Tuesday, June 22, 2010

(நர்சிம்மைப்) பற்றியும் பற்றாமலும்

எவ்வளவு நல்ல விஷயமாக இருந்தாலும் ஒரு முடிவுக்கு வருவதென்பது தவிர்க்க முடியாதது தானே! அதனால்... நான் மீண்டும் எழுத வந்துவிட்டேன்.



முதலில் கனடா நாட்டுக்கு அலுவல் நிமித்தம் சென்றிருந்தேன். பிறகு விடுமுறைக்கு உத்தர்கான்ட் மாநிலத்தில் சில இடங்களுக்குச் சென்றிருந்தேன். அதனால் பல நாட்கள் தமிழ் இணையம் அருகிலேயே வர முடியாத இனிமையான சூழல். சாவகாசமான ஒரு சனி (என்ன ஒரு குறியீடு!) மாலையில் தமிழ்மணத்தைத் திறந்தால் ... மன்னிக்கவும் நெடி தாங்க முடியவில்லை. Pulp Fiction படம் பார்ப்பது போல் எந்தப் பதிவை முதலில் படிப்பது, எது அதற்கான எதிர்வினை என்று புரிந்து கொள்ள முடியாத சிக்கல். முதலில் ஆர்வமாக, பிறகு அதிர்ச்சியாக, மேலும் ஆபாசமாக முடிவில் ஆயாசமாக எல்லாவற்றையும் படித்து முடித்தேன்.


விரிவாகச் சொல்ல நிறைய இருந்தாலும், ஒன்றும் சொல்லாமல் இருப்பதே குறைந்த பாதிப்பு தருவதாக அமையும் என்று தோன்றுவதால் ஒன்றும் சொல்லப்போவதில்லை. கிடைக்கும் கெட்ட பெயர்களில் 'கள்ள மௌனம்' ஓரளவு பரவாயில்லை என்பதும் ஒரு காரணம். ஆயினும் ஒரு சில எண்ணங்களைச் சொல்ல வேண்டுமென்றும் தோன்றுவதால்:


நர்சிம் எழுதிய புனைவை மிக சிரமப்பட்டு தேடிக் கண்டுபிடித்துப் படித்தேன். மிகத் தரக் குறைவாக எழுதப்பட்டது. நிச்சயம் கண்டிக்கப் பட வேண்டிய எழுத்து. நான் அவருடைய 'நண்பர்கள்' பட்டியலில் இடம் பெறுபவன். ஆம், இன்றும் கூட. அதனால் அதற்கு உரிய அதிக பொறுப்பும் வெட்கமும் எனக்கும் இருக்கிறது. அவரிடம் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசினேன். எனது வருத்தத்தையும், வலுவான கண்டனங்களையும் தெரிவித்தேன். நான் பேசியபோது இருந்த நர்சிம் பெரிதாக சறுக்கியவர். ஆனால் அந்த வருத்தத்துடன் ஒரு நைந்து போன உள்ளத்தையும் உணர முடிந்தது.


வக்கிர எண்ணங்களே என்னிடம் இல்லை என்று சத்தியம் செய்யும் கனவான்களையும், நாரிமணிகளையும் நமஸ்கரித்து விட்டு விடுவோம். மீதமுள்ள பெரும்பாலோரான நமக்குள் ஆழ் மன வக்கிரங்கள் இருக்கத்தான் செய்யும் - பல சமயம் நமக்கே தெரியாமல். அவற்றை பிறரிடம் பேசும்போதே தவிர்த்து விடுதல் உசிதம். அதையும் மீறி பேசிவிட்டாலும், எழுதுவது என்பது ஒரு வழிப் பாதை. திரும்பப் பெற முடியாதது. அப்போது அதீத கவனம் தேவை. இவ்வாறு பேசுதல், பிறகு எழுதுதல் முதலிய காரியங்களுக்கு முன் வார்த்தைகளையும், வாக்கியங்களையும் சல்லடையில் போட்டு சலித்த பின்பே - குறிப்பாக கோபத்தின் வசத்தில் இருக்கையில் - வெளிக்கொணர்தல் கற்றோருக்கும், நாகரீகம் அறிந்தோருக்கும் அழகு. இந்த விஷயத்தில் நர்சிம் நம்ப முடியாத அளவுக்கு சறுக்கி இருக்கிறார். அதற்கான பலனாக வட்டியும் முதலுமாகப் பெற்றும் இருக்கிறார்.


மற்றபடி அவரை ரவுண்டு கட்டி அடித்த மற்ற எல்லா நல்லவர்களுக்கும்.... ஆத்மநாமின் இந்தக் கவிதையை சமர்ப்பிக்கிறேன்.

இந்த செருப்பைப்போல்
எத்தனைபேர் தேய்கிறார்களோ
இந்தக் குடையைப்போல்
எத்தனைபேர் பிழிந்தெடுக்கப்படுகிறார்களோ
இந்தச் சட்டையைப்போல்
எத்தனைபேர் கசங்குகிறார்களோ
அவர்கள் சார்பில்
உங்களுக்கு நன்றி


இத்துடனாவது விட்டதற்கு


சரிந்து விழுந்த பிரபலங்கள், நட்புக்குப் புது இலக்கணம் வகுத்தவர்கள் மற்றும் வெற்றி கொண்ட புரச்சி வீரர்கள் நடுவே நான் வியந்தது மணிகண்டனின் அபாரமான, பாரபட்சமற்ற பின்னூட்டங்கள், கல்வெட்டு அவர்களின் 'நச்' கருத்துகள் மற்றும் 'அதுசரி' என்னும் பதிவரின் நேர்மையான கண்டனங்களும், அதற்குப் பின்பான வாதங்களும்.


இப்போதெல்லாம் தமிழ் வலைகளைப் படித்தாலே என் முகம் பீதியில் வெளிறுவதைக் கண்ட என் சகோதரனிடம் பேசிக்கொண்டே என் மனைவி கொடுத்த காபி கோப்பையை வழக்கம் போல அலட்சியமாக இடது கையில் வாங்கப் போனவன், கண நேரத்தில் சுதாரித்துக்கொண்டு பணிவுடன் இருகைகளிலும் கோப்பையைப் பெற்றுக்கொண்டேன். 'இன்னாபா மேட்டரு; அளவுக்கதிகமா அண்ணிய கும்புடற?' என்ற சகோதரனிடம் ஆணாதிக்கவாதிகளின் அபாயகரமான நிலையைச் சொல்லி அங்கலாய்த்தேன். அவன் 'என்னது? காப்பி நீ போடுவதில்லையா? உங்க தமிழ்மணத்தில் போட்டுக் கொடுக்கட்டுமா உண்மைகளை' என்று பயமுறுத்துகிறான். ஆமாம், புடவைகளைத் துவைக்க சிறந்த சோப்பு ஏரியலா சர்ஃப் எக்ஸல்லா பாஸ்?

37 comments:

வெண்பூ said...

என் அனுப‌வ‌த்தில் ச‌ர்ஃப் எக்ச‌ல் மேட்டிக்... ஹி..ஹி.. :)

ந‌ல்ல‌ ப‌திவு அனுஜ‌ன்யா.. சிறிய‌தாக‌ இருந்தாலும் சிற‌ப்பாக‌ எழுதியிருக்கிறீர்க‌ள்.

ஷர்புதீன் said...

உங்க தலைக்கு பின்னாளே ஒளி வட்டம் வர்ற அளவிற்கு பெரிய ஆளாயிட்டீன்களா சார்? உங்க profile photo வில் தெரியுதே அத சொன்னேன் சார்......

இப்படிக்கு
எப்படியாவது வம்பலப்போர் சங்கம்

Vijayashankar said...

Surf Excel in Automatic Washing Machine!

Santhappanசாந்தப்பன் said...

கவிதை.. சரியான அடி..

ஏரியல் ட்ரை பண்ணி பாருங்க!

☼ வெயிலான் said...

// சிறந்த சோப்பு ஏரியலா சர்ஃப் எக்ஸல்லா பாஸ்? //

சபாஸ்! :)

மாதவராஜ் said...

வேறு எதைப் பற்றியும், பற்றாமலும் சொல்லப் போவதில்லை.

உங்களைத் தொடர்ந்து வாசிக்கிறவன் என்கிற முறையில்,உங்கள் எழுத்துக்களின் மீது நேசம் கொண்டவன் என்கிற முறையில் ஒன்றுதான் சொல்லத் தோன்றுகிறது. கடைசிப் பத்தியில் தொனிக்கும் கிண்டலை ரசிக்க முடியவில்லை. சகிக்கவும் முடியவில்லை. எனக்கும் சில ஆத்மாநாம் கவிதைகள் சொல்லத்தான் தோன்றுகின்றன!

Cable சங்கர் said...

சீ.. தூ.. திருந்தவே மாட்டியா.. அனுஜன்யா.. இதை நான் எழுதலை..:)

கலகலப்ரியா said...

||வெற்றி கொண்ட புரச்சி வீரர்கள்||

:)

கலகலப்ரியா said...

||மற்றபடி அவரை ரவுண்டு கட்டி அடித்த மற்ற எல்லா நல்லவர்களுக்கும்.... ஆத்மநாமின் இந்தக் கவிதையை சமர்ப்பிக்கிறேன்.

இந்த செருப்பைப்போல்
எத்தனைபேர் தேய்கிறார்களோ
இந்தக் குடையைப்போல்
எத்தனைபேர் பிழிந்தெடுக்கப்படுகிறார்களோ
இந்தச் சட்டையைப்போல்
எத்தனைபேர் கசங்குகிறார்களோ
அவர்கள் சார்பில்
உங்களுக்கு நன்றி


இத்துடனாவது விட்டதற்கு||

விட்ட மாதிரித் தெரியல...

கலகலப்ரியா said...

||'அதுசரி' என்னும் பதிவரின் நேர்மையான கண்டனங்களும்||

ம்ம்...

butterfly Surya said...

சிறந்த சோப்பு ஏரியலா சர்ஃப் எக்ஸல்லா ..??

நீயா நானாவுக்கு ஒரு தலைப்பு கிடைத்து விட்டது..

Anonymous said...

பீட்டர் தாங்க முடியலையே அனுஜன்யா. நீங்க எங்கே போனீங்க வந்தீங்க என்றெல்லாம் கேட்டோமா? கிட்டக்க இருந்துக்கிட்டே தூர இருப்பது, தூர இருந்தாலும் கிட்டக்க இருந்த மாதிரி காட்டுவது பேர்தான் பற்றியும் பற்றாமலா?

Sri said...

// ஆமாம், புடவைகளைத் துவைக்க சிறந்த சோப்பு ஏரியலா சர்ஃப் எக்ஸல்லா பாஸ்?

ஏரியலில் ஊற வைத்து surf இல் துவைக்கவும்.

a said...

அனுஜன்யா - நல்லதொரு இடுகை.

தராசு said...

இன்னா தல, இங்க எல்லா வெட்டு குத்தும் முடிஞ்சு, ஒடுங்குனதெல்லாம் தட்டி எடுத்து, பட்டி பாத்து டிங்கரிங் பண்ணதுக்கப்புறம் என்ட்ரி குடுக்கறயே,இது நியாயமா தல????

Mohan said...

ஏன் ஏரியல்,சர்ஃப் எக்ஸல் விளம்பரத்திலெல்லாம் இன்னும் பொண்ணுங்களே வந்துக்கிட்டுருக்காங்க? ம்..விளம்பரத்திலாவது பொண்ணுங்க துவைக்கிற மாதிரி இருக்கட்டும்னா!

ராம்ஜி_யாஹூ said...

why to open again that old matter, Its frustrating and tiring pls

Vidhoosh said...

வந்தேன்.

கள்ள மௌனம் கடைபிடிக்கிறேன்.

Anonymous said...

விட்டது சனி என்று இருந்தோம் , மீண்டும் தொடங்கிவிட்டீர்களா?

இதற்கு எதிர்ப்பதிவு வரும் முன்னே ,தமிழ் மனம் தயவு செய்து மீண்டும் தன் வாசகர் பரிந்துரையை தற்காலிகமாக நிறுத்துமா?

துமிழ் . (சாரி sign in பண்ண முடியல)

பரிசல்காரன் said...

துவைத்த பிறகு கம்ஃபர்ட்டில் அலச மறந்துவிடாதீர்கள்.. ப்ளீஸ்.. நல்ல பாராட்டு கிடைக்கிறது.

நந்தா said...

கேவலமா இருக்கு.

ஊரே அடங்கிப் போனதுக்கப்புறம் நீங்க நல்ல பேரு எடுக்கிறதுக்கு இப்படி ஒண்ணு தேவ்வையா?

மாதவராஜ் சொன்னது போல கடைசிப்பத்தியில் தொனிக்கும் கிண்டல் பயங்கர எரிச்சல்.

ஆத்மாநாம் என்ன, எக்கச்சக்கமான கவிஞகளின் கவிதைகள் றைந்து கிடக்கின்றன சொல்வதற்கு. சொல்ல விரும்ப வில்லை.

VJR said...

'கனடாவில் அனுஜன்யா' தொடரைப் படிக்கவும்,'உத்தர்காண்ட்டின் சிறப்பு'ம் படிக்க மிக ஆவலாய் உள்ளேன்.
இதிலிருந்து நீங்கள் ஒரு உலகம் சுற்றும் வாலிபர் என்பதையும், வேலை வெட்டி அதிகம் உள்ளவர் என்பதை எமக்கு உணர்த்தியப்பாங்கு செம்மொழிமாநாட்டில் சேர்க்கவேண்டியப்பகுதி.

சேலையத் துவைக்க என்ன பயன்படுத்த வேண்டும் என்றுக் கேட்டதன் மூலம், ஒரு ஆண் என்றால் அது "அனுஜன்யா"தான் என்பதை அழகாக உணர்த்தியுள்ளதைப் பாராட்டாமல் போனால் எனக்கு மோட்சம் கிடைக்காது.

மொத்தத்தில் 'இந்த' விசத்தில் சாரி, விசயத்தில் வந்த இடுகையில் இதுதான் சிறப்பான இடுகை என்பதை ஐயமின்றி உணர்கிறேன்.

மிக்க நன்றி.

கமலேஷ் said...

ஆத்மா நாமின் கவிதை ஒகே
ரொம்ப பொருத்தம் தான் நீங்க சொன்ன விசயத்திற்கு..

Kumky said...

இதை எழுதியமைக்கு கள்ள மவுனமே மேல்..

anujanya said...

நிறைய அனானி (ஆபாசமாக இருந்த) பின்னூட்டங்களை நிராகரித்ததில் தவறுதலாக இந்தப் பின்னூட்டமும் நிராகரிக்கப் பட்டிருந்தது. தவறுக்கு மன்னிக்கவும்.

Anonymous said

உங்கள் கவிதைகளைப் போலவே கேவலமான ஒரு பதிவு. புண் ஆறிவரும்போது காயத்தைச் சொறிவதில் என்ன சுகம் உங்களுக்கு?

//மற்றபடி அவரை ரவுண்டு கட்டி அடித்த மற்ற எல்லா நல்லவர்களுக்கும்.... //

ஏன்? தப்பு செய்தவரை தட்டிக் கேட்கக் கூடாதா? அதற்கேன் உங்களிடம் இவ்வளவு நக்கல்? அவர் 'இப்பொழுதும்' உங்கள் நண்பர் என்பதாலா?

பொதுவெளியில் யார் தப்பு செய்தாலும் தட்டிக் கேட்கத்தான் செய்வோம். உங்கள் பாஷையில் ரவுண்டு கட்டி அடிக்கத்தான் செய்வோம்.

முதலில் இப்படி கீழ்த்தரமான வழியில், எழுத்தில் பிரபலம் தேடுவதை நிறுத்துங்கள்.

anujanya said...

பின்னூட்டமிட்ட எல்லோருக்கும் நன்றி. நிறைய பேருக்கு இந்த இடுகை எரிச்சலும், சினமும் தருகிறது என்று புரிந்து கொண்டேன். குறிப்பாக பின்னூட்டமிட்ட சிலருக்கு மட்டும் பதில் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்.

முதலில் மாதவ். உங்கள் அன்புக்கு நன்றி. உரிமையுடன் எரிச்சலை வெளிப்படுத்தியதற்கும். பெண்ணியம் என்ற பெயரில் வரும் எழுத்துகள் சிலவற்றில் சில கருத்துகள் எனக்கு அசட்டுத்தனமாகப் படுகிறது. குறிப்பிட்டு யாரையும் சொல்ல விரும்பவில்லை. இயலாதும் கூட. என்னைப் பற்றிய பகடியாகத்தான் சொல்ல முடியும். பகடிக்கும் இப்படி பலத்த எதிர்ப்பு என்றால்... வேறு வழி இல்லை. மௌனமாகத் தான் இருக்க வேண்டும்.

நர்சிம் விவகாரத்தைப் பொறுத்தவரை - ஒரு சாதாரண பகடிக்கு அவரின் எதிர்வினை எவ்வாறு பன்மடங்கு அதிகமோ, போலவே, அவருக்குக் கிடைத்த அவமானங்கள் மிகையாகத் தோன்றின. என் அனுமானத்தில் அவர் மேல் நிறைய பேருக்கு இருந்த எரிச்சல், காழ்ப்பு இன்னபிற எதிர்மறை உணர்வுகளையும் இந்தத் தருணத்தில் பயன்படுத்திக் கொண்டது போல் தோன்றியது. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று அனைவரின் மனசாட்சியும் கூறினால், என்னுடைய பார்வை தவறான தருணங்களில் இதுவும் ஒன்று என்று விட்டுவிட வேண்டியதுதான்.

நான் அவருடன் இன்னமும் நட்புடன் இருப்பது என் தனிப்பட்ட விருப்பம். அதற்கான காரணங்களை 'அக்பர் ஆட்சியில் விளைந்த நன்மைகள் யாவை' என்ற கேள்விக்கு விடை சொல்வது போல் பத்து பாயிண்டுகளில் விவரிக்க முடியாது. இவருக்கு நண்பன் என்றால்....
இன்னாருக்கெல்லாம் எதிரி என்ற தலைகீழ் விகிதக் கணக்குகள் இங்கு பலருக்கு சுலபமாக வருவதை வருத்தத்துடன் கடக்க வேண்டியுள்ளது.

இதற்கு மேல் இந்த விவகாரத்தில் சொல்ல ஒன்றுமில்லை மாதவ். அசந்தர்ப்பமான தருணம் என்றாலும் ... நீங்கள் வண்ணதாசனுடன் கழித்த மாலையைப் பற்றிய பதிவு நெகிழ்வாக இருந்தது. நியாயமாக அங்கு வந்து சொல்லியிருக்க வேண்டும். அதற்கான மனநிலை இப்போது இல்லை.

anujanya said...

@ அனானி ஒருவருக்கு..

பீட்டர் தாங்க முடியவில்லை. உங்கள் பயண விவரம் எதற்கு. மேலும் பொய் சொல்கிறீர்கள். இவைகள் உங்கள் நக்கலான குற்றச்சாட்டுகள். பாஸ், pulp fiction என்பதைத் தவிர்த்து ஆங்கில வார்த்தைகள் இல்லாத பதிவு இது. பயண விவரம்..சரிதான். மற்றபடி என் நேர்மையை சந்திக்கும் உங்களை மன்னிப்பது தான் சரியான தண்டனை.

anujanya said...

நந்தா அவர்களுக்கு:

உங்களுக்கான பதில் மாதவுக்கு சொன்னவற்றில் இருக்கிறது. நல்ல பெயர் எடுப்பதற்காக இதை எழுதியிருப்பதாகச் சொல்வது நிச்சயம் காயப்படுத்துகிறது நந்தா. எனக்கு உள்ளத்தில் பட்டதை எழுதினேன். நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்றால் அரசியல் சரிநிலைகளுடன் பார்ப்பனியம், ஆணாதிக்கம், முதலாளித்துவ பொருளாதாரம் இவைகளை சரியான விகிதத்தில் சாட வேண்டும் என்னும் தமிழ் இணையத்தின் பாலபாடம் ஓரளவு எனக்கும் புரிந்திருக்கிறது. அதெல்லாம் இல்லை உன் முகமூடி கிழிந்தது என்று எண்ணுவீர்கள் என்றால்.. நல்லது.. ஒவ்வொருவரும் பல்வேறு முகமூடிகளுடன்தான் திரிகிறோம்..

anujanya said...

VJR அவர்களுக்கு:

உங்களுக்கும் கோபம் மற்றும் எரிச்சல் இருந்தாலும், பொதுவாகப் பகடியாகச் சொல்லியிருந்ததை ரசிக்கத்தான் வேண்டும். குறிப்பாக நான் வேலை-வெட்டி அதிகம் உள்ளவன் என்று என்னுடைய பாஸ் தான் நக்கலாகச் சொல்வார். என்னுடைய நட்புகளுடன் என்னுடைய பயணங்களும் எரிச்சல் தருபவையாக உள்ளன என்பது தெரிகிறது. பயப்படாதீர்கள்...இந்தப் பயணக் கட்டுரைகள் எல்லாம் வராது :)

anujanya said...

@ கும்க்கி

நல்ல பரிச்சயமானவர் என்பதால் சொல்கிறேன்.. அவரவர் பார்வையும் கோணங்களும் அவரவர்க்கு. ஆயினும் அறிவுரைக்கு நன்றி கும்க்கி.

anujanya said...

@ இன்னொரு அனானிக்கு

தட்டிக் கேட்கக் கூடாதா என்கிறீர்கள். என் பார்வையில் எதிர்வினைகள் மிகையாகப் பட்டதைச் சொல்லும் உரிமை எனக்கு இருக்கிறது. மற்றபடி என் கவிதைகள் பற்றிய உங்கள் கருத்துக்கும் நன்றி. அவரவர் திறன் அவரவருக்கு. கீழ்த்தரமான வழியில் பிரபலம் தேடும் வழிகளில் இதுவும் ஒன்றா? நான் நிச்சயம் தவறான இடத்தில் இருக்கிறேன் என்று புரிய வைத்ததற்கு மிக்க நன்றி.

anujanya said...

இது என் நண்பர்களுக்கும், என்னை இது நாள்வரை பின்தொடர்ந்தவர்களுக்கும்

மிகவும் ஆயாசமாக இருக்கிறது. மனதில் பட்டதை நேர்மையாகச் சொல்லும் சூழல் இங்கு இல்லை. அரசியல் சரிநிலைகள் மட்டுமே இங்கு செல்லுபடியாகும். கவிதை - கேவலம்; கட்டுரைகள் - சுய தம்பட்டம்; மற்றவைகளை மேற்கூறிய அரசியல் சரிநிலை என்னும் திரிசூலத்தால் குதறி எடுத்து விடலாம். நிறைய ஆர்வத்துடன் எழுத வந்தேன். நிறைய பேர் தாங்கவும் செய்தீர்கள். இப்போதைய மனநிலை மிகவும் காயமடைந்திருக்கிறது. சில அனானி பின்னூட்டங்களை வெளியிட முடியாத அளவு ஆபாசமாக இருந்தன .. மனைவி குழந்தைகள் என்று...

இந்தப் பத்தியின் துவக்கத்தில் சொல்லியதன் தலைகீழ் கூற்றாக...எல்லாத் துயரங்களும் ஒரு நாள் தீரும்... பிறிதொரு சந்தர்ப்பத்தில் சந்திப்போம். .. அதுவரை...நன்றி நண்பர்களே

அனுஜன்யா

கார்க்கிபவா said...

ஏதேதோ சொல்ல தோணுது தல. நான் என்ன சொன்னாலும் அது உங்களுக்குத்தான் கஷ்டம் கொடுக்கும் என்பதால் அமைதியாக போகனும். ஆனா முடியல..

நந்தா அவரக்ளுக்கு,

பல இடத்துல சொல்லியிருக்கேன். நான் விரும்பும், மதிக்கும் சில பதிவரக்ளில் நீஙக்ளும் ஒருவர். தேவையில்லாமல் ஒருவர காயப்படுத்திட்டிஙகளே.. அத‌ற்கு பதிலா என்னை திட்டியிருக்கலாம். முழுப் பிரச்சினையும் ஆராய இடம்கொடுக்காமல் அவசரப்பட்டுட்டோம்.. அதற்கான பலனை நானும், நர்சிம் மட்டுமே அனுபவிக்க வேண்டும். இவர் ஏன்??

மாதவராஜ் அவரக்ளுக்கு,

ரொம்ப நன்றி. எல்லாத்தையும் மறந்துட்டு எழுதுங்க நர்சிம்னு நீங்க கூப்பிட்டத நினைச்சு சந்தோஷப்பட்டேன். ம்ம்

என்ன எழுதுவது, எழுத‌றேன்னு தெரியாமலே போடறேன். அபப்டிப்பட்ட மனநிலையில் இருக்கிறேன்.

Kumky said...

அன்பின் ஜென்யாஜி.,

தவறான புரிதலில் எனது பின்னூட்டம்.

மெயிலில் பதில் அனுப்பியுள்ளேன்..

சங்கடங்களுக்கு மன்னிக்கவும்.

Karthik said...

என்ன தல இது? பதிவையும் பின்னூட்டத்தையும் லேட்டா இப்போதான் பார்க்கிறேன். நான் என்ன சொல்ல? :(

நந்தா said...

அனுஜன்யா மற்றும் கார்க்கிக்கு.

எனது கோபம் நியாயமானதாய் கருதுகின்றேன். விவகாரம் முற்றிலும் அமிழ்ந்து போன நிலையில் மீண்டும் மீண்டும் கருத்து கூற விரும்பி அதைக் கிளறியது என்னளவில் தவறானதாகவே தோன்றியது. அதை அப்படியே விட்டிருந்திருக்கலாம் என்பதே எனது எண்ணம்.

அதை விட முக்கியமாய் கடைசி பத்தியில் சொல்லி இருந்த பெண்ணியவாதிகள் மீதான எள்ளல் பெரும் காரணமாய் இருந்தது. எவரொருவரின் செய்கைகளையும் நேரடியாய் சொல்லி முகத்திற்கு நேராய் உனது கருத்துக்கள் தவறு என்று சொல்லலாம். ஆனால் இந்த முறையான எள்ளலைத்தான் ஏற்றுக் கொள்ள முடிந்ததில்லை.

மேலுள்ள பின்னூட்டத்திலும் சரி, இதிலும் சரி தனி நபர் காயப்படுத்துதல் முயற்சிகள் எதுவும் இல்லை. முழுக்க முழுக்க பதிவு குறித்து மட்டுமே என்பதை புரிந்து கொள்ள வேண்டுகின்றேன்.

http://blog.nandhaonline.com

VR said...

வணக்கம் அனுஜன்யா,

சிவப்பு நிற கம்முனிச சோப்பு போட்டு துவைக்கவும்.