப்பில், எப்போதும் முகத்தில் தவழும் புன்சிரிப்பில் சீனர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. நான் அசைவம் சாப்பிடுவதில்லை என்று சொல்லியதும், சமையல் கலைஞரிடம் சொல்லி கிட்டத்தட்ட நம்ம ஊர் கொழுக்கட்டை போல் (உள்ளே காய்கறிகள், பருப்பு என்று நினைக்கிறேன்) நிறைய செய்து 'என்ஜாய் மாடி' என்று மாண்டரினில் சொன்னார்கள். இன்னும் கொஞ்சம் வேணுமா என்று கேட்டதற்கு, 'ஆம்' என்று ஒழுங்காக தலையை மேலும் கீழும் ஆட்டினேன்.




சைனாவுடன் இணைந்தாலும், பொருளாதாரம், கலாசாரம், கல்வி போன்ற பல விஷயங்களில் பழைய தனித்தன்மையுடனே ஹாங்காங் இன்னமும் இருக்கிறது. நாமெல்லாம் தனி சுதந்திர நாடுகள் என்று நம்பும் தைவான், திபெத் போன்ற இடங்களைப் பற்றி துளியும் உணர்ச்சி வசப்படாமல், வீட்டிலுள்ள குறும்புக்கார சிறுவனைப் பற்றி பேசுவது போல் பேசுகிறார்கள். ரொம்ப பழம்பெருமை பேசுவதில்லை. ஒருவேளை மெயின் லேன்ட் சீனாவில் பேசுவார்களோ என்னவோ! ஹாங்காங் வாசிகளே தயக்கமின்றி ஒப்புக்கொள்ளும் விஷயம் - அடுத்த நூற்றாண்டின் நகரம் ஷாங்காய் என்று. அப்படி இருக்கிறதாம்.

நிறைய பேருக்கு ஆண்டனி சாங், அலெக்ஸ் சாய், ஜான் சாங் என்றெல்லாம் பெயர் இருந்தாலும், அவர்கள் எந்த மதத்தையும் பின்பற்றுவதில்லை. ஆங்கில, ஐரோப்பியர்கள் நிமித்தம் குழந்தை பிறந்த உடனேயே தன் ஊர்ப் பெயருடன் ஒரு கிருத்துவப் பெயரையும் முன்னால் போட்டுக் கொள்வதாக அறிந்தேன். ஆனால் நிறைய பேர் தேவாலயங்களுக்குச் செல்வதையும் கண்டேன். மற்றும் சிலர் Tao என்னும் மதம் தமது மதம் என்றார்கள். இந்தியாவில் ஏன் இத்தனை விடுமுறைகள் என்று எக்கச்சக்க வயிற்றெரிச்சலுடன் கேட்டார்கள். எவ்வளவு சண்டை போட்டாலும், எல்லா மதப் பண்டிகைகளுக்கும் எல்லோரும் விடுமுறை கேட்போம் என்றேன்.


 இரண்டு கனடா கனவான்களும் 'சரி ஏதோ சொல்ல வருகிறான். விட்டுப் பிடிப்போம்' என்று புரியாத ஆங்கிலத்தில் சொல்லி கை குலுக்கினார்கள். இந்த முறையும் தப்பிச்சிட்ட - எப்படிரா மாதவா என்று சொல்லியவாறே ஊரைப் பார்க்க மெட்ரோவைப் பிடித்தேன். திரும்பி வருகையில்தான் நிதானமாக ஹாங்காங் ஏர்போர்ட் வளாகத்தை நோட்டம் விட்டேன். பெரிய, நேர்த்தியான விமான நிலையம். குறிப்பிடும்படியான நிகழ்சிகள் ஏதுமின்றி ஊர் வந்து சேர்ந்தேன்.




மும்பை விமான நிலையம். அதற்கு அருகாமையில் ஒரு ஜோபட்பட்டி (நம்ம ஊரு சேரி). எங்கும் புழுதி, சாக்கடை, வாகனப் புகை, நெரிசல். ஆனாலும் நம் நாடு. slumdog என்றாலும் millionaire தான். மன்னிக்கவும். சேரிநாய் என்றாலும் கோடீஸ்வரன். சரியா ரானின் ?

Monday, May 10, 2010

அபயனுக்காக ஒரு கவிதை

கண்ணாமூச்சி

அவனுக்கும் அவளுக்கும்

கண்ணாமூச்சியில் அதிகப் பிரியம்
அங்காடியில் காணாமல் போனவளை
வைர மாலைக்குள் கண்டெடுக்கிறான்
வீட்டுக்குள்ளிருந்தே மாயமானவனை
அறுபத்தாறாம் பக்கத்திலிருந்தோ
நீள்சதுர கண்ணாடியின்
இருபது மூன்றாம் தடத்திலிருந்தோ
மீள் கொணர்வாள்.
ஒருமுறை அவள் ஒரு பாடலுக்குள்;
ஒருமுறை அவன் ஒரு ஆடலுக்குள்;
சில முறை அவள் ஒப்பனைக்குள்
பல முறை அவன் குறுந்தகடுக்குள்
நேற்று பார்த்தபோது
எதிரெதிரே நின்றாலும்
எதையோ தேடினார்கள்
கண்ணாமூச்சியைத்
தொலைத்து விட்டதாகத்
தெரிந்து கொள்ள முடிகிறது
இவனோ இவளோ
எதிர்பாராத இடத்தில்
கண்டுபிடிக்கப் பட்டார்களோ
என்ற பதட்டம் மெல்லப்
பரவுகிறது இப்போது

(அபயன் நன்றாக, வேகமாகச் சாப்பிடுவதற்காக எழுதியது. அபயன் யாரென்பது, அவன் தந்தை பின்னூட்டம் போடும் போது தெரிய வரலாம்)