![](http://3.bp.blogspot.com/_6auRt-S2-14/SfiC0FdsnXI/AAAAAAAAAWQ/vrKrfOHb5CM/s320/dmk-admk.jpg)
தமிழ் நாட்டில் தேர்தல் அரசியல் சூடு பிடிக்கத் துவங்கி விட்டது என்று நினைக்கிறேன். இங்கு மும்பையில் அப்படி ஒன்றும் விசேடமாக இல்லை. இங்கு நாளை தேர்தல் (April 30) தினம். நீண்ட வார-இறுதி தரும் களிப்பில் மும்பைகர்கள் பயணத் திட்டங்கள் எப்பவோ தீட்டி விட்டார்கள். நானும் தான். ஆயினும் வாக்களித்து விட்டு செல்வதாகவே உத்தேசம். தேர்தல் நேரத்திலாவது இட்லி வடை/லக்கி லுக் போன்ற எப்போதும் அரசியல் சார்புள்ளவர்கள் பதிவு படிப்பது சில விஷயங்களைத் தரும்: பொதுவாக நல்ல பொழுதுபோக்கு; அவரவர் சார்பு நிலைகேற்ற சாமர்த்திய வாதங்கள்; உங்களுக்கு ஒவ்வாத நிலையென்றால் நிச்சயம் இரத்தக் கொதிப்பு போன்றவை. சில சமயம் செம்ம காமெடியாகவும் இருக்கும். எனக்குத் தெரிந்து இருவருமே தமிழகத்தின் நாற்பதில் (புதுச்சேரி சேர்த்து) முப்பது-பத்து என்று சொல்லிக்கொள்கிறார்கள். One of us is crying; One of us is lying என்னும் ABBA பாடல் நினைவுக்கு வருகிறது.
இந்த வாரத்தின் மிகப் பெரிய ஆச்சரியங்கள் சில:
அம்மாவின் 'ஈழம்' பேச்சு
ரோசா வசந்தின் 'தி.மு.க./காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக வாக்களிக்க வேண்டிய நிலை' என்ற பதிவு
முதலில் ஜெ. இவர் தடாலடியாக 'எதையும்' செய்யக் கூடியவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. வீரப்பன், காஞ்சி மடம் என்று பல்லாண்டு, நூற்றாண்டு பிம்பங்களைப் பொடியாக்கும் நெஞ்சுறுதி அல்லது ஆணவம் பிடித்தவர். அதனால் வெறும் தேர்தல் ஸ்டண்ட் என்று மட்டும் இவரை அலட்சியம் செய்ய முடியாது. எனக்கு ஒரே பயம் தாலிபான்கள் போல இவரையும் அணு குண்டுப் பொத்தான்கள் அருகில் விடவே கூடாது. Why not என்று சோதிக்கும் குணாதிசயம் எல்லாவற்றுக்கும் பொருந்தாது. வைகோ இன்னமும் பிறழ்வு நிலைக்குத் தள்ளப்படாமல் இருந்தால் அது பெரிய விதயம்.
ஆனாலும் அதிர்ச்சி கொடுத்து, தேர்தல் களத்தை - issueless election என்றிருந்த நிலையை - சூடாக்கிய பெருமை இவருக்குப் போய் சேரவேண்டும். இதனை எதிர்க்க அந்த பெரியவர் உண்ணாவிரதம் இருக்க நேர்ந்தது ஒரு black humour. ஆனால், இந்தத் தருணத்திலாவது அவர் ஸ்டாலினை முன்னிலைப் படுத்தியிருக்கலாம். ஏன் என்கிறீர்களா? அவர்தானே First among equals? மேலும் பின்னாட்களில் ஒரு குழாயடிச் சண்டை உருவாவதைத் தவிர்க்கலாம். இவை தவிர, எனக்கு ஸ்டாலினை மிகவும் பிடிக்கும். No jokes. தமிழ் நாட்டில் விவேகம், பொறுமை, எதிராளியிடமும் கண்ணியம், வெறும் அனல் பேச்சு-வாய் சவுடால்கள் விடாமல் இருப்பது என்பது பெரிய தலைவர்களில் அவரிடம் மட்டுமே இருப்பதாக என் எண்ணம். எனக்கு அரசியல் பற்றி அருகில் சென்று அவதானித்த அனுபவம் சிறிதும் இல்லை. தூரத்து, தொலைகாட்சி/பத்திரிகைப் பார்வைகள் அவ்வளவே. ஆதலால் நான் சொல்வது முற்றிலும் என் அளவில் மட்டுமே. ஆனால், தேர்தல் நேரத்தில் மட்டுமாவது எனக்கும் ஏதாவது உளர நிச்சயம் உரிமை இருக்கு. அதனால நானும் சொல்லுவேன்.
அடுத்த மெல்லிய ஆச்சரியம் ரோசா வசந்தின் பதிவு. அவர் ஜெ.கூட்டணியை ஆதரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதற்கு அவர் முன்வைத்த வாதம் இது:
"தேர்தலில் வாக்கு மூலமாக நாம் பிரதிநிதிக்கும் கருத்து என்பது நம் முன்னிருக்கும் சாய்ஸ்களில் யார் பரவாயில்லாதவர் என்று நம் அரசியல்/ சமூக மற்றும் சுயநல பார்வையின் மூலம் முடிவுக்கு வந்து தெரிவிப்பது அல்ல; அப்படி முடிவெடுத்தால் ஒரே ஒரு முடிவைத்தான் காலாகாலத்துக்கும் நாம் எடுக்க முடியும்; இந்த பலவீனத்தை வைத்தே கருணாநிதி தன் அரசியலை உயிருடன் வைத்திருக்கிறார். அப்போதய நமது கோபத்தை, அதிருப்தியை தெரிவிப்பது, குறிப்பாக அண்மைய கோபத்தில் தண்டிப்பதுதான் தேர்தல் மூலம் முன்வைப்பது; அந்த வகையில் ஜெயலலிதா எவ்வளவு மோசமாக இருந்தாலும், திமுகவை தோற்கடிக்க நாம் அதிமுக கூட்டணியைத்தான் முழுவதுமாய் ஆதரிக்க வேண்டும். ஜெயலலிதா தான் ̀ஈழம் பெற்று தெருவேன்' என்பது வெத்து சவடால் நாடகம் என்றாலும், அந்த சவடாலுக்காகவாவது நாம் ஜெயலலிதாவை ஆதரிப்பதுதுதான் தேர்தல் சார்ந்த அரசிலாக இருக்கும்.
ஈழப்பிரச்சனை மட்டுமில்லாது, ஊழலையும், ஊழல் சார்ந்த மிரட்டலையும் மட்டும் சார்ந்து -தங்கள் பகையை மறந்து -கூட்டு கொள்ளையடிக்க சேர்ந்துள்ள கருணாநிதியின் குடும்ப கொள்ளை தமிழகத்தையே ஒட்டு மொத்தமாக விழுங்குவதை, தார்மீகம் என்று எதுவுமே இல்லாத நிலைக்கு இட்டு செல்வதை தடுக்கவும் திமுகவை தோற்கடிக்க வேண்டும். அதற்கு அதிமுகவை வெற்றி பெற வைப்பதை தவிர வேறு சாத்தியம் இல்லை. . கவலையே வேண்டாம், இதன் விளைவாக இந்த ஆட்சியே கவிழும்! அந்த தேர்தலில் அன்றய சூழலுக்கு ஏற்றாற் போல யோசிக்க வேண்டியதுதான்!”
என்று போகிறது இவர் பதிவு. நடை பெறப்போவது நாடளுமன்றத் தேர்தல். ஈழம் மட்டுந்தான் இந்தியாவை எதிர்நோக்கியுள்ள பிரச்சனையா? இல்லை தமிழனாக மட்டுமே (இந்தியன் என்னும் கோட்பாட்டில் நம்பிக்கை இருக்கும் பட்சத்தில்) சிந்திப்பேன்; மற்றதைப் பற்றி (இதில் தமிழனைப் அன்றாடம் பாதிக்கும் மற்ற விஷயங்களும் அடக்கம்) அக்கறை இல்லை என்ற நிலை சரியா என்று எனக்குத் தெரியவில்லை. காங்கிரசுக்கு மாற்றாக பா.ஜ.க. வருவது கடினம். மூன்றாவது அணி என்னும் உருவம் சரியாகப் புலப்படாத வஸ்து வரலாம். தினசரி ஆட்சியே பெரிய விடயமாகிவிடும் சூழலில், பொருளாதாரம், தேசப் பாதுகாப்பு, தீவிரவாதம், அயல் நாட்டுக் கொள்கை இவற்றுக்கான குறைந்தபட்ச கொள்கைகள் மற்றும் அவற்றை அமலுக்குக் கொண்டுவருவது போன்றவை நடப்பதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை. ஈழம் பற்றி அத்தகைய புது அரசு ஏதாவது முடிவு எடுக்கும் என்றோ, அப்படியே எடுத்தாலும் சிறி லங்கா அரசு அத்தகைய மைனாரிட்டி அரசுக்கு மரியாதை தரும் என்றோ எதிர்பார்க்க முடியாது. இதை எல்லாம் யோசித்தால் ... மண்ட காயுது பாஸ்.
தமிழரல்லாத மற்றவர்களுக்கு மூன்றாம் அணி பற்றிய பயம் மட்டுமே உள்ளதால், ஒழிந்து போகிறது என்று காங்கிரசுக்கோ அல்லது பா.ஜ.க.வுக்கோ வாக்களிக்கலாம். தமிழர்கள் பாடு உண்மையில் choice between Devil and Deep Sea; Frying Pan and Fire; Rock and a Hard place etc. Or DMK and ADMK.
தமிழ் நாட்டு வாக்காளர்களைப் பொறுத்தவரை கட்சி சார்பு நிலை உள்ளவர்களுக்கு எப்போதும் ஒரு தர்ம சங்கடமும் இல்லை. அது இல்லாதவர்கள் பாடு கொஞ்சம் திண்டாட்டம் தான்.
இங்கு பங்கு சந்தை பற்றி மட்டும் (கூடவே தங்கள் வங்கி கணக்கில் வளர்ச்சி) எப்போதும் கவலைப்படும் கூட்டம் 'இந்த மூன்றாவது அணியிடம் கெஞ்சுவதை விட, காங்கிரசும், பா.ஜ.க.வும் தேர்தலுக்குப் பின் கூட்டு சேர்வது சாலச் சிறந்தது என்று கருதுகிறது. அவரவர் கவலை அவரவருக்கு.
எனக்கும் பகற்கனவு காண்பது மிகப் பிடிக்கும். இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, திமுகவும் அதிமுகவும் ஒரே அணியில் சேர்ந்திருந்தால் நிச்சயம் நாற்பதும் கிடைத்திருக்கும். எந்த ஆட்சி அமைந்தாலும், 'இதோ பார், முதலில் ஈழம் பற்றி ஒரு உடனடி முடிவெடு. அப்புறம் தான் ஆதரவு' என்று சொல்லியிருக்கலாம். இரு கழகங்களும் வாழ்வில் ஒரு முறையாவது தமிழருக்காக செயல் பட்டதற்கு மனசாட்சியுடன் இருக்கலாம். ஒரு இனத்தைக் காப்பாற்றிய செயலாகவும் இருந்திருக்கும். If only wishes were horses ........ பதிவு ரொம்ப சீரியசாக தோன்றுவதால் கொஞ்சம் மனதை இலேசாக்க:
கனவு சீன் 1:
ஸ்டாலின் நேர போயஸ் தோட்டத்துக்குப் பூங்கொத்துகளுடன் போகிறார். அவரை வாசலில் வந்து அம்மா வரவேற்கிறார். தோட்டத்தில் மாம்பழம் பறித்துக் கொண்டிருக்கும் அய்யாவும், வாசலில் பம்பரம் விட்டுக் கொண்டிருந்த வைக்கோவும், கூர் மழுங்கிப் போன அரிவாளை சாணை தீட்டிக்கொண்டிருக்கும் தா.பாண்டியனும் அம்மா பக்கத்தில் வந்து நின்று கொண்டு தளபதியைப் பார்த்து புன்முறுவல்/கண்ணடித்தல் போன்ற காரியங்கள் செய்தல். ஸ்டாலினுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் திருமா ஒரு ஒற்றை ரோஜாவை அம்மாவிடம் கொடுக்க, அவர் அதில் ஆளுக்கு ஒரு இதழை மற்றவருக்குப் பிய்த்துக் கொடுத்தல்.
கனவு சீன் 2
அங்கிருந்து எல்லோரும் ஒரே வேனில் அறிவாலயம் நோக்கிச் செல்ல வேண்டும். வாசலில் பேராசிரியர்/துரைமுருகன் வந்து வரவேற்று, கூட்டம் நடக்க வேண்டிய பெரிய ஹாலுக்குச் செல்லுதல். அங்கு நடுநாயகமாக கலைஞர் அமர்ந்திருப்பார். செல்வி தன் கோஷ்டியுடன் முன்னேறி அருகில் சென்றதும், அவர் கைகளைப் பற்றி, உச்சி முகர்தல். எல்லோருக்கும் கண்கள் கட்டாயம் பனிக்கும். இதயமும் இனிக்கும்.
பேச்சு வார்த்தை முடிவில், அறிவிப்பு பின் வருமாறு:
மொத்த நாற்பது இடங்களில் திமுக கூட்டணி (காங்கிரஸ் இல்லை) இருபது இடங்களிலும், மீதி இருபது இடங்களில் அம்மாவின் கூட்டணியும் போட்டியிடும். எதிர் கூட்டணி போட்டியிடும் இடங்களில், தங்கள் கூட்டணி வேட்பாளர்கள் தேர்தலிலிருந்து விலகிக் கொள்வார்கள். நாற்பது இடங்களிலும், இரு தரப்பும், ஈழத்தை முன்வைத்து வாக்கு கேட்கும். இது ஈழம் மலர்வதற்கான ஒரு அரிய ஒற்றுமை. மற்றபடி கொள்கை(?) வேறுபாடுகள் தொடரும். இரு கட்சிகளை இணைப்பது போன்ற பேச்சுக்கே இடமில்லை.
தேர்தல் முடிவுகள் சாதகமாகி, நாற்பது இடங்களையும் இந்த பெரும் 'தமிழர் கூட்டணி' வென்றால், டில்லியில் யார் ஆட்சி அமைந்தாலும், இந்த நாற்பது இடங்களின் ஆதரவு நிச்சயம் தேவைப்படும். ஒரே குழுவாகவே இது செயல்படும். ஆதரவு தருவதற்கு முன் நிபந்தனையாக இந்த விதயங்கள் கோரப்படும்:
1. முதலில் போர் முற்றிலும் நிறுத்தப் பட வேண்டும்
2. அயல்நாட்டுத் துறை, பாதுகாப்புத் துறை, முடிந்தால் உள்துறை இவை
எல்லாவற்றையும் கேட்டுப் பெறுவது.
3. தமிழ் ஈழம் மலர, மத்திய அரசு எல்லா முயற்சிகளும் செய்ய வேண்டும்.
4. அது சிக்கலாகும் பட்சத்தில், குறைந்த பட்சம் தனி ஆட்சி உரிமையாவது தமிழருக்குப் பெற்று தர வேண்டும்.
கனவு சீன் 3
ராஜ பக்ஷே (எல்லோரும் மனம் மாறி திருந்தும் போது, அவரையும் மாத்திடுவோம்) வேற வழியில்லாமல், முழு சுந்தந்திரம் பத்து வருடங்களில். அது வரை ஈழத்திற்கு சுயாட்சி என்று ஒரு திட்டத்திற்கு ஒப்புக்கொள்வார். அதற்குள் புலிகளின் மீதான தடை நீக்கப்பட்டு, அந்த இயக்கமும் வேறு பெயரில் ஒரு அரசியல் இயக்கமாக மட்டும் இயங்கும்.
கனவின் கடைசிக் காட்சி
நார்வே, மன்னிக்கவும், இலங்கை என்றாலே நார்வே ஞாபகம் விருகிறது. ஸ்வீடன் நாடு நோபெல் அமைப்பு, உலக சமாதானப் பரிசை கலைஞர், அம்மா மற்றும் ராஜ பக்ஷே மூவருக்கும் பகிர்ந்து அளிப்பதாக அறிவிப்பு வருகிறது.
தமிழகத்தின் தவிர்க்க முடியா இந்த இரு ஆளுமைகள் நினைத்தால்......
ஏதோ கூச்சல் கேட்கிறதே! என்னது?
மைனாரிட்டி திமுக அரசு ஒரு மக்கள் விரோத அரசு. உடனே டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும்
அம்மையாரின் போலி ஈழ கோஷங்களை நம்பாதீர். உலகத் தமிழர்களின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் கலைஞர்
அடப் போங்கையா... போயி புள்ள குட்டிங்களப் படிக்க வெய்யுங்க. ஈழ மக்களே! தயவு செய்து தமிழகத்திடம் இருந்து எதையும் எதிர்பார்க்காதீர்கள்.
30 comments:
வித்தியாசமான கனவுக்கதை
நல்லத்தான் இருக்கு. நடக்கற காரியமா இதெல்லாம்,
நெம்ப யோசிச்சுபோட்டிங்கோ தலைவரே...!!
எழுத்தாளர் சுஜாதா, நம்ம சகோதரப் பதிவர் கானா பிரபாவிற்கு ஆஸ்திரேலிய வானொலிக்காக பேட்டி அளித்த போது சொன்னது
“ஈழ மக்களே! தயவு செய்து தமிழகத்திடம் இருந்து எதையும் எதிர்பார்க்காதீர்கள்.”
//ஈழம் மட்டுந்தான் இந்தியாவை எதிர்நோக்கியுள்ள பிரச்சனையா? இல்லை தமிழனாக மட்டுமே (இந்தியன் என்னும் கோட்பாட்டில் நம்பிக்கை இருக்கும் பட்சத்தில்) சிந்திப்பேன்//
ஒத்த சிந்தனை...
//ஈழ மக்களே! தயவு செய்து தமிழகத்திடம் இருந்து எதையும் எதிர்பார்க்காதீர்கள்.//
இதேதான் எனது கூப்பாடும் அனுஜன்யா அண்ணே,
ஐயோ, என்ன ஒரு அற்புதமான கனவு, அந்தக் கனவை நினைத்துப் பார்க்கும் போதே கண்கள் பனிக்கிறது,
எல்லாம் இந்த அப்துல் கலாம் பண்ண வேலை, பாருங்க எவ்வளவு அபத்தமான கனவையெல்லாம் எல்லாரும் காண ஆரம்பிச்சிட்டாங்க.
//First among equals? // குசும்பு ??
அருமை....
கனவு மெய்ப்பட எல்லாம் வல்ல பகுத்தறிவாளர்களையும் இறைவனையும் வேண்டுகிறேன் !!
//"கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்...
காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்...
தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி
போனது போக எது மீதம்..."//
:( !
உங்களுக்கு தேர்தல்!
எங்களுக்கு மார்கெட் லீவு!
அவ்வளவு தான் எனக்கு தெரிந்த அரசியல்!
கனவு சீன் சூப்பர்..
சமீபகாலமாக அரசியல் விவாதங்களில் அவ்வளவாக பேச விரும்பவதில்லை அனுஜன்யா.
உங்கள் கனவை ரசித்தேன் என்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.
"அறிந்த கழிவறைகள்
அத்தனையிலும்
உடைந்தே கிடக்கின்றன
நீர் அள்ளும் குவளைகள்"
-யுகபாரதி.
என்னய்யா இது, அரசியல் பதிவு போட்டாலும் யாரும் உங்களைத் திட்ட மாட்டேங்கறாங்க... நீங்க என்ன அம்புட்டு நல்லவரா :)
பரிசலை போய் நிரைய எழுதறாருன்னு சொல்றாங்க.. நீங்கதாங்க :)))))
மிக வித்தியாசமான பதிவு.
"தமிழ் நாட்டில் விவேகம், பொறுமை, எதிராளியிடமும் கண்ணியம், வெறும் அனல் பேச்சு-வாய் சவுடால்கள் விடாமல் இருப்பது என்பது பெரிய தலைவர்களில் அவரிடம் மட்டுமே இருப்பதாக என் எண்ணம்".
I agree with this. அதுவும் அவரின் இளமைகால பிம்பத்தை உடைத்து he has reached a respectable stage. வாரிசாக இல்லாவிட்டாலும் அரசியலுக்கு வந்திருப்பார் என தோன்றுகிறது.
கொஞ்சம் மும்பை அரசியல் பற்றியும் எழுதியிருக்கலாம்.
அன்புடன்
மாசற்ற கொடி
எதைப்பற்றியும் பற்றாமலும் பதிவுகள் சிற்சில விஷயங்களைச் பகிர்வது தானே? இந்தப் பதிவு ஒரெ விஷயத்தைத் தானே சொல்லியிருக்கிறது? “தேர்தல்-சில கனவுகள் என்பதே இதற்குப் பொருத்தமான தலைப்பு. ஆனாலும் எந்தக் கட்சியைப் ’பற்றி’யும், பற்றாமலும் நீங்கள் எழுதவில்லை என்பதால்தான் அதையும் உடன் சேர்த்தீர்களா?
நல்ல பதிவு. உங்கள் கனவு, கனவிலும் நடக்காத கனவு.
ஸ்டாலின் குறித்த உங்கள் பார்வையோடு 100 சதம் நான் ஒத்துப்போகிறேன்.
//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
என்னய்யா இது, அரசியல் பதிவு போட்டாலும் யாரும் உங்களைத் திட்ட மாட்டேங்கறாங்க... நீங்க என்ன அம்புட்டு நல்லவரா :)
//
மாதக்கடைசி டென்ஷனை மறக்கடித்த கமெண்ட்..
அனுஜன்யா, மிக நேர்த்தியான பதிவு. விவாதம் என்பதை விவாதிக்கும் விதத்தில் இருந்து தான் தொடர்ந்து வாதிக்க முடியும். விவாத விதத்திற்கு உங்கள் பதிவு ஒரு எ.கா.
//மூன்றாவது அணி என்னும் உருவம் சரியாகப் புலப்படாத வஸ்து வரலாம்.//
என்னக் கொடுமை இது! சரியான நையாண்டி...
//இதை எல்லாம் யோசித்தால் ... மண்ட காயுது பாஸ்.//
ரிப்பீட்டேய்!
கற்பனையே ஆனாலும் கொஞ்சம் ஓவராத் தெரியல ஒங்களுக்கு?
சுவையாக எழுதியுள்ளீர்… (லுக்/இட்லி) (ஸ்டாலின் அவதானிப்பு) (ரோசா) (DMK+ADMK) (ஈழம்)... எக்ஸட்ரா.... இப்படியாக
ஈழப்பிரச்சனை மட்டுமில்லாது, ஊழலையும், ஊழல் சார்ந்த மிரட்டலையும் மட்டும் சார்ந்து -தங்கள் பகையை மறந்து -கூட்டு கொள்ளையடிக்க சேர்ந்துள்ள கருணாநிதியின் குடும்ப கொள்ளை தமிழகத்தையே ஒட்டு மொத்தமாக விழுங்குவதை, தார்மீகம் என்று எதுவுமே இல்லாத நிலைக்கு இட்டு செல்வதை தடுக்கவும் திமுகவை தோற்கடிக்க வேண்டும்.
superb
nijam ithu than
நல்ல கனவு.
தமிழனின் ஏக்கமாகக்கூட இருக்க வாய்ப்புள்ள கனவு.
அரசியலின் அதிகாரம் ஈழ தமிழர்களுக்காய் பறி போவது ஒன்றும் கவலையில்லை இப்போது. செல்வி அதிக எம் பி க்களுடன் மத்தியில் செல்வாக்கு பெற்றபின் மாநிலத்தில் ஆட்சி கலைப்பிற்க்கான கோரிக்கைதான் முதலில் இருக்கும் என எல்லோர்க்கும் தெரிந்தநிலையில், மத்தியில் ஆட்சியை கைக்கொள்வதற்க்கான முயற்ச்சியில் செல்வியுடன் கை சேர்வதில் எந்த தயக்கமும் இருக்கப்போவதில்லை கைக்கு.இது போன்ற சூழ்நிலையில் மாநிலத்திலும் அதிகாரமிழந்து, மத்தியிலும் அதிகாரமிழந்து தனியே நின்றபின், ஏற்க்கெனவே சேர்த்த சொத்துக்களின் அடிப்படையில் 3 பாகங்களாக மாநிலத்தை கணக்கிட்டு, சொத்துக்களை மக்கட் படை கொண்டு காத்து வருவது அதிகாரமிழப்பிற்க்கு பின் பெருங்கொடுமையாக இருக்குமென உணர்ந்ததனடிப்படையிலும்,
கை யின் கைங்கர்யத்தால் தேர்தலுக்கு முன்பே திட்டங்கள் தீட்டப்பட்டு கோடிகள் வழங்கப்பட்டு கருப்பு எம்ஜிஆர் தனியாளாக போட்டியிட வைக்கப்பட்டிருப்பதுவும் தமது கழக வாக்குகளை சிதறடிப்பதே நோக்கம் என்பதுவும் உணர்ந்ததனாலேயே, கையறு நிலையில் அண்ணா சமாதியில் படுக்கையை போட்டேனும் இந்த தமிழரின் ஓட்டுக்களை பெற்று கணிசமான தொகுதிகளை கழகத்தினருக்கு பெற்றால்தான் எதிர்காலமே என்னும் இந்த சூழ்நிலையில், தமது அதிகாரம் நிலை நிறுத்தப்பட்டபின்னர் ஈழம் குறித்த உறுதியானதொரு முடிவெடுக்கலாம் என எண்ணியிருப்பாரென தோன்றுகிறது.
நீங்கள் அரசியல் பதிவு எழுதியதை கண்டித்து எனது கிச்சடியில் உங்கள் முகத்திரையை கிழிக்க முயன்று தோத்து போயிட்டேன் !
நல்ல கற்பனை. ரெண்டு கழகமும் சேர்ந்தா, ஏதாவது புதுசா தேசிய கட்சிகள் எதிர் கட்சி ஆகும்ன்னு எதிர்பார்க்கலாம்.
உங்க ஊருல என்னங்க வெறும் 43% தான் வாக்கு செலுத்தி இருக்கீங்க !
மாபியா தொல்லையால் ( வோட்டு போட வேண்டாம் என்று ) தான் மும்பையில் பதிவுகள் குறைவு என்று நினைத்தேன்.,.
என்னை பொறுத்த வரை, சென்ற தேர்தலை விட குறைவான வோட்டுப்பதிவு என்றால், சேம் சைட் கோல். இல்லாவிட்டால் எதிர் டீமுக்கு லக்கி ப்ரைஸ்!
இந்தப் பதிவை விட்டுத் தள்ளுங்கள் ... இதை நான் படிக்கவேயில்லை ... ஆனால் உயிரோசையில் வெளி வந்த உங்கள் "இரு அழகிகள்" சமீபத்தில் நான் வாசித்த ஒரு நல்ல fantasy genre கவிதை ... சொல்லலாம் சொல்லலாம் என்று பார்த்தால் நீங்கள் அதை பதிவாகப் போடவே இல்லை ... இதோ சொல்லிவிட்டேன் ... :)
@ ராஜன்
நன்றி ராஜன்.
@ மயில்
நடக்காது. மனது வைத்தாலும் நடைமுறையில் நிறைய சிக்கல்கள். சும்மா ஒரு fantasy. நன்றி சகோ.
@ மேடி
நக்கல் பண்ணு மேடி - உனக்கில்லாத உரிமையா.
@ தமிழ் பிரியன்
அவர் தீர்க்கதரிசி தான் தமிழ்.
@ Chill-Peer
சாரி, இன்னும் அங்க வந்து படிக்கவில்லை. வரேன். நன்றி.
@ யாத்ரா
கலாயுங்க கவிஞரே.
@ மஹேஷ்
குசும்பு இல்ல மஹேஷ், ஸ்டாலினைப் பொறுத்தவரை நான் சொன்னது உண்மையிலேயே நான் உணர்வதைதான். தேங்க்ஸ் மஹேஷ்.
@ ராமலக்ஷ்மி
என்ன செய்ய சகோ? :(((
@ வால்பையன்
வாங்க குரு. எனக்கும் அவ்வளவுதான் தெரியும்.
@ கேபிள்
சினிமாக்காரர் கமெண்டு? நன்றி சங்கர்.
@ மண்குதிரை
லூஸ்ல விடுங்க தல. அரசியல் அவ்வளவு சுலபம் இல்ல. வெளியே இருந்து கமெண்டு அடிக்கறது ஈசி. ஆனாலும்... நாமளும் ஏதாவது சொல்லணும்ல. கவிதை 'நச்'.
@ ஜ்யோவ்
நா உங்களுக்கு என்ன பாவஞ் செய்தேன்? இப்பிடி கொலவெறியோட துரத்துறீங்க?
@ கார்க்கி
ஒரு மார்க்கமா தான் இருக்க. மொக்கையில பேசி தீத்துக்கல்லாம்.
@ மாசற்ற கொடி
நன்றி. மொழி தெரிந்த த.நா.அரசியலே நமக்கு எல்.கே.ஜி. ரேஞ்சு. ஹிந்தி பேசும் மும்பை அரசியலா? முஜே நகீ மாலும். ஸிரப் ஐஸ்வர்யா அவுர் காத்ரினா மாலும் ஹை :)
@ பரிசல்
நன்றி கே.கே. அப்ப தளபதி முதல்வரானா, திருப்பூர் உங்களுக்கு. மும்பை வடக்கு M.P. நான்தான் :)
@ நர்சிம்
உங்கள மாதிரி ஆட்கள் கொம்பு சீவியே ஜ்யோவ் என்னை இப்படி வதைக்கிறார்.
விவாதம் - நன்றி நர்சிம்.
@ வெங்கி
நன்றி பாஸ்.
@ ஆதி
ஹலோ, நீங்க எழுதுற 'துறை சார்ந்த'.... சரி சரி தனியா பேசி தீர்த்துக்குவோம் :)
@ அசோக்
நன்றி அசோக்.
@ சக்தி
நன்றி சக்தி. ஆயினும், அதற்கு மாற்றாக எதைத் தேர்வு செய்ய முடியும் என்ற கேள்விக்கு என்னிடம் சரியான பதில் இல்லை.
@ கும்க்கி
நீண்ட பின்னூட்டம். சாதரண மக்களுக்கு உண்மை என்று தோன்றுவதை பிட்டுப் பிட்டு வைக்கிறீர்கள். நிறைய யோசித்தால் மனது வெறுமையாகி விடும். நன்றி கும்க்கி.
@ மணிகண்டன்
உனக்கேன் காண்டு மணி? தேர்தல் சமயத்துல கூட அரசியல் (அதுவும் ரொம்ப கவனமா, யாரும் கல் அடிக்க முடியாதபடி) எழுதலேன்னா, என்ன பதிவர் நானு?
மும்பை - ஆமாம், ரொம்பக் கேவலம்தான். ஆனா, என் இடக்கை நடுவிரலில் கருப்புக் கரை இருக்கு :)
@ ராஜு
அப்படியெல்லாம் இல்லை ராஜு. தேர்தல் விடுமுறை சேர்த்து நான்கு நாட்கள். எல்லோரும் விடு ஜூட். படிப்புக்கும், பொறுப்புக்கும் சம்பந்தம் இல்லை.
உங்கள் பார்வை சரிதான். அதிக பதிவு என்றால், எதிர் கட்சிக்கு நிறைய பலன்கள். இது உங்கள் முதல் வருகையா? முன்னமே ஒரு முறை வந்த ஞாபகம். நன்றி.
(அப்புறம் உங்க லேட்டஸ்ட் பதிவு - ரொம்ப கஷ்டம்மான விஷயத்த லைட்டா சொல்றீங்க :( )
@ நந்தா
//இந்தப் பதிவை விட்டுத் தள்ளுங்கள் ... இதை நான் படிக்கவேயில்லை //
என்ன ஒரு துணிச்சல். என்ன ஒரு பொறுப்பின்மை?
என்னது கவிதை நல்லா இருக்கா? இதெல்லாம் ஒத்துக்க முடியாது. பதிவில் போடும் போது, மீண்டும் ஒரு முறை பின்னூட்டம் போட்டே ஆகணும் :)
அனுஜன்யா
***
உனக்கேன் காண்டு மணி?
***
இதுக்கு பேரு அன்பு அனுஜன்யா அன்பு ! alias பரிவு, அக்கறை !
***
தேர்தல் சமயத்துல கூட அரசியல் (அதுவும் ரொம்ப கவனமா, யாரும் கல் அடிக்க முடியாதபடி) எழுதலேன்னா, என்ன பதிவர் நானு?
***
நீங்க அரசியல் எழுதினா யாரும் கண்டுக்கமாட்டேங்கறாங்க ! நந்தா கரெக்டா சொல்லி இருக்காரு !
நன்றி அனுஜன்யா.
நான் எழுதிய இந்த பதிவு, வேலை தேடுகிறேன் , ஒரு stress ரிலீப் ஆக உள்ளது.
டோனி ராபின்ஸ் சொல்வது போல, Take the stress out of your life by talking about it and prepare for the worse and think about ways to come out of it, நிச்சயம் வருவதை நினைத்து நான் எதையும் எதிர்கொள்வதில்லை. என் மேனேஜர் பட்ட கஷ்டம் ( நான் மேனேஜர் ஆன கதை ) ஏற்கனவே எழுதியுள்ளேன்.
ரோசா வசந்த் போஸ்ட் சுத்த அரைவேக்காட்டுத் தனம். அடுத்து ஜெ மீது கோபம் வந்தா கருணாநிதியை ஆதரிக்கனுமா? என்னங்கய்யா கலர் கலரா ரீல் விடறாங்க? :)
கனவு சீன்ஸ் கலக்கல் தலீவா.. :))
@ மணி
ஒரு பெரிய அரசியல் விமர்சகர் உருவாகுவதற்கு எத்தனை தடைகள்! ஆனாலும் விடாது கருப்பு... தேங்க்ஸ் மணி.
@ ராஜு
நன்றி ராஜு. அவசியம் இரண்டையும் படிக்கிறேன். உங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டியது இருக்கிறது.
@ சஞ்சய்
வாய்யா, காங்கிரசு. ரோசா வசந்த் எல்லாம் பெரிய, முக்கியமான விமர்சகர். அவர் பார்வையில் அதுதான் சரிநிலை. இலங்கைத் தமிழர்கள் பிரச்னை ஒன்று மட்டுந்தான் தமிழ் நாட்டைப் பொறுத்தவரை தேர்தல் பிரச்சனை என்று வைத்துக் கொண்டால், அவர் கருத்து சரிதான்.
தமிழ் நாட்டில் தி.மு.க.வும் சரி; மத்தியில் காங்கிரசும் சரி. எப்போதும், மாற்றுக் கட்சியை விட நல்ல கட்சியாகவே தான் தோன்றும். அதற்காக, என்ன வேணாலும் செய்யலாமா? ஒரு கோபத்தில், எனக்கு கஷ்டமா இருந்தாலும், உன்னக் கழட்டி விட்டா தான் உனக்குப் பாடம் கிடைக்கும்னு ஒரு கோவம் வரும்ல. அதான் இது.
ஆனா, ஏன் டென்ஷன் ஆவுற சஞ்சய்? என்ன பண்ணினாலும், கடைசியில் 'அன்னை' ஆட்சி தான் டில்லியில் என்று எனக்குப் பட்சி சொல்கிறது :) அப்படி நடக்கா விட்டால், ஆறு மாதத்தில் இன்னொரு தேர்தல் வந்துவிடும்.
அனுஜன்யா
Post a Comment