Saturday, April 11, 2009

மும்பை, மதுரை - (எதை) பற்றியும் பற்றாமலும் .... (11th April '09)


பம்பாயில் மக்கள் எப்போதும் வரிசையில் காத்துக் கிடக்கிறார்கள்: வாக்களிக்க, ஒரு பிளாட்டை அடைய, ஒரு வேலை கிடைக்க, நாட்டை விட்டு வெளியேற, ரயில்வே முன்பதிவு செய்ய, ஒரு போன் பண்ண, கழிவறை செல்ல. நீங்கள் வரிசையில் முன்னேறி ஒருவழியாக முதலிடத்தில் நிற்கும் தருணத்தில், உங்களுக்குப் பின் நின்று கொண்டிருக்கும் நூறு, ஆயிரம், கோடி பேர்களுக்கு அசௌகரியம் தருவதாக நீங்கள் நினைவுறுத்தப் படுவீர்கள் - 'சீக்கிரம், சீக்கிரம் - உன் வேலைய முடிப்பா'

நீங்கள் இரண்டாவதாக நிற்பவராக இருந்தால், முதலில் நிற்பவருக்குப் பின்னால் ஒருபோதும் நிற்கக்கூடாது; அவருக்குப் பக்கத்தில் தான் நிற்க வேண்டும் - ஏதோ அவருடனே இருப்பவர் போல. அப்போதுதான், அவர் நகரும் போதே, ஒரு இலாவகமான பக்கவாட்டு எட்டில் நீங்கள் முதலிடத்தைப் பிடிக்க முடியும்.

*********************

தண்ணீர் கிடைக்காத, கழிவறை இல்லாத சேரியில் வசிக்கும் ஒருவன் தான் இங்கு வந்திருப்பதன் காரணங்களை விவரிக்கிறான் - 'பம்பாய் ஒரு தங்கப் பறவை'. அதே சமயம் ஒபெராய் ஹோட்டலின் பே வியு பாரில் உட்கார்ந்து கொண்டு மும்பைவாசியின் சராசரி ஆண்டு வருமானத்தைபோல் ஒன்றரை மடங்கு விலையில் Dom P'erignon பாட்டில் ஒன்றை ஆர்டர் செய்யவும் முடியும்.

இன்னொருவர் இந்த நகரத்தை வேறு விதமாக வர்ணிக்கிறார் "இங்கு யாரும் பசியால் சாவதில்லை". முற்றிலும் உண்மைதான். இந்தியாவின் மற்ற இடங்களில் இன்னமும் பலர் பசியில் இறக்கையில், மும்பையில் 'ஒல்லியாவதற்கான' வைத்திய சாலைகள் நூற்றுக் கணக்கில் உள்ளன. எல்லாத் தட்டு மக்களிலும் 'ஒல்லியாக' முயற்சிக்கும் மக்கள் 'பருமனாக' முயற்சிப்பவர்களை விட மிக அதிகமாக இருக்கிறார்கள்.

[சுகேது மேத்தா எழுதியிருக்கும் 'மாக்சிமம் சிடி' படிக்கத் துவங்கி இருக்கிறேன். (ஆமாம், இப்போது தான் படிக்கிறேன்). அவ்வப்போது இப்படி அவிழ்த்து விடுவேன்.]

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

'இன்று மதுரையில் திராவிட இயக்கப் பவளவிழா. ஒலி பெருக்கி நெரிசலில் முழு மதுரையும் நசுங்கிப் போய் இருக்கிறது. "இந்தப் படை போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா" என்று உச்சி வெய்யிலில் கத்திக் கொண்டு போகிறார்கள். இவர்களுடைய பெண்டாட்டி பிள்ளைகள் அவரவர்கள் இடத்தில் எப்படி இருக்கிறார்களோ! ஒருவேளை இரண்டு நாள் நிம்மதியாகக் கூட அவர்கள் இருக்கலாம்'

பரிசலின் அன்பை என்னவென்று சொல்வது! அவர் பதிவில் குறிப்பிட்டபடி நெசமாலுமே ஒரு புத்தகம் வந்தது. ஆனால் அவர் சொன்ன 'கல்யாண்ஜியின் கடிதங்கள்' இல்லை. 'வண்ணதாசன் கடிதங்கள்' என்று இருந்தது. சரி, இவ்வளவு கஷ்டப் பட்டு அனுப்பியவருக்கு ஒரு போன் போட்டு 'புக் வந்துது...ஆனா ..' என்று விவரித்தேன். அந்தப் பக்கம் இரண்டு சப்தங்கள் கேட்டது. ஒரு கை தலையில் அடித்துக் கொள்வதையும், சில பற்கள் மற்ற சில பற்களோடு சண்டையிடுவதையும். ஒரு வேளை கோவமா இருக்குமோ என்று சந்தேகம் வந்ததால் லைன கட் செய்து விட்டேன். அந்த பயத்தில் பரிசல் கொடுத்த 'அரச கட்டளையைச்' செவ்வனே செய்து முடித்த செல்வாவுக்குப் போன் போடும் உத்தேசத்தையும் தள்ளிப்போட்டு விட்டேன்.

உங்கள் இருவருக்கும் நன்றிகள் பல. மேலே உள்ள மதுரை பற்றிய வரிகள் வண்ணதாசனின் கடிதங்களில் இருந்து எடுத்தவை. இன்று பரிசலிடம் பேசும்போது 'உரைநடையில் கவிதை வடிவம் இருப்பதைப் படித்தது முதன்முதல் கல்யாண்ஜியிடம்தான்' என்றார். மறுக்க முடியாது என்பது கீழ் காணும் வரிகளில் புரியும்.

'நாம் விபத்துக்குள்ளாகி இருக்கிறோம். எக்கிய என் முதுகு வளைவுக்குக் கீழ் பிசுபிசுத்து ஓடுகிற ரத்தம் யாருடையது என்று தெரியவில்லை. சற்று முன்பு வரை நான் விரல் கோர்த்து உதட்டில் ஒற்றி முத்திய மனுஷியின் கை பிய்ந்து சிதறி வாசலோரம் நிறுத்தப்பட்டிருக்கிற இரண்டு சக்கர வாகனத்தின் பின் பைதாக் கம்பிகளில் செருகி இருக்கிறது. பூந்தொட்டியின் உடைசலுடன் சரிந்திருக்கிற செடியில் காக்கிச் சட்டைக் கிழிசலும், உத்தியோகப் பித்தளை வில்லையும். சாக்லேட் நிற இசைநாடா, ஒரு சிக்கலான தாவரம் போல காற்றில் அலைந்து கொண்டு கிடக்கிறது. பூனைக்குட்டியின் குரல் கேட்கிறது. வெகு தொலைவில் ஜென்ம தூரத்துக்கு அப்பால் ஊரில் இருக்கிற 'பூனை ஆச்சி' வீடு ஞாபகமும், இடையில் உள்ள சுவருக்கு இந்தப் பக்கம் எங்கள் வீட்டுத் தோட்டத்தில் இருக்கிற தங்க அரளி மரமும் அந்தப் பூனைக்குட்டிக் குரலில் கசிகின்றன. என் மேல் மஞ்சள் நிறமான தங்க அரளிப் பூக்கள்.’

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

சரி, நாமளும் 'வாசிப்பாளர்'தான்னு காண்பித்துக் கொண்டாயிற்று. அடுத்த ஐட்டம் சுரேஷ் கண்ணனின் 'எப்படி' பதிவு. அவரே எதிர் பார்த்திருக்க மாட்டார் இவ்வளவு எதிர்வினை வரும் என்று. சில காட்டமான பின்னூட்டங்கள். சில சாதகமான பின்னூட்டங்களைக் கலாய்த்து மேலும் சில பின்னூட்டங்கள் என்று ஒரே அல்லோல கல்லோலம் (சரிதானே வேலன்?). இந்தப் பதிவைக் கடுமையாகச் சாடிய இன்னொரு பிரபலத்தின் பதிவு. அங்கு எதிர்பார்த்தது போலவே நிறைய ஆதரவுக் குரல்கள்.

இந்தக் களேபரத்தில் எனக்குப் பூடகமாக இரண்டு குட்டுகள். ஒன்று நானும் அறிவு ஜீவியாக ஆசைப்படுபவன் என்ற ஐ.டி.கார்டு கிடைத்தது. இன்னொன்று 'யோவ், நான் கிராமர் மிஸ்டேக் பண்ணலாம். ஆனா அதை நீ சுட்டிக் காட்டுகிறாய். சுட்டிக் காட்டிய விடயம் தவறல்ல. சுட்டிக் காட்டும் மனோபாவம் வருத்தம் தருகிறது. நீ என்ன கடவுளா/பூசாரியா' என்னும் விதமாக ஒரு பின்னூட்டம். ம்ம், அவர் கருத்திலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. இனிமேல் யாராவது 'நண்பா, சந்திப் பிழை, வல்லினம் இல்லை, மெல்லினம்' என்ற ரேஞ்சில் பின்னூட்டம் போடுங்க ..... நானும் 'நன்றி நண்பா; மீண்டும் வருக' போட்டு விடுகிறேன் :)


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அடுத்த பரிதாபம் நம்ம சாலமன் (ஸ்பெல்லிங் சரிதானே) முத்தையா கடிதங்கள். இருவரையும் கூவம் நதியின் நடுவிலிருந்து யாரும் விடுவிக்காமல் மூச்சு முட்டி Asphyxiation இல் மரித்து விடுவார்களோ என்று அச்சமாக இருந்தது. ஒரு மூத்த பதிவரின் கடமையை செவ்வனே செய்த பரிசலுக்கு ஒரு நன்றி. அதிஷா எழுதியது நிச்சயமாக வேறு தளம். நன்றாகவே இருந்தது. ஆயினும் அந்தப் பதிவு ஒரு தொடரின் ஒரு பாகமாக இல்லாமல் தனிப் பதிவாக இருந்திருந்தால் one of his best pieces என்று நிச்சயம் உணர்ந்திருப்பேன். Somehow felt the post was not in keeping with the spirit of the meme.

சரி சச்சரவுகள் போதும். இனி... வேற என்ன தப்பிக்க முடியாது... கவிதை தான்.


குழந்தையின் வரிகள்


முதல் வரியிலிருந்து
ஒரு பட்டாம் பூச்சி பறந்தது

இரண்டாம் வரியில்
ஒளிர்ந்தது வானவில்

மூன்றாம் நான்காம் வரிகளில்
ஒரு மூங்கில் சாதூர்யத்துடன்
புல்லாங்குழல் இசைத்தது

ஐந்தாம் வரியின் மேல்
தூறல் நடனமிட்டது
இசையின் லயத்திற்கேற்ப

ஆறு ஏழு மற்றும் எட்டாம் வரிகளில்
மான்களின் ஓட்டமும்
மயில்களின் ஆட்டமும்
வனத்தின் பேச்சும்
காண கேட்கக் கிடைத்தன

ஒன்பதாம் வரியை
துடைத்து விட்டுப் போனது
ஒரு மேகம்

பத்தாம் வரியில்
ஒரு பெரியவர் சிதையூட்டப்பட்டு
எரிந்து கொண்டிருந்தார்

வரி பதினொன்றில்
பிறந்த குழந்தை
தான் எழுதிய இந்த கவிதையை
முதல் வரியிலிருந்து
வாசித்துப் பார்க்க
குழந்தைக்குப் பெயர் வைத்த
பட்டாம் பூச்சி
சுற்றிக் கொண்டிருந்தது
பெயரை சொல்லியபடி


கவிஞரைக் கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்.

27 comments:

na.jothi said...

பரிசலோட முடிந்ததில் எனக்கு வருத்தம்
தான்
இன்னும் நிறைய போ்கிட்ட இருந்து
எதிர் பாத்துகிட்டு இருந்தேன்

selventhiran said...

கல்யாண்ஜியும் வண்ணதாசனும் ஓருவரே...கவிதைகளைக் கல்யாண்ஜி என்ற பெயரிலும், உரைநடையை வண்ணதாசன் என்ற பெயரிலும் எழுதி வருகிறார். இந்தக் காரணத்திற்காகத்தான் பரிசல் தலையிலடித்துக்கொண்டாரா?!

மணிகண்டன் said...

நிறைய சந்தி பிழைகள், வல்லினம் மெல்லினம் தகராறு இருக்கு இந்த பதிவுல. கொஞ்சம் கவனம் செலுத்துங்க.

கவிதை யார் எழுதியதா ? ஒண்ணு ரெண்டு போட்டு கவிதை எழுதப்பட்டு இருக்கு ! ஏதாவது மறை கழண்ட கேஸா இருக்கும் !

குடந்தை அன்புமணி said...

கல்யான்ஜியும், வண்ணதாசனும் ஒருவர்தான். எழுத்தாளர், இலக்கிய விமர்சகர் தி.க.சி- யின் புதல்வர்.

எம்.எம்.அப்துல்லா said...

என்னவோ தெரியல, எப்பவும் போல படிச்சுட்டு போகணும்னு இல்லாம இன்னைக்கு பின்னூட்டம் போடத் தோணுது :)

Anonymous said...

அனுஜன்யா,

சுகேது மேத்தாவின் அந்தப் புத்தகம் மிகச்சிறந்த ஒன்று. அதை எழுத அவர் எடுத்துக் கொண்ட காலமும் பிரயாசையும் அந்தப் புத்தகத்தின் தரத்திலேயே தெரியும். உங்களைப் போல மும்பையிலேயே வசிப்பவர்கள் அதைபற்றிய நல்ல விமர்சனம் எழுதினால் மகிழ்வேன்.

ஜெயின்கள் பழக்கவழக்கம், காபேரே பெண் ஒருத்தியின் வாழ்க்கை, சஞ்சய்தத், நேர்மையான் போலிஸ் அதிகாரி, பால் தாக்கரே என அனைத்துத் தரப்பையும் குறித்த ஒரு தீர்க்கமான பார்வை அந்த நூல்.

உங்கள் விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன்.

அத்திரி said...

எல்லா மாநகர்லயும் மக்கள் காத்துக்கிட்டுதான் இருக்காங்க.அவ்வ்வ்

நிஜமா நல்லவன் said...

/எம்.எம்.அப்துல்லா said...

என்னவோ தெரியல, எப்பவும் போல படிச்சுட்டு போகணும்னு இல்லாம இன்னைக்கு பின்னூட்டம் போடத் தோணுது :)/


இந்த பின்னூட்டம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ஏன்னா எனக்கு அப்படித்தான் தோணுது:)

நிஜமா நல்லவன் said...

/கவிஞரைக் கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்./

http://raajaachandrasekar.blogspot.com/2009/01/blog-post_28.html

சென்ஷி said...

//ஒன்று நானும் அறிவு ஜீவியாக ஆசைப்படுபவன் என்ற ஐ.டி.கார்டு கிடைத்தது. //

அச்சச்சோ. நான் அல்ரெடி உங்களை அறிவுஜீவி லிஸ்ட்ல்தான் வச்சிருக்கேன். இப்ப என்ன செய்யறது :-)

கார்க்கிபவா said...

ராஜாசந்திரசேகர் கவிதைதானே? அவரின்

உடல் திமிர
கை நீட்டி உங்களை
குற்றம் சொல்லும்
என் விரல் நுனியில்
தொங்கிக் கொண்டிருக்கிறேன் நான்
உங்களுக்குத் தெரியாத
ஒரு குற்றமாக
அல்லது
குற்றவாளியா

என்ற கவிதை என்னை வைத்துதான் எழுதியிருக்கார்

Ashok D said...

Maximum City
Interesting

காமராஜ் said...

வடகரைவேலன் போலவே எனக்கும் மிகுந்த ஆசை.
எண்பதுகளில் நான் பார்த்த பம்பாய். நண்பர்கள்
சொல்லக்கேட்ட விவரணை. 2007 ல் சர்வதேச
ஆவணக்குறும்படப் போட்டியில் பார்த்த " ஏழு தீவுகள்
இதையெல்லாம் தாண்டி, அந்த தாராவியிலிருந்து
திரும்பி ஊருக்குள் நுழைகிற சாதாரண ஜனங்களின்
பின்னால் ஒளிருகிற ஒளிவட்டம். அப்புறம் அனுஜன்யா

Cable சங்கர் said...

நன்று..

யாத்ரா said...

இந்தத் தொடர் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

வண்ணதாசன் அவர்களைப் படித்தாலே ஒரு வாரத்திற்கு மனதிற்குள் விடாது மழை பெய்து கொண்டிருக்கும், தானாக கண்கள் நனையும், நனைவது துயரத்தில் மட்டும் அல்ல, வாழ்வின் அற்புத கணங்களுக்கு முன்னால் வார்த்தைகளற்று ஆனந்தப் பரவசத்தில் உள்ளம் பொங்குமே, அந்த வகையான கண்ணீர் அது,

இந்த மனிதர் எனக்கு தந்தையாகவோ சகோதரராகவோ இருந்திருக்கலாகாதா என ஏங்கியிருக்கிறேன், குறைந்தபட்சம் அவர் வாழும் ஊரிலாவது வாழாமல் போனோமே என்ற ஆதங்கம் உண்டு எனக்குள், என் வாழ்நாளில் அவரை சந்தித்து அவர் கைகளுக்கு முத்தமிட வேண்டும் என்பது என் ஆசை,

ஆரம்பத்தில் என் நான்காவது பதிவாக ஒரு நான்கு பக்கத்திற்கு வண்ணதாசன் எழுத்துக்கள் என்ற தலைப்பில் google transliteration இல் எழுதிய பதிவு நொடியில் கணினி கோளாறில் அழிந்து போனது.

உணர்ச்சி மிகுதியில் நிறைய பேசிவிட்டேன்,மன்னிக்கவும்,தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

சந்தியா ( புதுமைப்பித்தன் ) பதிப்பகத்தில் இவரது அனைத்து புத்தகங்களும் கிடைக்கும்,அனைத்தும் மேற்குறிப்பிட்ட வாசிப்பனுபவங்களையே நல்கியது.

வண்ணதாசன் சிறுகதைகள் முழு தொகுப்பு
கிருஷ்ணன் வைத்த வீடு(சிறுகதைகள்)
பெய்தலும் ஓய்தலும்(சிறுகதைகள்)
கல்யாண்ஜி கவிதைகள்
நிலாப்பார்த்தல்(கவிதைகள்)
இன்னொரு கேளிச்சித்திரம்(கவிதைகள்)
அகம் புறம் (விகடன் பத்தி)

வண்ணதாசன் என்ற பெயரை இங்கு படித்தவுடன் இவ்வளவையும் தங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் போல் தோன்றியது, வண்ணதாசன் அவர்கள் மழை.

இவரைப் பற்றி இன்னும் பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

அ.மு.செய்யது said...

அந்த கடைசி கவிதை தாறு மாறு,,

யாருங்க அது ????

மேவி... said...

present sir.........

பெரிய பெரிய விஷயத்தை நல்ல சொல்லி இருக்கீங்க

ராமலக்ஷ்மி said...

//ஏதோ அவருடனே இருப்பவர் போல. அப்போதுதான், அவர் நகரும் போதே, ஒரு இலாவகமான பக்கவாட்டு எட்டில் நீங்கள் முதலிடத்தைப் பிடிக்க முடியும்.//

ரசித்தேன். இது மும்பையில் மட்டுமா எந்த ஊர் வரிசையானாலும்தான்:). கால் கடுக்க நின்ற போதெல்லாம் இல்லாத படபடப்பு அந்தக் கடைசி நிமிடத்தில்தான் அதிகரிக்கும் என்னவொ பின்னாலிருக்கும் அத்தனை பேரும் ஒட்டு மொத்தமாக சேர்ந்து நம்மைத் தள்ளி விட்டு இடத்தைப் பிடித்து விடப் போகிறார்கள் என்பது போல:))!

ராம்.CM said...

நல்லாயிருந்தது...

narsim said...

நல்லா எழுதியிருக்கீங்க அனுஜன்யா. மும்பை ஒரு வினோதம்.

Tech Shankar said...

எப்படிங்க இப்படி. நிறைய எழுதுறீங்க.

அமிர்தவர்ஷினி அம்மா said...

மும்பையும், மதுரையும், கல்யாண்ஜியும், கடைசி கவிதையும் - எதைப் பற்றியும், பற்றாமலும் போக முடியவில்லை.

அருமை..

கல்யாண்ஜி , வண்ணதாசன் - இருவரும் ஒருவரே என்று வலைப்பூவுக்கு வந்த பின்னரே தெரியும்.

படிக்கத்தூண்டுகிறது - நீங்கள் எழுதிய அவரின் செந்நிற சாய்வெழுத்துக்கள்

anujanya said...

@ புன்னகை

இன்னும் நான்கு பேர் இருக்காங்களே. பார்போம். நன்றி

@ செல்வேந்திரன்

தெரியும் செல்வா. ச்சும்மா ஒரு விளையாட்டுக்கு. பதிவைப் படித்தாலே தெரியுமே !

//மேலே உள்ள மதுரை பற்றிய வரிகள் வண்ணதாசனின் கடிதங்களில் இருந்து எடுத்தவை. இன்று பரிசலிடம் பேசும்போது 'உரைநடையில் கவிதை வடிவம் இருப்பதைப் படித்தது முதன்முதல் கல்யாண்ஜியிடம்தான்' என்றார்.//

வண்ணதாசன்/கல்யாண்ஜி இருவர் பெயரையும் மாற்றி மாற்றி பயன்படுத்தி உள்ளத்தைப் பார்க்கவும் :))

@ மணிகண்டன்

//நிறைய சந்தி பிழைகள், வல்லினம் மெல்லினம் தகராறு இருக்கு இந்த பதிவுல. கொஞ்சம் கவனம் செலுத்துங்க.//

நன்றி நண்பா. மீண்டும் வருக :)

யோவ், தெரியாம யாரையும் கிண்டல் பண்ணாதே. அதை எழுதியது ராஜா சந்திரசேகர்.

@ அன்புமணி

தெரியும் தல. மேலே செல்வாவுக்குத் தந்த பதிலைப் பாருங்கள் :) நன்றி.

@ அப்துல்

இந்த மாதிரி கயமைத்தனம் பண்ணுறியா அப்துல். இனிமேல் தவறாமல் போடு :)

@ வேலன்

நீங்க சொல்லி தான் படிக்க ஆரம்பிச்சேன் தல. இப்போது என் தம்பி பிடுங்கிக் கொண்டுவிட்டான். விமர்சனம் ஒரு தனிக் கலை. லேகா கிட்ட பயில வேண்டும்.

@ அத்திரி

வாய்யா, காத்திருத்தல் சரி. வரிசை? நன்றி தல.

@ நிஜமா நல்லவன்

வாங்க மாப்ள. முதல் வருகையிலேயே இரண்டு பின்னூட்டம். தேங்க்ஸ் பா.

@ சென்ஷி

அழித்து விடு. அய்ஸ்/ஜ்யோவ் எல்லாம் அப்புறம் என்ன சொல்றது?

@ கார்க்கி

முதல் முறையாக உண்மை பேசி இருக்க அப்சொல்யூட் !

@ அசோக்

அப்படிதான் தோன்றுகிறது அசோக். நீங்க படிச்சாச்சா?

@ காமராஜ்

வாங்க தல. பின்னூட்டமே கவித மாதிரி இருக்கு. கடோசி வார்த்த சொன்னீங்க பாருங்க; அது அது ! நன்றி காமராஜ்.

@ கேபிள் சங்கர்

வாங்க தல. நன்றி.

@ யாத்ரா

அப்பா! உங்களுக்கு வண்ணதாசனை எவ்வளவு பிடிக்கும் என்று புரிகிறது. உங்க வாசிப்புக்கு நீங்களே எழுதலாம் யாத்ரா. இன்னும் கவித்துவமா இருக்கும். நன்றி.

@ செய்யது

'தாறு மாறு' - கலக்கல் கமெண்டு. ராஜா சந்திரசேகர் எழுதியது. நன்றி செய்யது.

@ MayVee

நன்றி நண்பா.

@ ராமலக்ஷ்மி

வாஸ்தவம் தான். எல்லா ஊர்களிலும் சகஜமான ஒன்று. நன்றி சகோ.

@ ராம்

நீங்க எப்பவும் ரெகுலர் விசிட். நன்றி தல.

@ நரசிம்

ஆமாம், வரேன்னு சொல்லிட்டு டபாய்க்கறீங்க தல. நன்றி.

@ தமிழ்நெஞ்சம்

வாங்க நட்சத்திரம்! அதுவா? தானா வருது! :))) நன்றி

@ அமித்து.அம்மா

வாங்க சகோ. வண்ணதாசன் அவசியம் படிங்க. நன்றி

அனுஜன்யா

Kumky said...

வணக்கம் யூத் சார்.ரொம்ப நாளா படிக்கனுமின்னிட்டு மார்ச் மாத செக்கிழுத்தலுக்கு பின் இப்போதான் வர முடிஞ்சது.
வண்ணதாசனை பற்றி ஏராளம் இருக்கின்றது பகிர்ந்துகொள்ள.
இம்மாதிரி இங்கிங்கு அவரை கொண்டாடுகிறார்கள் என அவருக்கு தெரியுமா என்ற கேள்வியும் மனதில் எழாமலில்லை.
இத்தனை நாட்கள் உங்கள் எழுத்துக்களை வாசிக்காமல் இருந்ததற்க்கு வருத்தமாக இருக்கிறது.இனி தொடர்கிறேன்.நன்றி.

anujanya said...

வாங்க தல. பரிசல்/கார்க்கி பதிவு பின்னூட்டங்களில் பார்த்த பரிச்சயம். நீங்களும் வங்கியா? :)))))))))

முடிந்தபோதெல்லாம் (அதாவது ஒவ்வொரு பதிவுக்கும்) வாங்க.

அனுஜன்யா

மணிகண்டன் said...

***
யோவ், தெரியாம யாரையும் கிண்டல் பண்ணாதே. அதை எழுதியது ராஜா சந்திரசேகர்
***

இதுக்கு தான் குவிசு எல்லாம் வைக்ககூடாது. ஆனா, இனிமே பண்ணல ! (இதையே எவ்வளவு தடவை சொல்லுவேன் !!!)

anujanya said...

@ மணிகண்டன்

//ஆனா, இனிமே பண்ணல ! (இதையே எவ்வளவு தடவை சொல்லுவேன் !!!)//

:)))))))

அனுஜன்யா