Monday, January 2, 2012

தரிசனம்

பரிச்சயமற்ற நகரின்
பிரதான பெண்தெய்வத்தின்
தரிசனம் வேண்டுமென்றாள்
வயோதிகத்தால் நிதானமானவள்
என் கைப்பிடித்து நடந்தாள்
ஒரு முக்கிய நாற்சந்தியின்
ஏதோ ஒரு திருப்பத்தில்
திரண்டிருந்த மக்களுடன்
கடவுளை நெருங்குகையில்
வழி மாறியதை
உணர்ந்து கொண்டாள்
வேற்று மார்க்கத்தின்
பிரத்தியேக இறைவனை
குளிரூட்டும் பசுமையை
வேறு மனிதர்களை
சிறுமியின் ஆர்வத்துடன்
பார்த்தாள்.
தவறுக்கு வருந்தி
அவள் தெய்வத்திடம்
கூட்டிச் செல்ல விழைந்தேன்
பணிவாக மறுதலித்த
அவள் கண்களில்
மதங்களுக்கு முந்தைய
கடவுளுக்கு முன் பிறந்த
ஆதி மனுஷியின்
ஆனந்தமும் அமைதியும் கண்டேன்
பேருந்தில் திரும்புகையில்
கடவுளர்கள் சிறைப்பட்டிருந்த
கட்டிடங்களின் உச்சி விளக்குகள்
அணைந்து எரிந்து அளவளாவுவது
புரியத் தொடங்கியது அன்றுதான்

(நவீன விருட்சம் மின்னிதழில் பிரசுரம் ஆகியது)

13 comments:

ராமலக்ஷ்மி said...

/மதங்களுக்கு முந்தைய
கடவுளுக்கு முன் பிறந்த
ஆதி மனுஷியின்
ஆனந்தமும் அமைதியும் கண்டேன்/

காணக் கிடைக்காத தரிசனம்.

அருமை.

பொன். வாசுதேவன் said...

அருமை. கடவுளை எளிமையாய் கண்டுணர்தல்.

//என் கைப்பிடித்து நடந்தாள்//

இந்த இடத்தில் ‘கை பிடித்து‘ என்பதுதான் சரி.

Anonymous said...

அருமை!
http://atchaya-krishnalaya.blogspot.com

சசிகலா said...

அருமை

வடகரை வேலன் said...

நல்லா இருக்கு அனு.

[சிங்கம் களமிறங்கிடுச்சேய்]

மேவி... said...

அங்கிள், உங்க புஸ்தகம் சென்னை புஸ்தக திருவிழாவுல வெளிவர போகுதுன்னு கேள்விபட்டேனே...புஸ்தக பெயர் என்னது ?

#கவிதை புரியல ;ஆனா

"என் கைப்பிடித்து நடந்தாள்"

ஏதோ ஒரு பிகர் கூட ஊர் சுத்தி இருக்கீங்கன்னு மட்டும் தெரியுது. :))))

"மதங்களுக்கு முந்தைய
கடவுளுக்கு முன் பிறந்த
ஆதி மனுஷியின்"

இதுல ஒரு வரி தேவை இல்லாமல் வருது போலிருக்கே....

முரளிகண்ணன் said...

நல்லா இருக்கு அனு.

[சிங்கம் களமிறங்கிடுச்சேய்]

Repeateee

Ashok D said...

ஆ... பரால பரால ... சும்மாரா கீது..
இதெல்லாம் தரிசனம்ன்னு சொல்ல முடியாது...
ராவுல நாலு ரவுண்டுக்கு மேல போசொல்லொ அஞ்சாவுது ரவுண்டல பின்னந்தலைகுள்ள
ஏதோ ஒன்னு முட்டும் பாருங்க...
அதுதான் தரிசனம்...
அப்ப வானத்த பாத்து நாம தனியா பேசுவும் பாருங்க.. லைட்டா ஷேக்கா...அது
:)

ப்ரியமுடன் வசந்த் said...

//கடவுளர்கள் சிறைப்பட்டிருந்த
கட்டிடங்களின் உச்சி விளக்குகள்
அணைந்து எரிந்து அளவளாவுவது
புரியத் தொடங்கியது//

எனக்கும் புரிஞ்சதுண்ணா ...

ஹேமா said...

கடவுள்,மதம் இல்லாக் காலத்து மனுஷி.கடவுள் என்று யாருமில்லை.நாங்களேதான் !

தக்குடு said...

கஷ்டப்பட்டு ஒரு மனுஷர் கவிதை எழுதினா நம்ப கோஷ்டி ஆட்கள் அஜால் குஜாலா கமண்ட் போட்டு கலாய்ச்சுண்டு இருக்காங்க! :)) ஆனாலும் இந்த டீலிங் புடிச்சுருக்கு!

நந்தாகுமாரன் said...

இன்னும் கவிதையைப் படிக்கவில்லை ஆனால் நீங்கள் மிண்டும் எழுதத் தொடர்வதே சந்தோஷம் அளிக்கிறது

anujanya said...

@ ராமலஷ்மி : தொடர் ஆதரவுக்கு எப்பவும் போல நன்றி.

@ அகநாழிகை : ஓ! அப்படியா! இனிமேல் சரி செய்து கொள்கிறேன் வாசு. நன்றி.

@ அட்சயா: உங்கள் முதல் வருகை? நன்றி.

@ சசிகலா: அட்சயா அவர்களுக்குப் போட்ட அதே கமென்ட் தான் உங்களூக்கும் :)

@ வேலன்: 'சிங்கத்துக்கு' முன்னாடி (அ) இருக்கான்னு பார்த்தேன். நன்றி பாசு.

@ மேவி: கவிதையே புரியல. இதுல புஸ்தகமா? சரியான லொள்ளூ பார்ட்டி தான்.கவிதை எப்படி வேணும்னாலும் படிக்கலாம். என்சாய்.

@ ரத்னவேல்: ரொம்ப நன்றி உங்கள் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும்.

@ முரளிகண்ணன்: எப்படி இருக்கீங்க பாஸ்?

@ அசோக்: நீ இன்னமும் அப்படியே ‍ அதே லொள்ளுடன் இருப்பதில் மகிழ்ச்சி.

@ வசந்த்: ஐய்யயோ! எப்படி இந்த விபரீதம் நடந்தது? நன்றி வசந்த்.

@ ஹேமா: ரொம்ப நன்றி ஹேமா.

@ தக்குடு: என்ன பேரு பாஸ் இது! கலக்கல்! நன்றி உங்கள் வருகைக்கு.

@ நந்தா: யோவ், நீங்களும் எப்ப எழுதப் போறீங்க? நன்றி.

@ தமிழ்மணத்தில் வாக்களித்த அனைவருக்கும் நன்றி.

@ கூகிள் ப்ளஸ்ஸில் பகிர்ந்து கொண்ட ரங்ஸ் மற்றும் விதூஷ் இருவருக்கும் நன்றி.

அனுஜன்யா.