நேற்று
நம்ம யோ.யோ.வின் (http://kathaiezuthukiren.blogspot.in/) கருணையில் கோக் ஸ்டூடியோ MTV சீசன் 3இல் ரஹ்மான் இசை மேற்பார்வையில்
ஒரு பாடல் கேட்க நேர்ந்தது. சமீப காலத்தில் "spell binding" என்னும் மோன
நிலைக்குக் கொண்டு சென்ற பாடல் இது. ஒரு தளத்தில் நோக்கினால் - இது யாரும் செய்யாத
முயற்சி எல்லாம் இல்லை. ஃபியூஷன் எனப்படும் பல்வேறு இசை வடிவங்களை இணைக்கும் முயற்சி
நிறைய பேர் சிறப்பாகக் செய்ததுதான். ஆயினும்
- கிரிகெட் உதாரணம் சொல்லலாம் என்றால் - ஓவர் பிட்ச் பால் சவுகர்யமான 100 கி.மீ. வேகத்தில்
போட்டாலும் அதை பவுண்டரிக்கு அடிக்கும் இலாகவம் அனைவருக்கும் வாய்ப்பதில்லை. ரஹ்மான்
அனாயாசமாக, சச்சினின் கச்சிதத்துடன் விளாசியிருக்கிறார் என்பதை விட வருடியுமிருக்கிறார்.
ஜுகல்பந்தி
எனப்படும் இசைக்கலவை - பிரதானமாக ஹிந்துஸ்தானி, கர்நாடக சங்கீதம் இவற்றுடன் நவீன கம்பி,
தாள வாத்தியங்கள் பின்னணியில் மேற்கத்தைய இசையை வாசனைக்குத் தூவுவது - கடந்த இருபது
வருடங்கள் நடந்து கொண்டிருப்பது தான். இவ்விரு பேரிசை வடிவங்களும் நாம் பெருமைப்பட
வேண்டிய விஷயம். இரண்டிலும் பொதுவான ராகங்கள் இருந்தாலும் பெயர்கள் வெவ்வேறானவை. கல்யாணி-யெமன்,
ஹிந்தோளம்-மால்கௌன்ஸ், மோகனம்-பூப் (பீப் அல்ல), சிந்து பைரவி-பைரவ் போன்றவை சில உதாரணங்கள்.
இந்தப்
பாடலில் ரஹ்மான் கையாண்டிருப்பது யெமன்-கல்யாணி ராகத்தில் அமைந்த ஜுகல்பந்தி. முதல்
அரை நிமிடம் அவரவர் தம் வாத்தியங்களை "கண்ணா, நல்லா வரணும்" என்று வருடுவது;
தேர்ந்த இசை ரசிகர்கள் ரஹ்மான் கீ போர்டில் நாலாவது கீயை அழுத்தும் போதே "ம்,
யெமன்?" என்று புருவம் உயர்த்தக்கூடிய நுட்பம் அது. சிவமணி ஒரு கோவில் பூசாரியின்
பயபக்தியுடன் மணிகளை சரிபார்க்கிறார். புயலுக்கு முன் அமைதி என்றால் அது சிவமணி தான்.
பிறகு
உஸ்தாதின் (குலாம் முஸ்தாபா கான்) பேரன் துவங்குகிறான். என்ன கணீர்! என்ன கச்சிதம்!
பிறகு அவன் அப்பா? பிறகு சித்தப்பாக்கள் என்று நாற்பத்தைந்து வினாடிகள் "யெமன்"
பற்றிய வசீகர சிறுகுறிப்பு; சிவா ட்ரம்ஸில் ஒரு "ம், ஆரம்பிக்கலாம்" என்று
ஒரு தட்டு. மோகினி டே பாஸ் கிட்டாரின் Low B யை மீட்ட, பிரசன்னாவின் லீட் கிட்டார், எட்டு கோரஸ் பெண்கள்,
ரஹ்மானின் சகோதரி, கீபோர்டில் ரஹ்மான் விரல்களின்
காளிங்க நர்த்தனம் என்று எல்லாம் இணைய, முப்பது
வினாடிகளில் விமான தளத்தில் டேக் ஆஃப் ஆவது போன்ற வேகம் கூடுதல், பரபரப்பு, நேர்த்தி,
வயிற்றில் ஜிவ் என்று அட்டகாசம்.
குரூயிஸ்
மோடில் வந்த பிறகு ஒயின் கிளாசுடன் தோன்றும் விமானப் பெண் போல், ரஹ்மான் கீ போர்டில்
யெமன் -
"ஜன்னல்
காற்றாகி வா
ஜரிகைப்
பூவாகி வா
மின்னல்
மழையாகி வா
உயிரின்
மூச்சாகி வா"
(இதை
எங்கே கேட்டிருக்கிறேன் என்று பற்களில் சிக்குண்ட உணவுத்துணுக்கை எடுக்க இயலா இன்ப
எரிச்சலில் தவிக்கையில் அனாயசமாக கண்டுபிடித்த அனுவுக்கு நன்றி) என்று பேச, பிரசன்னா
யெமன் மீது கல்யாணியில் சவாரி செய்து "சிந்தனை செய் மனமே" என்பது வாவ்!
உத்திரப்
பிரதேசத்தின் குக்கிராமங்களில் சில மாதங்கள் பணியாற்றியிருக்கிறேன் (இந்தி தெரியாமல்
தான்). ஆதிக்க சாதி தாகூர்களின் உடல் மொழியில் எப்போதும் ஒரு மிடுக்கு இருக்கும். நம்ம
குலாம் பாய் அதே மிடுக்கில் பிரசன்னாவிடம் "க ம ப த பா பா" என்று வினவுவார்.
பிரசன்னாவின் கிட்டாரும் தென்னிந்தியர்களுக்கு
இயற்கையாக வரும் அறிவான அடக்கத்துடன் கர்நாடக செவ்வியல் பாணியில் அதனைத் திரும்பச்
சொல்லும். பாய் அறுபது பாகை நகர்ந்து
"க ம த நி மா" என்று சற்றே கீழிறங்க கிட்டாரும் "அவ்வாறே ஆகுக"
என்னும். சடாரென்று திரும்பி "ரி க ம த நி?" என்று கேள்வி எழுப்ப, சரியான
விடை கிடைக்க .... கேட்கும் நமக்கு
"உயிரே!
உயிரின் உயிரே!
அழகே!
அழகின் அழகே!" என்று சிந்து பைரவியின் "கலைவாணியே" தோன்றுவாள். இந்த ரகளையில் ரஹ்மான் விரல்கள் ட்ரெட்மில் நடை
பயிலும். விவாதம் சூடாகையில் மாடரேட் செய்யும் ஆங்கரின் நளினத்துடன் ரஹ்மான்
"யமனும் இதுதான்; கல்யாணியும் இதுதான்" என்பது பொன்னியின் செல்வனில் வத்தியத்தேவன்
சொல்லும் "அரியும் சிவனும் ஒண்ணு; இதை அறியாதவர் வாயில் மண்ணு" என்பதை நினைவுறுத்தும்.
உஸ்தாத் கேள்வியும் பிரசன்னா பதில்களும் உண்மையில் கொடுத்தது ஒரு பேரழகியை எல்லாக்
கோணத்திலும் கொண்டு வருவது போல; எனக்கு நினைவுக்கு
வந்தது சலங்கை ஒலியின் ஜெயப்ரதா. இந்த ஞான விவாதத்தில் உங்களுக்கு "மன்னவன் வந்தானடி
தோழி", "நான் பாட வருவாய் (உதிரிப் பூக்கள்)", "மஞ்சள் வெய்யில்
(நண்டு)" எல்லாம் நினைவில் வந்தால் நீங்களும் கல்யாணியின் நண்பர்களே.
இந்த
களேபரத்தில் நாலரை நிமிடங்கள் ஓடியதை அறிந்திருக்க மாட்டோம். இங்க தான் சிவா என்ட்ரி.
தனியாவர்த்தனம். நாற்பது வினாடிகள் நமக்கு ஆப்பிரக்காவின் அடர் வனத்துக்குள், காரிருளின்
கருமையில், காற்று, இடி மின்னல்கள் கூடிய கொட்டும் மழையில் அருவியில் புறப்படும் காட்டாற்றின் சமீபத்தில் நிற்கும் அனுபவம் கிடைக்கும்.
அத்தகைய
இரவுக்குப் பின் புலரும் காலையில் காவிரி நதிதீரக் கோவிலருகில் சென்றால் வரும் இசையில்
பிரசன்னா வரவேற்பார். உஸ்தாத் லக்னோவின் வீடுகளிலிருந்து
கசியும் இசையுடன் சேர, ரஹ்மான் அனைவரையும் மும்பையின் கலைகள் சங்கமிக்கும் காலா கோடா
உற்சவத்தில் நம்மை அமரச் செய்வார்.
மற்ற
கலைஞர்கள் முடித்த பின் ரஹ்மானும் பிரசன்னாவும் மெலிதாக மீட்டுவது
திட்டமிடா,
குற்றவுணர்வற்ற, சம்போகத்தின் பின் தனிமையில் அசை போடுகையில் பிறக்கும் மென் புன்னகை;
முதலிரவின்
அடுத்த காலையில் வெட்கிக் கிடக்கும் பூக்கள்;
இரவில்
நனைந்த மரங்கள்
காலையில்
சொரியும் தூறல்கள்;
திருமணம்
முடிந்த மண்டபம்;
திருவிழா
முடிந்த சிற்றூர்;
தேர்
சென்ற தெரு;
இவை
எல்லாம் நினைவுக்கு வரும்.
ஒரு
மகத்தான அனுபவத்திற்கு நன்றி ரஹ்மான்.
குட்டி
நன்றி நம்ம யோ.யோ.வுக்கும்.
பி.கு.
: பாடலில் 4.17 ல் நிச்சயமாக யெமனில் இருந்து விலகி 4.18ல் சேர்ந்து கொள்ளும் உணர்வு
தோன்றுகிறது. இதனை சுருதி பேதம் என்று செல்லமாகச் சொல்வர். பாணா காத்தாடி ஒரு வினாடி
நூலறுந்து பறப்பது போல் பாவ்லா காட்டி விட்டு மேலெழும்புவது போல்.
3 comments:
இதை படித்துவிட்டு, தேடியலைந்து கண்டுபிடித்து ஒரு முறை கேட்டு மீண்டும் படித்து மீண்டும் கேட்டு மீண்டும் படித்து, அட்சர சுத்தமாய் ஒரு தூய அனுபவத்தை அளித்த...........
சில நேரங்களில் மனம் அலைபாய்ந்துகொண்டிருக்கும்போது, அதற்குத் தேவையானதை அதுவே தேடியலையும், அது கிடைக்கவும் செய்யும் சில தருணங்களில் இதுவும் ஒன்று.
https://youtu.be/_UZhioKe8vg
இதை படித்துவிட்டு, தேடியலைந்து கண்டுபிடித்து ஒரு முறை கேட்டு மீண்டும் படித்து மீண்டும் கேட்டு மீண்டும் படித்து, அட்சர சுத்தமாய் ஒரு தூய அனுபவத்தை அளித்த...........
சில நேரங்களில் மனம் அலைபாய்ந்துகொண்டிருக்கும்போது, அதற்குத் தேவையானதை அதுவே தேடியலையும், அது கிடைக்கவும் செய்யும் சில தருணங்களில் இதுவும் ஒன்று.
https://youtu.be/_UZhioKe8vg
நன்றி கடற்கரை.
பாடலுக்கான சுட்டி (hyper link) முதல் வரியிலேயே "Coke Studio - Season 3 - ARR" என்ற முதல் வரியில் கொடுத்திருக்கிறேனே!
Post a Comment