Sunday, July 19, 2009

சுவாரஸ்யமான பதிவர்கள்செந்தழல் ரவி துவங்கி வைத்திருக்கும் 'சுவாரஸ்யமான பதிவர்கள்' தொடர்களில் எனக்கு விருது ஆச்சரியமாக சீக்கிரமே கிடைத்து விட்டது - நண்பர் செய்யது மூலம்.

செய்யது விருது கொடுத்த பதிவர்கள் பாலா (Beemorgan), ஆடுமாடு, லேகா, அகநாழிகை, தாமிரா மற்றும் நான். இவர்களுடன் சேர்ந்து கொண்டதில் எனக்குப் பெருமிதம் மற்றும் மகிழ்ச்சி.

இப்போது நானும் எனக்கு சுவாரஸ்யமான வலைப்பதிவர்களை அடையாளம் காட்டி விருது கொடுக்க வேண்டும். நாம் சுவாரஸ்யம் என்று சொல்லும்போது, மற்ற எல்லாவற்றைக் காட்டிலும் readability என்பது முன்னே நிற்கிறது.

என்னுடை விருது பட்டியல் இதோ:

1. இரா.வசந்தகுமார்: மிக மிக சுவாரஸ்ய எழுத்துகள் இவருடையவை. நிறைய விஷயங்கள் எழுதுகிறார். என்னைப் போலவே சுஜாதாவின் மிகப் பெரும் விசிறி. சுஜாதாவின் சாயல்கள் இவர் எழுத்துகளில் தெரியும். மரபுக் கவிதைகளில் அதிக நாட்டம் உள்ளவர். நவீன கவிதைகளையும் ரசிப்பவர். சுஜாதா சாயல் சற்றுமில்லாத, இலேசான வண்ண நிலவன் வாசனையுடன் இவர் எழுதிய 'ஆகாயக் கொன்றை' குறுநாவலில் வர்ணனைகள் அழகு. முக்கியமான விஷயம், இவர் சிறில் அலெக்ஸ் நடத்திய அறிவியல் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு வென்றவர்.

சிறுகதை, குறுநாவல், நாடகம், அறிவியல் புனைவு, பயணக் கட்டுரை, உலகத் திரைப்படங்கள், புத்தக விமர்சனங்கள் என்று ஒரு ஆதர்ச பதிவருக்குண்டான எல்லா அம்சங்களும் இவருக்கு உள்ளது. ஹிட்ஸ், பின்தொடர்பவர்கள், பின்னூட்டங்கள் என்ற இன்றைய அளவுகோல்களில் இவர் அவ்வளவு பிரபலமாகாதது எனக்கு சற்று ஆச்சரியமும் வருத்தமும்.

2. ஸ்ரீதர் நாராயணன்: இவர் எல்லோருக்கும் தெரிந்த பதிவர். அவரே சொல்லிக்கொள்வது போல் ஒரு Techno Geek. வசந்த் போலவே எல்லாவற்றைப் பற்றியும் எழுதும் திறமை இவருக்கு இருக்கு. மிக சுவாரஸ்யமான நடை. இவரும் சில சமயம் வாத்தியாரை நினைவு படுத்துவார்.

திரைப்படங்கள், சிறுகதைகள், அறிவியல் புனைவு, குறும்படக் கதை, பொருளாதாரம், ஸ்டீபன் ஹாகிங் முதல் கவுண்டமணி வரை என்று அனைத்தையும் பார்க்கும் திறன் அனாயாசமாக வருகிறது இவருக்கு. கவிதை என்றால் மட்டும் ஏனோ ஈனோ சாப்பிட வேண்டும் என்பார். இருக்கட்டும். எங்க ஓடப் போகிறார்! இவரும் வசந்த் போலவே அறிவியல் புனைவுப் போட்டியில் பரிசு வென்றவர்.

Another must read blogger

3. ஹரன் பிரசன்னா: கவிஞர்/ எழுத்தாளர்/ சீனியர் பதிவர். நான் பதிவு எழுத வந்த புதிதில் ஹரன், அய்யனார், ஜ்யோவ், வா.மணிகண்டன் இவர்கள் தளங்களைப் படிப்பது எனக்கு தினப் பழக்கம். ஹரனின் கவிதைகள் எனக்குப் பிடிக்கும். இலகுவில் பிடிபடாது. அதுதான் அவற்றின் வசீகரம். இவரின் ஹைக்கூ அல்லது குறுங்கவிதைகளும் அழகாக இருக்கும். என்னால் எப்போதும் மறக்க முடியாத சில:

தன் முதல் எழுத்தை எழுதும்
பிஞ்சு விரல்களில்
குடிகொள்கிறது உலகின் குரூரம்

பறக்கும் காலண்டரில்
கண்ணில் படுகின்றன
கடந்த நாட்கள்

மேலோட்டமாகப் பார்த்தால் Robert Frost இன் The Road Less Travelled கவிதையை நினைவு படுத்தும் ஒரு அருமையான, வசீகரமான கவிதை 'மாயக்கண்ணாடி'. என்னுடைய பார்வையில் இந்தக் கவிதை முற்றிலும் வேறு தளத்திலும், வேறு விஷயங்களையும் சொல்வது போலத் தெரிகிறது.

லாயத்திலிருந்த சிவப்புக் குதிரை
என்னை வலப்பக்கம் செல்லச் சொன்னது
அங்கிருந்த ஆற்றில் கண்விழித்து நின்றபோது
குளித்துக்கொண்டிருந்த மீனொன்று
நீரில் மூழ்கச் சொன்னது
பாதாள உலகத்தில் படுத்துக்கிடந்த பாம்பு
மாயக் கதவொன்றைத் திறக்க
இரட்டைச் சாலைகள் விரிந்தன
சுமைதாங்கிக் கல்லில்
காத்துக்கொண்டிருந்த
அதி யௌவனப் பெண்ணொருத்தி
என் ரேகையைப் பார்த்து
தென்மேற்குத் திசை போகச் சொன்னாள்
அங்கே நான் தெய்வமென்றறியும்
சிலை ஒன்று காத்துக் கிடப்பதாக
வழியெங்கும் நமத்துக் கிடந்த கோரைப் புற்கள்
என் வழி தவறென்றன
மாயக் கண்ணாடியைக் கோபம் கொண்டு உடைத்தேன்
சிதறி விழுந்த கண்ணாடிகள்
ஆளுக்கொரு திசை சொல்லி நின்றன.

இதே போல, நிறைய சிறுகதைகளும் (அறிவியல் புனைவு உட்பட) எழுதியிருக்கிறார். 'வசியம்' எனக்குப் பிடித்த கதை.

நான் எல்லாம் கூப்பிட்டால் எழுதுவாரா என்று தெரியவில்லை. அவருக்குச் சுவாரஸ்யமான எழுத்துக்கள் யாருடையவை என்று அறிந்துகொள்ள இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்ற அளவில் இது ஒரு request.

4. பா.ராஜாராம்: ஜ்யோவ் மீள் கண்டெடுத்த முத்து இது. இவர் கவிதைகள் காயம் பட்டிருக்கும் மனங்களை மெல்ல வருடிக் கொடுக்கும். சில சமயம் ஆறி விட்டது என்று எண்ணும் வடுக்களைச் செல்லமாகக் கீறிப் பார்க்கும். இவர் தளம் கவிதை ரசிக்கும் எங்கள் பட்டாளத்திற்கு ஒரு புதையல். இந்த பதிவு எழுத விவரங்கள் தேட இங்கு வந்தால், ஒரு அருமையான சிறுகதை இருக்கு. மனச உலுக்கும் கதை. வண்ண நிலவனின் உடனடி சிநேகபூர்வம் இவரிடம் இருப்பது எங்களுக்கெல்லாம் ஒரு வரப்பிரசாதம்.

அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய வலைத்தளம் இவருடையது.

5. ரௌத்ரன்: பெயர் தான் அப்படியே தவிர, தங்கமான மனுஷன். உனக்கெப்பிடி தெரியும்னு கேட்காதீர்கள். இப்ப, என்னைப் பார்க்காமலே 'இவரு ரொம்ப நல்லவரு'னு நீங்கள் எல்லோரும் எண்ணவில்லையா? அது போலத் தான்.

அடிப்படையில் கவிஞர். நிறைய பிரமாதமான கவிதைகள். என்ன! மிகக் குறைவாகவே எழுதுகிறார். தன் வலைப்பூவிற்கே ஒரு visiting professor போல வருகை தருகிறார். திரைப்படங்கள், சிறுகதைகள் என்று மற்ற தளங்களிலும் இவருக்கு ஈடுபாடு இருக்கிறது. சென்னையில் இருக்கிறார் என்று எண்ணினேன். இப்போது பார்த்தால் ஜெட்டா. ராஜாராம் சார், கொஞ்சம் நம்ம பையனைக் கவனிங்க. அய்யனாரின் பெரிய விசிறி வேறு.

"எனினும் புலரும் பொழுது" என்னும் இவரின் கவிதை இங்கே:

நிறை பரிதியுலா நிசியில்
இரை தேடுமோர் சர்பம்
சருகிடை நெளிந்தூர்கிறது...

பராபரக் காதலனின்
தியான நிஷ்டையில்
ஆடிக்களைத்த ரம்பா
ஆடை மாற்றிக்கொண்டிருந்தாள்...

கன்னியில் சிக்குண்ட
நாரை ரெண்டை
வளைக்குள்ளிருந்து
வேவு பார்க்கிறது
வயல் நண்டு...

இறுகப் புணரும்
கிணற்றுத்தவளைகளை
குறும்பாய் எட்டிப்பார்த்தவள்
களுக்கென அவை ஆழம் புகவே
அலையலையாய் சிரிக்கிறாள்...

ஏதோ அவசரமாய் சொல்ல
அரைவேக்காட்டில் எழுந்தவனை
மடாரென விறகால் அடித்து
மீண்டும் தூங்க வைத்தான்
மயானச் சித்தன்...

யாவும் கண்டு
மெல்ல உறங்குது இரவு
எப்பொழுதும் போலவே
இயல்பாய் புலர்கிறது பொழுது...

இனிமேல் இவ்வளவு நீண்ட இடைவெளி இல்லாமல் எழுதுங்கள் ரௌத்ரன்.

6. மணிகண்டன்: இவர் கவிஞர் வா.மணிகண்டன் இல்லை. அவருக்கு சென்ஷி விருது கொடுத்து விட்டார். இவர் பதிவர்கள் எல்லோருக்கும் வா! மணிகண்டன். மோதலில் தான் காதல் துவங்கும் என்பதுபோல், இவருடன் சர்ச்சை, வாதம் செய்யாதவர்கள் வெகு சிலரே இருக்க முடியும். ஜ்யோவ், புருனோ, அனுஜன்யா (நான்தான்), செந்தழல், நர்சிம் இன்னும் எவ்வளவு பேரோ. மனதில் பட்டதைச் சொல்லிவிடும் நேர்மையான மனிதர். சரி இப்ப இவர் பதிவுகள் பற்றி.

மென்பொருள் துறை என்று நினைக்கிறேன். வெளிநாட்டுப் பயணங்கள் நிறைய போகிறார். பயண, வெளிநாட்டு அனுபவங்களை அழகாக எழுதுகிறார். இவருடைய ரெகுலர் பதிவு 'கிச்சடி'. இப்போதைய டிரென்ட் படி எல்லாவற்றையும் எழுதுகிறார். திரைப்படம், அரசியல், சிகப்பு விளக்குப் பெண்கள் (ஆம்), தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், துறை சார்ந்தவை என்று எல்லாவற்றிலும் தன் கருத்துகளை அலங்கார வார்த்தைகள் இன்றி வைக்கிறார். விளையாட்டில் (என்னைப் போலவே) ஆர்வம் மிக்கவர்.

இவரிடம் மிகப் பிடித்தது இவர் பதிவுகள் படிக்கும் போது, இலக்கியப் பாசாங்குகள் இல்லாமல், ஒரு நண்பனுடன் பேசிய உணர்வைத் தரும். என்னுடைய குறை எல்லாம், இவர் இன்னும் கொஞ்சம் சீரியஸாக எழுதலாம்.

You may or may not like Mani. But you cant ignore him

மீண்டும் ஒருமுறை விருது கொடுத்த செய்யதுக்கும், காரணகர்த்தா ரவிக்கும் என் நன்றி மற்றும் வேறென்ன அன்புதான் :) இத்துடன் இந்த இனிய நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.

ஒரு பெரிய 'பின் குறிப்பு':

தற்போதைய 'குழும மனப்பான்மை', 'பிரபலம்', 'முதுகு சொரிதல்' போன்ற சர்ச்சைகள், மனம் குமையும் அனானிகளின் வெறுப்பு இவற்றால், ஏற்கெனவே தொடை நடுங்கியான நான், இவர்களுக்கு விருது கொடுக்கும் எண்ணத்தை அறவே ஒழித்து விட்டேன். இருந்தாலும், மனசாட்சியின் படி, இவர்கள் பதிவுகளை, அவற்றின் சுவாரஸ்யத்திற்காக நான் எப்போதும் படிப்பதை ஒப்புக்கொள்வதை இங்கு சொல்லியே ஆக வேண்டும்.

லக்கி, நர்சிம், பரிசல், ஆதி, கார்க்கி, அதிஷா, குசும்பன், கேபிள் சங்கர், முரளிகண்ணன், வால்பையன் , வடகரை வேலன், செல்வேந்திரன் போன்ற நிறைய வாசகர்கள் உள்ள பதிவர்கள். வெண்பூ, மஹேஷ், அப்துல்லா, ராமலக்ஷ்மி, ஸ்ரீமதி போன்ற நண்பர்கள்.

இவர்களைத் தவிர்த்து, எனக்கு மிகுந்த வாசிப்பின்பம் தரும் மற்ற பதிவர்களில் உடன் நினைவுக்கு வருபவர்களில் சிலர்:

அய்யனார், ஜ்யோவ்ராம், பெருந்தேவி, அழகியசிங்கர், பைத்தியக்காரன், வா.மணிகண்டன், கென், மாதவராஜ், காமராஜ், முகுந்த் நாகராஜன், தமிழ்நதி, லேகா, R V சந்திரசேகர், கிருத்திகா, சரவணகுமார், காந்தி, முத்துவேல், லாவண்யா, மண்குதிரை, யாத்ரா, நந்தா, அகநாழிகை, மதன், சேரல், பிராவின்ஸ்கா, நேசமித்ரன், முத்துராமலிங்கம், விநாயக முருகன், நரன் என்று நீண்டு கொண்டே போகிறது.


விடுபட்ட பெயர்களுக்குச் சொந்தக்காரர்களின் கவனத்திற்கு: உங்களை கிட்டத்தட்ட சுஜாதா, எஸ்ரா, ஜெமோ, சாரு போன்ற உயர்ந்த எழுத்தாளர்களின் இடத்தில் நான் வைத்திருப்பதாக பாவித்துக்கொண்டு, மன்னித்து விடுங்கள்.

55 comments:

ny said...

அழகிய அறிமுகங்கள்..
ஹரன் கவிதைகள் வாசித்திருக்கிறேன். அவர் ஏன் இப்போதெல்லாம் கவிதை எழுதுவதில்லையென்று ஒரு பின்னூட்டமும் இட்டு வந்தேன். இப்போது நீங்கள் சொல்லியே அறிகிறேன் அவர் இத்தனை சீனியர் என்று :))

விடுபட்ட சிலரையும் வாசிக்கத் தொடங்குகிறேன் :)

Anonymous said...

உங்களுக்கும், விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

அ.மு.செய்யது said...

அசத்தல் தேர்வுகள்.

ஒவ்வொரு பதிவின் மறைவிலும் ஒளிந்திருக்கும் உங்கள் உழைப்பு முகம் காட்டுகிறது.

வழக்கம் போலவே தாறுமாறு கவிதைகளோடு...

மிக்க நன்றி !!!

ரவி said...

வாழ்த்துக்கள் மற்றும் நன்றி........

மணிகண்டன் said...

நன்றி அனுஜன்யா.

நீங்க குறிப்பிட்டிருக்கும் பதிவர்களில் எனக்கு ஹரன் மிகவும் பிடிக்கும். அவருடைய குதலை குறிப்புக்கள் பலவும் அருமை.

வளர்மதி said...

ஹலோ,

//சுஜாதா, எஸ்ரா, ஜெமோ, சாரு போன்ற உயர்ந்த எழுத்தாளர்களின் இடத்தில்//

குசும்புதான இது ;)

இதுலயும் நான் சேரமாட்டேன்.

அப்ப நான் ஃபிக்‌ஷன் ஆளுதான்யா நீங்கற ;)

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த அனு,அன்பு பலம் தருகிறது. பலகீனமும் தருகிறது.தற்சமயம் இனம் புரியாத பலகீனம் உணர்கிறேன்.வேறு என்ன சொல்லட்டும்....அன்பையும்,நம்பிக்கையையும் பத்திர படுத்தி,அலாவுதீனை காவலுக்கும் வைக்கிறேன்!

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்!

தங்களுக்கும் பெற்ற மற்ற அனைவர்களுக்கும் ...

Sridhar Narayanan said...

அனுஜன்யா!

விருது பெற்றதற்கு வாழ்த்துகள் :)

எனக்கு விருது அளித்ததற்கு மிகவும் மகிழ்ச்சி. நான் இணையத்தில் எழுத இந்த ஒரு வருடத்தில் நீங்கள் எனக்கு பல்வேறு வகையில் ஊக்கமளித்து வந்திருக்கிறீர்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

உங்கள் பதிவுகள், கவிதைகள் மற்றும் மற்ற பதிவுகளில் உங்களுடைய தோழமையான விவாதங்கள் பலவற்றையும் படித்து வந்திருக்கிறேன்.

//கவிதை என்றால் மட்டும் ஏனோ ஈனோ சாப்பிட வேண்டும் என்பார். இருக்கட்டும். எங்க ஓடப் போகிறார்!//

:)) ஈனோ எல்லாம் இல்லைங்க. எனக்கு அவ்வளவாக கைவராத வடிவம் அது. அவ்வளவுதான். நேரம் கிடைப்பின் கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்.

Cable சங்கர் said...

உங்களின் விருதைவிட எழுதிய பின்குறிப்பு மனதுக்கு சந்தோஷத்தை அளித்தது.. விருது என்னங்க விருது.. உங்க மனசுல இருக்கோமில்ல அது போதும்..

ராமலக்ஷ்மி said...

சுவாரஸ்யமான வலைப்பதிவர்களைப் பற்றி வெகு சுவாரஸ்யமாகத் தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள். உங்களையும் சேர்த்து எல்லோருக்கும் வாழ்த்துக்கள்!

//இலகுவில் பிடிபடாது//

உங்களுக்கும் பிடிபடாத வகையில் எழுதக் கூடியவர்கள் இருக்கிறார்கள் என்பது, ஹிஹி.. மகிழ்ச்சியைத் தருகிறது:)!

பரிசல்காரன் said...

உங்கள் எழுத்தின் வெற்றிக்குப் பின்னால் உள்ள வாசிப்பனுபவத்தைக் கண்டு பிரமிக்கிறேன்!

Revathyrkrishnan said...

வாழ்த்துக்கள் அனுஜன்யா விருது பெற்ற‌மைக்கும் வழங்கியமைக்கும்... மிக சுவாரசியமான பதிவர்களை தேர்தெடுத்ததோடு அவர்களை அழகாய் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. அவர்களுக்கான தங்கள் அறிமுகத்தை படித்த போது நான் எல்லாம் இன்னும் ஒன்றுமே எழுதவில்லையே என தோன்றியது

Vidhoosh said...

ரொம்ப அழகான அறிமுகங்கள். வாழ்த்துக்கள். :)

நர்சிம் said...

வாழ்த்துக்கள்..

இரசிகை said...

petravarukkum..

koduththavarukkum..

vaazhththukkal:)

முனைவர் இரா.குணசீலன் said...

விருது பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்......

அமிர்தவர்ஷினி அம்மா said...

வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

ஹரனின் கவிதைகள் எனக்குப் பிடிக்கும். இலகுவில் பிடிபடாது. அதுதான் அவற்றின் வசீகரம் //

உங்கள மாதிரியே எழுதறார்னு சொல்லுங்க :))))))))))

Ashok D said...

அறிமுகங்களுக்கு நன்றி. அதில் ஒரு முகம் தான் நான் படித்த முகம். இரு கவிதைகளும் சூப்பர். இந்த பதிவில் மறுபடியும் ஒரு நல்ல இலக்கியவாதி என நிருபித்துள்ளீர்.


என்னை சாரு, எஸ்ரா levelil வைத்தது, மிக்க மகிழ்ச்சியை கொடுத்தது :)

KARTHIK said...

தல ரௌத்ரன் அப்பப்போ கொஞ்சம் எழுதுகிட்டுதான் இருக்கார்

http://roudran4.blogspot.com/

Venkatesh Kumaravel said...

நல்ல அறிமுகம்ணே... நிறைய புதுசு புதுசா வழிகாட்டுறீங்க... அறிமுகங்களுக்கு நன்றி!

பித்தன் said...

உங்களுக்கும், விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்

Anonymous said...

அப்ப cascade ல ஒரு விருந்து இருக்குன்னு சொல்லுங்க.

உங்க சாமர்த்தியமான ”பின்குறிப்பை” ரசித்தேன்.

நேசமித்ரன் said...

தங்களின் வாசிக்கும் பிரதிகளில் நானும் ஒருவனாக இருப்பதில் மிக்க மகிழ்ச்சி
உங்களைப் போன்ற படைப்பாளிகளின் அன்பும் அங்கீகாரமும் மேலும் பொறுப்புணர்ச்சியை கூட்டுவதாய் இருக்கிறது
வாழ்த்து
பெற்றதற்கும் நீங்கள் கொடுப்பவர்கள் அனைவருக்கும்

கார்க்கிபவா said...

தல,

முதல் பின்னுட்டம்.. அந்த 15 கணக்கில் வரவு வைத்துக் கொள்ளுங்கள் :)))

பல பேரை அறிந்திருந்தாலும் படித்ததில்லை..

//மற்ற எல்லாவற்றைக் காட்டிலும் readability என்பது முன்னே நிற்கிறது./

இதுவரை விருது கொடுத்த பலரும் தஙக்ள் நண்பரக்ளுக்கே கொடுத்து கொண்டது நெருடலாய் இருந்தது. நீங்கள் அபப்டி செய்ய மட்டிர்கள் என்பது தெரியும். :))

உஙக்ளுக்கும், விருது பெற்றவரக்ளுக்கு வாழ்த்துகள்

Karthikeyan G said...

அறிமுகத்திற்கு நன்றிகள்!!

மதன் said...

என்னையும் மறக்காமலிருந்ததற்கு நன்றி அனுஜன்யா..

ஒருமுறை சுந்தரை தேடித் தேடி வாசிப்பதாக நீங்கள் பாராட்டினீர்கள். இப்போது உங்கள் வாசிப்பும் பிரமிப்பூட்டுகிறது. தொடர்ந்து கலக்குங்கள்!

ஹரன்பிரசன்னா said...

அன்புள்ள அனுஜன்யா,

சீனியர் ஜூனியர் என்றெல்லாம் ஒன்றுமே கிடையாது.

எனக்கு நிறைய பதிவர்களைப் பிடிக்கும். தனித்தனியாக ஏன் பிடிக்கிறது என்றெல்லாம் எழுத வராது என நினைக்கிறேன். அதனால் நான் எழுதாமல் இருந்தால் தவறாக நினைக்கவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

எனது வலைப்பதிவைப் பற்றி எழுதியமைக்கு நன்றி பல.

அன்புடன்
பிரசன்னா

ரௌத்ரன் said...

முதலில் விருது பெற்ற தங்களுக்கும் சக பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்...எனக்கும் இவ்விருதை அளித்துள்ளீர்கள்...மிகவும் நெகிழ்ச்சியாக உணர்கிறேன்...ஆரம்பம் முதல் நீங்கள் அளித்து வரும் தொடர்ந்த ஊக்கத்திற்கு என் நன்றி...

ச.முத்துவேல் said...

/தன் முதல் எழுத்தை எழுதும்
பிஞ்சு விரல்களில்
குடிகொள்கிறது உலகின் குரூரம்/

ஹரனோட இந்தக் கவிதையைப் படிச்சதும் வெக்கமாப்போச்சு எனக்கு. மாறும் முகங்கள்ங்கிற தலைப்புல நான் எழுதியுள்ள முதல் கவிதையில இதையேத்தான் நீட்டி முழக்கி வச்சுருக்கேன்.அதிலேயே தெரிஞ்சுடுது என் அறியாமையும், முதிர்ச்சியின்மையும்.

ச.முத்துவேல் said...

விருதினை ஆக்கப்பூர்வமாய் பயன்படுத்திவிட்டீர்கள்.உங்களின் வாசிப்பும், ஊக்கமளிக்கும் பண்பும் வியப்பிலாழ்த்துகிறது. தொடர்புடைய அனைவருக்கும் வாழ்த்துகள்.

வால்பையன் said...

//இவர்களைத் தவிர்த்து, எனக்கு மிகுந்த வாசிப்பின்பம் தரும் மற்ற பதிவர்களில் உடன் நினைவுக்கு வருபவர்களில் சிலர்:

அய்யனார், ஜ்யோவ்ராம், பெருந்தேவி, அழகியசிங்கர், பைத்தியக்காரன், வா.மணிகண்டன், கென், மாதவராஜ், காமராஜ், முகுந்த் நாகராஜன், தமிழ்நதி, லேகா, R V சந்திரசேகர், கிருத்திகா, சரவணகுமார், காந்தி, முத்துவேல், லாவண்யா, மண்குதிரை, யாத்ரா, நந்தா, அகநாழிகை, மதன், சேரல், பிராவின்ஸ்கா, நேசமித்ரன், முத்துராமலிங்கம், விநாயக முருகன், நரன் என்று நீண்டு கொண்டே போகிறது. //


நல்லவேளை நான் ரவுடி லிஸ்டில் இல்லை!

வாழ்த்துக்கள், உங்களுக்கும் உங்களிடம் விருது பெற்றவர்களுக்கும்!

அத்திரி said...

வாழ்த்துக்கள் அண்ணாச்சி

அத்திரி said...

அண்ணாச்சி நீங்க கலைஞர் மாதிரியே எல்லோருக்கும் இதயத்தில் இடம் கொடுத்திட்டீங்க................... கிகிகிகி

இரா. வசந்த குமார். said...

அன்பு அனுஜன்யா...

மிக்க நன்றிகள் & சந்தோஷங்கள்.

Anonymous said...

லக்கி, நர்சிம், பரிசல், ஆதி, கார்க்கி, அதிஷா, குசும்பன், கேபிள் சங்கர், முரளிகண்ணன், வால்பையன் , வடகரை வேலன், செல்வேந்திரன் போன்ற நிறைய வாசகர்கள் உள்ள பதிவர்கள். வெண்பூ, மஹேஷ், அப்துல்லா, ராமலக்ஷ்மி, ஸ்ரீமதி போன்ற நண்பர்கள்.

அய்யனார், ஜ்யோவ்ராம், பெருந்தேவி, அழகியசிங்கர், பைத்தியக்காரன், வா.மணிகண்டன், கென், மாதவராஜ், காமராஜ், முகுந்த் நாகராஜன், தமிழ்நதி, லேகா, R V சந்திரசேகர், கிருத்திகா, சரவணகுமார், காந்தி, முத்துவேல், லாவண்யா, மண்குதிரை, யாத்ரா, நந்தா, அகநாழிகை, மதன், சேரல், பிராவின்ஸ்கா, நேசமித்ரன், முத்துராமலிங்கம், விநாயக முருகன், நரன்

//

நீங்கள் சொன்ன அத்தனை பேரையும் ஆரம்பத்தில் இருந்தே கவனித்து வருகின்றேன்.இதில் என் கணிப்பின்படி அப்துல்லாவும்,வெண்பூவும்,பைத்தியக்காரனும் இன்னும் உயர்ந்த இடத்தை அடைந்திருக்க வேண்டியர்கள். ஏன் முடங்கினார்கள் என்று அவர்களிடம் கேட்டுச் சொல்லுங்கள்.


சுகுமாரன்,
டொரண்டோ.

யாத்ரா said...

ஒரு நிறைவான விருது வழங்கும் விழாவை நேரில் கண்ட மகிழ்ச்சியையும் சிலிர்ப்பையும் தந்தது தங்கள் இந்தப்பதிவு, நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்

Thamira said...

திருத்தமாகச் செய்யப்பட்ட அறிமுகங்கள். இதுவரை தொடராதவர்களை இனி தொடர்வேன்.. நன்றி உங்களுக்கு.! வாழ்த்துகள் விருதுபெற்றவர்களுக்கு.!

விநாயக முருகன் said...

தல நானும் ஒரு ரெளடினு ஊருக்குள்ள பார்ம் ஆகிட்டேன். தேங்ஸ்பா. என்னையும் ரவுடினு அறிமுகப்படுத்தினத்துக்கு இன்னொரு தபா தேங்ஸ்பா.

எம்.எம்.அப்துல்லா said...

/இதில் என் கணிப்பின்படி அப்துல்லாவும்,வெண்பூவும்,பைத்தியக்காரனும் இன்னும் உயர்ந்த இடத்தை அடைந்திருக்க வேண்டியர்கள். ஏன் முடங்கினார்கள் என்று அவர்களிடம் கேட்டுச் சொல்லுங்கள்.

//

நான் முழுநேர எழுத்தாளன் அல்ல. அது என் நோக்கமும் அல்ல. என்னுடைய வாழ்நாள் குறிக்கோள் என் நிறுவனத்தில் உள்ள பொறுப்புகளில் மேலும் மேலும் உயர்வது.அதை அடைந்து கொண்டும் இருக்கின்றேன்.

இருப்பினும் நீங்கள் என்னை வெண்பூ,பைத்தியக்காரனுடன் குறிப்பிட்டு இருப்பதை மிகவும் மகிழ்வாக உணருகின்றேன்.
நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுதுகின்றேன். நன்றி சுகுமாரன்.

(அனுஜன்யா அண்ணே, பதில் சொல்லிட்டேண்ணா)

anujanya said...

@ kartin

வருகைக்கு நன்றி கார்த்தி. மொத ஆளே 'விடுபட்ட பெயர்களுள்' இருப்பது ...சாரி பா.

@ கடையம் ஆனந்த்

வாங்க தல. நன்றி ஆனந்த்.

@ செய்யது

வாப்பா. எல்லாம் உன்னாலதான் :). ஹரன்/ரௌத்ரன் கவிதைகள் எல்லாம் 'தாறு மாறா' தான் இருக்கும் :) நன்றி செய்யது.

@ செந்தழல் ரவி

:)

@ மணிகண்டன்

வாங்க சார். சரி, நீங்களும் இதைத் தொடரலாம். நன்றி மணி.

@ வளர்மதி

குசும்பு எல்லாம் இல்ல வளர். உண்மையா நான் உணர்வது தான்.

உன்ன மாதிரி சிந்தனையாளர்கள்/கட்டுரையாளர்கள் (நம்ம பொது பாஷையில் சொல்வதானால் 'Non-fiction' ஆசாமிகள்) இந்த மாதிரி விளையாட்டுக்கெல்லாம் சேர்த்துக் கொள்ளப்படமாட்டார்கள்.

ஆனாலும், இந்த தருணத்தில் சொல்லிக்கொள்வது : வளர்/ ஜமாலன்/ நாகர்ஜுனன்/ சன்னாசி இவர்கள் எழுத்துக்களையும் முட்டி மோதியாவது படிப்பதும் என் வழக்கம்.

எத்தனை வாசிப்பு! எத்தனை கட்டுரைகள்! எத்தனை கருத்தாக்கங்கள்!

In my view, you people are the unsung heroes in blogdom.

நன்றி வளர் - யாவற்றுக்கும்.

@ ராஜாராம்

வாங்க ராஜா. ஆம், அன்பு சில சமயம் வன்முறை பூதமும் ஆகலாம். அலாவுதீன் துணையுடன், அவ்வப்போது தேய்த்து அன்பை எடுத்துக்கொள்வோம். நன்றி ராஜா.

@ ஜமால்

உங்கள என்ன சொல்றது ஜமால்! உங்களைப் பத்தி தனிப் பதிவே போடணும். நான் மட்டுமில்ல. நிறைய பேர். ஒரு பிரதி பலனும் பார்க்காமல், ஒரு பேதமும் பாராட்டாமல், தொடர்ந்து இவ்வளவு பேரை ஊக்குவிப்பது என்பது .... நீர் பெரியவர் அய்யா!

நன்றி ஜமால்.

@ ஸ்ரீதர்

ரொம்ப நாட்களாக மனதில் இருந்ததை வெளியில் சொல்ல இந்த விருது ஒரு வாய்ப்பாக இருந்தது ஸ்ரீதர். உண்மையிலேயே நான் பொறாமைப்படும் எழுத்துக்கள் உங்கள் மற்றும் வசந்த்தின் பதிவுகள். அவ்வளவு வெரைட்டி.

வாழ்த்துகள் மற்றும் நன்றி ஸ்ரீதர்.

@ கேபிள்

புரிதலுக்கு நன்றி கேபிள்.

@ ராமலக்ஷ்மி

வாங்க சகோ. என்ன ஒரு வில்லித்தனம்! :))) நன்றி சகோ.

@ பரிசல்

கே.கே., நீங்க என்ன புகழ்ந்தாலும், அது என்னவோ தெரியல. நிஜமாவே சீரியஸா எடுத்துக்கறேன் :). நன்றி கே.கே.

@ ரீனா

அப்படி எல்லாம் ஒண்ணுமில்ல ரீனா. இன்னும் கொஞ்சம் பேருக்குத் தரலாம்னா, நிச்சயம் நீங்களும் அதுல இருப்பீங்க. உங்கள் பதிவுகள் நல்லா சுவாரஸ்யம்தான்.

நன்றி ரீனா.

@ விதூஷ்

நன்றி கவிதாயினி :)

@ நர்சிம்

வாங்க பாஸ். நன்றி.

@ இரசிகை

உங்கள் முதல் வருகை? நன்றி.

@ குணசீலன்

உங்கள் முதல் வருகை. உங்கள் வலைப்பூவில் கற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கிறது. நன்றி.

@ அமித்து.அம்மா

வாங்க. ராமலக்ஷ்மிக்கு சொன்னது தான் உங்களுக்கும் :) ஒரு குருப்பாத்தான் வரீங்க. நன்றி A.A.

@ அசோக்

வாங்க கவிஞர்.

//என்னை சாரு, எஸ்ரா levelil வைத்தது, மிக்க மகிழ்ச்சியை கொடுத்தது :)//

Thats the spirit! நன்றி அசோக்.

@ கார்த்திக்

வாங்க கார்த்திக். ஆமாம், இப்பதான் பார்த்தேன். வலைப்பூ புதுசு போல இருக்கு.

நீங்களும் கலக்குறீங்க. நேரம் கிடைக்கும் போது வரேன். நன்றி கார்த்திக்.

@ வெங்கிராஜா

நன்றி வெங்கி.

@ பித்தன்

ஹாய், இப்ப தான் உங்க தளம் சென்று பார்த்தேன். நிறைய எழுதுறீங்க. சுவாரஸ்யமாக! மெல்ல டைம் கிடைக்கும் போது நிச்சயம் வரேன். கலக்குங்க பாஸ். நன்றி உங்கள் முதல் வருகைக்கு.

அனுஜன்யா

anujanya said...

@ வேலன்

நீங்க வந்தா Cascade இல்லாமலா? ரசிப்பீர்கள் என்று தெரியும் :) நன்றி வேலன்

@ நேசமித்ரன்

வாங்க நேசமித்ரன். அன்பு என்னைக்கும் உண்டு. தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.

@ கார்க்கி

என்னது 15 ஆ? அதுக்கு அப்புறம் ரெண்டு சீரோ எங்க போச்சு?

நன்றி கார்க்கி.

@ கார்த்திகேயன்

நன்றி கார்த்தி.

@ மதன்

வாங்க மதன். உங்கள எப்படி மறக்க முடியும். என்ன, இன்னும் கொஞ்சம் அடிக்கடி எழுதலாம் நீங்க. சுந்தரின் வாசிப்பு அலாதியானது. நெருங்க முடியாது.

நன்றி மதன்.

@ ஹரன்பிரசன்னா

வாங்க ஹரன். நிறைய நாட்களாக எழுதுகிறீர்கள் என்று குறிப்பிட அப்படி சொன்னேன். No probs Haran. முயலுங்கள். உங்களால் முடியாதது இல்லை. ஒரு வேளை முடியாமல் போனால், கூடுதலாக இரண்டு கவிதைகள் எழுதி விடுங்கள் :)

நன்றி உங்கள் வருகைக்கு.

@ ரௌத்ரன்

வாங்க ஹீரோ. அதுக்குள்ளே தொடரும் போட்டாச்சா? இதே சுறுசுறுப்பை பதிவு எழுதுவதிலும் காட்டுறது! நன்றி ரௌத்ரன்.

@ முத்துவேல்

உங்களுக்கும் ஹரனின் அந்தக் கவிதை பிடித்ததில் மகிழ்ச்சி முத்து. நன்றி முத்து.

@ வால்பையன்

//நல்லவேளை நான் ரவுடி லிஸ்டில் இல்லை!//

ஹலோ குரு, அதுக்கு மேலே ஒரு பட்டியல் இருக்கே! அவர்களுக்கு என்ன பெயர்?

நன்றி குரு.

@ அத்திரி

//கலைஞர் மாதிரியே எல்லோருக்கும் இதயத்தில் இடம் கொடுத்திட்டீங்க................... //

குசும்புயா உனக்கு. இருக்கட்டும். நன்றி அத்திரி.

@ வசந்த குமார்

வாங்க வசந்த். ரொம்ப நாட்கள் நினைத்தது. நன்றி வசந்த்.

@ சுகுமாரன், டொரோண்டோ

அப்துல் உங்களுக்கு பதில் சொல்லிவிட்டார். பைத்தியக்காரன் வேலைப் பளுவில் இருந்து இப்போது தான் கொஞ்சம் கொஞ்சம் மீண்டு, ஓரளவு எழுதத் துவங்கி இருக்கிறார். வெண்பூவுக்கு இப்போது அலுவலகத்தில் கெடுபிடி அதிகம். ஆனாலும் இந்த மூவரும் உங்கள் ஆசைப் படியே பரிமளிப்பார்கள்.

நன்றி சுகுமாரன்.

@ யாத்ரா

நன்றி யாத்ரா.

@ ஆதி

வாங்க பாஸ். நன்றி

@ விநாயகமுருகன்

ரவுடித்தனம் (கவிதை எழுதுவது) செய்தால், அப்புடித்தான்! நன்றி வி.மு.

@ அப்துல்

தாங்கள் நான் கூப்பிட்டதற்கு இணங்கி, இங்கு வந்து விளக்கம் அளித்ததற்கு மிக்க நன்றி அய்யா.

இனிமேலும் நேரம் கிடைக்கும் பட்சத்தில் இங்கு வருமாறு அன்புடன் அழைக்கிறேன். பார்த்து ஆவன செய்யுங்கள்.

அனுஜன்யா

எம்.எம்.அப்துல்லா said...

//இனிமேலும் நேரம் கிடைக்கும் பட்சத்தில் இங்கு வருமாறு அன்புடன் அழைக்கிறேன். பார்த்து ஆவன செய்யுங்கள்.

//

நான் இங்க வர்றதில்லைனு யாரு சொன்னா?? பின்னூட்டம் மட்டுமே இடுவதில்லை. போன் பண்ணுங்க இதுவரை நீங்க எழுதுனதெல்லாம் தலைகீழா ஓப்பித்துக்காட்டுறேன். அப்பவாச்சும் நம்புண்ணே :))

TKB காந்தி said...

என் கவிதைகளை பிரத்யேகமாக அவளுக்காகவே எழுதுகிறேன், அவை நீங்கள் குறிப்பிடும் அளவுக்கு இருப்பதில் மிக்க மகிழ்ச்சி, நன்றி அனுஜன்யா. உங்கள் பட்டியலில் அனேகமானவர்கள் எனக்கு தெரியாது என்பது வருத்தமான விஷயமே, பகிர்தலுக்கு நன்றி :)

Bee'morgan said...

ஹைய்யோ.. அண்ணா..? இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலியா..? :P

Bee'morgan said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.. :)

அண்ணா, உங்க கூட எங்களுக்கு விருது கொடுத்த செய்யதுக்கு தான் முதல் நன்றி.. :)
நாங்கதான் பெருமைப்படனும்..

Bee'morgan said...

உங்களுக்கு நான் பின்னூட்டமிட்டு கொஞ்ச நாட்கள், இல்லையில்லை ரொம்ப நாட்கள் ஆகின்றன..
தவறாக நினைக்க வேண்டாம்.. ஒரு வகை தயக்கம்தான்.. ஆரம்பித்த அன்று இருந்த அனுஜன்யாவிற்கும்
இன்றைக்கும் இடையிலான பரிணாமம் ரொம்ப பயங்கரமானது.. அன்னைக்கெல்லாம் நம்ம கூட இருக்கும் இன்னுமொருவர்
அப்படிங்கற எண்ணத்திலதான் ஆரம்பிச்சது.. அது அப்படியே படிப்படியா மாறி, அன்னாந்து பார்க்கும் நிலை வந்தப்போ,
படிச்சுப் பாத்து சந்தோசப்படறதோட முடிஞ்சிடுது. பின்னூட்டமிடறதுக்கே ஒரு தகுதி வேணும்கற அளவில் நீங்க வளந்து நிக்கறீங்க..

ச்சும்மா சொறியறதுக்காக சொல்வதாக எண்ணவேண்டாம்.. ரொம்ப நாட்களாக நான் சொல்ல நினைத்தது..

உங்கள் எழுத்துப் பயணம் இன்னும் தொடரட்டும்..
நட்புடன்,
பாலா..

Unknown said...

//விடுபட்ட பெயர்களுக்குச் சொந்தக்காரர்களின் கவனத்திற்கு: உங்களை கிட்டத்தட்ட சுஜாதா, எஸ்ரா, ஜெமோ, சாரு போன்ற உயர்ந்த எழுத்தாளர்களின் இடத்தில் நான் வைத்திருப்பதாக பாவித்துக்கொண்டு, மன்னித்து விடுங்கள்.//

அதெல்லாம் செல்லாது செல்லாது... ;))))) விருது பெற்றதுக்கு வாழ்த்துகள் அண்ணா... :))

எம்.எம்.அப்துல்லா said...

//உங்களுக்கு நான் பின்னூட்டமிட்டு கொஞ்ச நாட்கள், இல்லையில்லை ரொம்ப நாட்கள் ஆகின்றன..
தவறாக நினைக்க வேண்டாம்.. ஒரு வகை தயக்கம்தான்.. ஆரம்பித்த அன்று இருந்த அனுஜன்யாவிற்கும்
இன்றைக்கும் இடையிலான பரிணாமம் ரொம்ப பயங்கரமானது.. அன்னைக்கெல்லாம் நம்ம கூட இருக்கும் இன்னுமொருவர்
அப்படிங்கற எண்ணத்திலதான் ஆரம்பிச்சது.. அது அப்படியே படிப்படியா மாறி, அன்னாந்து பார்க்கும் நிலை வந்தப்போ,
படிச்சுப் பாத்து சந்தோசப்படறதோட முடிஞ்சிடுது. பின்னூட்டமிடறதுக்கே ஒரு தகுதி வேணும்கற அளவில் நீங்க வளந்து நிக்கறீங்க..

//

அருமை!அருமை!

இதேதான் பலநாட்களாக நான் அனுஜன்யா அண்ணனிடம் சொல்லிக்கொண்டு இருக்கின்றேன்.

ஆதவா said...

நீங்கள் விருது கொடுத்ததைக் காட்டிலும் அவர்களை எடுத்துச் சொல்லியிருப்பதே மிகவும் சிறப்பாக எனக்குப் படுகிறது!!

anujanya said...

@ அப்துல்லா

ஓகே ஓகே அப்துல். சும்மா உன்னைய சீண்டுவதில் ஒரு அலாதி திருப்தி. ஆனாலும், அப்பப்ப பின்னூட்டம் போட்டாதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு. இல்லாட்டி, பயபுள்ளைக்கு நம்ம மேல என்ன கோவமோ/வருத்தமோன்னு ஒரு பயம் வருமில்ல?

@ காந்தி

'அவளுக்காகவே'? அட்ரா சக்கை! அட்ரா சக்கை!

பட்டியலில் இருப்பவர்கள், அப்புறம் கீழே குறிப்பிட்டவர்கள் என்று நிறைய வலைப்பூக்கள் இருக்கு காந்தி. கொஞ்சம் 'அவர்களுக்கும்' நேரம் ஒதுக்கலாம் :)
நன்றி காந்தி.

@ Bee'morgan (இந்தப் பெயரை இப்படி டைப் செய்தே எவ்வளவு மாதங்கள் ஆச்சு!)

வா பாலா, மேலே அப்துலுக்குச் சொன்னதுதான் உனக்கும். முதன்மையாய் நாம் நண்பர்கள். ஹிட்ஸ், பின்தொடர்பவர்கள், பின்னூட்டங்கள் இவற்றை வைத்து நீயாகவே எனக்கு ஒரு உயரம் தந்து, ஒதுக்கினால், அது உண்மையில் விசனம் தான் தருது. நான் அதே தத்துப் பித்துதான் இன்னமும்.

இது போன்ற தயக்கங்கள் இருந்தால், நான் ஜ்யோவ், அய்ஸ், வளர் போன்றவர்களிடம் நெருங்கி இருக்க முடியுமா? நம்மால் முடிந்ததை நாம் எழுதுகிறோம். அவர்கள் வீச்சு வேறு. நம்ம தளம் வேறு.

உன்னோட தளத்துக்கு வந்து நிறைய முறை பாத்தேன். அப்ப நீ அலுவலக வேளையில் பிசியா இருந்திருப்ப. சரி, நிலைமை சரியானதும் தானா வருவன்னு நினைச்சா, இப்பிடி ஒரு குண்டு போடுற. செல்லாது செல்லாது பாலா. எப்பவும் போல தொடர்பில் இருப்போம். மற்றபடி யாவரும்/ யாவையும் நலந்தானே?

@ ஸ்ரீமதி (இனிமே ரெண்டு தடவ சொல்லணுமோ 'ஸ்ரீமதி.ஸ்ரீமதி' என்று?)

ஏன் செல்லாது? உன் பேர்தான் 'நண்பர்கள்' லிஸ்டுல இருக்கே?

சரி சரி, 'அவர்' எப்படி உன்னைச் சமாளிக்கிறார்னு ஒரு தொடர் பதிவு போடலாமே :)

@ அப்துல்

டேய் டேய் அடங்கு மாப்ள.

@ ஆதவா

நன்றி ஆதவா. திரும்ப எழுத வந்ததற்கும், இங்கு வந்ததற்கும். தொடர்ந்து எழுதுங்கள்.

அனுஜன்யா

Bee'morgan said...

:)அண்ணா,
இங்கு யாவரும்/யாவையும் நலமே.. !
//
(இந்தப் பெயரை இப்படி டைப் செய்தே எவ்வளவு மாதங்கள் ஆச்சு!)
//
கவலையே படாதீங்க.. இனிமே நீங்க அடிக்கடி டைப்பண்ண வேண்டி வரும்.. :)

Unknown said...

நான் மற்றவர்கள் உரிமைக்காக போராடினேன்.. ;))

என்னது தொடர்பதிவா?? ஹாஹாஹா இன்னும் கொஞ்ச நாள்ல என்ன எப்படி சமாளிக்கறதுன்னு ஐடியா கேட்டு அவர் பதிவு போடுவார்... ;)))) ஆலோசனை சொல்ல ரெடியா இருங்க... :P

anujanya said...

@ Bee'morgan

அது அது. அங்க வந்து பார்க்கிறேன். நன்றி பாலா.

@ ஸ்ரீமதி

//இன்னும் கொஞ்ச நாள்ல என்ன எப்படி சமாளிக்கறதுன்னு ஐடியா கேட்டு அவர் பதிவு போடுவார்... ;)))) //

அடப் பாவமே! சரி இப்ப யோசிச்சு என்ன பிரயோசனம்! அவருக்கு ஆதியோட நம்பர் தரேன் :)

அனுஜன்யா

ஜோதிஜி said...

உங்கள் எழுத்துப் பயணம் இன்னும் தொடரட்டும்..