Wednesday, October 28, 2009

யானை, புலி மற்றும் அலைபேசி

சஷி தரூர் - தற்போதைய மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர். முன்னாள் வெளியுறவுத்துறை உயர் அதிகாரி - ஐக்கிய நாடுகள் சபையில் முக்கிய வேலை பார்த்து, UN-Secretary General பதவிக்கு ஆசைப்பட்டு, நிறைவேறாமல் போனதைக் கடந்து வந்தவர். கேரளா மாநிலத்தைச் சேர்ந்த இவர் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார் –

the Elephant, the Tiger & the Cellphone என்ற தலைப்பில்

சென்ற வாரம் பரோடாவிலிருந்து வேலை மாறி சென்னை சென்ற என் nephew (மருமகன் என்றால் என்னோட யூத் இமேஜ் என்னாவது?) விமானத்தில் எடை அதிகமாவதைப் பற்றி கவலைப்பட்ட போது, என்னாலான சிறிய உதவி என்று இந்தப் புத்தகத்தை அவனிடமிருந்து ...அதென்ன...லபக்கிவிட்டேன். இருபத்தொன்றாம் நூற்றாண்டில் இந்தியா பற்றிய சிந்தனை என்று பொத்தாம் பொதுவாக இந்தப் புத்தகத்தைப் பற்றி (படிக்காமலேயே) சொல்லலாம் என்று நினைக்கிறேன். சஷி தரூரின் பல காலக் கட்டுரைகளால் நிரம்பிய இந்தப் புத்தகத்திலிருந்து அவ்வப்போது சிலவற்றை எழுதலாம் என்று நினைக்கிறேன்.

இதில் நிறைய அனுகூலங்கள்: பதிவெழுத மேட்டர் கிடைக்கிறது; கற்பனை வறட்சி பற்றி கவலைப்பட வேண்டாம்; எதிர் வினைகள் வந்தால், 'அதானே, இது என் கருத்து இல்லை சார்/மேடம்' என்று சொல்லி நழுவலாம்; 'மொழியாக்கம்' ஸ்பெஷலிஸ்ட் என்று போர்டு போட்டுக்கொள்ளலாம்.

இனி Over to Mr.Sashi.

முன்னுரை: ஏன் இந்தியா முக்கியமாகிறது?

2007 ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர இந்தியாவுக்கு அறுபது வயதானது. இருபத்தொன்றாம் நூற்றாண்டு இந்தியாவுக்கு என்ன வாய்ப்புகள் தரவிருக்கிறது? இந்தக் கேள்விக்கான பதில் ஏன் அவசியமாகிறது?

பிரித்தானிய வரலாற்றாளர் E.P.தாம்சன் அவர்களின் கூற்றுப்படி "இந்தியா, எதிர்கால உலகின் மிக முக்கியமான நாடாகும்". நான் இத்தகைய தீர்ப்பைச் சொல்ல முடியாவிடினும் பத்து வருடங்கள் முன்னர் எனது 'இந்தியா - நள்ளிரவிலிருந்து நூற்றாண்டு வரை' என்ற புத்தகத்தில் இருபதாம் நூற்றாண்டில் இவ்வுலகம் எதிர்நோக்கும் மிக முக்கியமான விவாதங்களின் நாற்சந்திகளில் இந்தியர்கள் நிற்பதைக் கண்டேன்.


உணவா - விடுதலையா என்ற விவாதம்: ஜனநாயகம் ஏழ்மையைப் போக்கும் சாதனங்களைத் தர வல்லதா அல்லது அதன் கட்டுவிக்கப்பட்ட திறமையின்மைகள் வேகமான வளர்ச்சியைத் தடை செய்கிறதா? ஒரு வளரும் நாட்டுக்கு அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத, தற்காலிக கூட்டணியாட்சி முறை ஒத்து வருமா? இன்றைய தலைமுறை பொருளீட்டுவதில் மட்டும் நாட்டம் கொள்ளும் சூழலில், அரசியல் சுதந்திரம் ஒரு தேவையற்ற கவனச் சிதறல் எனலாமா?

மையக்கட்டுப்பாடா மாநில சுயாட்சியா விவாதம்: நாளைய இந்தியா ஒரு வலுவான மைய அரசால் - மொழி, சாதி, பிராந்திய விடயங்களால் துண்டாகும் போக்கினைக் கட்டுப்படுத்தும் ஆளுமையுடைய அரசால் - ஆளப்பட வேண்டுமா அல்லது மையக்கட்டுப்பாடு இல்லாத அரசே சிறந்ததா? ஆண்டிப்பட்டியையும், அருணாச்சலப் பிரதேசத்தையும் பாதிக்கும் ஒவ்வொரு முடிவும் டில்லியில் தான் எடுக்கப்பட வேண்டுமா?

பன்முகமா, அடிப்படைவாதமா என்னும் விவாதம்: பல இனக்குடிகள் இருக்கும் நாட்டில் அரசியல் சாசனத்தில் உருவாக்கப்பட்ட (மேற்கத்திய நாடுகளின் கவர்ச்சியில் ஏற்பட்டது என்று தாக்கப்படும்) மதற்சார்பின்மை இன்றியமையாததா அல்லது இந்தியா, மற்ற பல மூன்றாம் உலக நாடுகள் போல, ஏறக்குறைய நம் எல்லா அண்டைநாடுகள் போல, நம்முடைய பிரத்யேக மத அடையாளத்துடன் திகழ்வதில் நாட்டம் செலுத்த வேண்டுமா?

கோகோ-கோலாநைசெஷன் விவாதம் அல்லது உலகமயமாக்கலா சுயச்சார்மையா விவாதம்: நாற்பது ஆண்டுகளாக தன்-நிறைவு என்னும் தாரக மந்திரத்தைக் கடைப்பிடித்த இந்தியா உலகப் பொருளாதாரத்திற்கு தன் கதவுகளை இன்னும் திறக்க வேண்டுமா அல்லது மேற்கத்திய நுகர்வுக் கலாசாரம் அதன் ஊடே, அனுமதிக்கவே தகாத சீரழிவுகளை இந்திய சமுதாயத்தில் கொணருமா?
MTV யின் கேடுவிளைவிக்கும் மோகவலையில் இருந்து நம் இளைஞர்களைப் பாதுகாக்க, வேலிகளை உயர்த்த வேண்டுமா?

நான் என்னுடைய புத்தகத்தில் சொல்லாத ஐந்தாம் விவாதமும் இருக்கிறது. என்னுடைய அப்போதைய எஜமானர்களான ஐக்கிய நாடுகள் சபையின் கட்டுப்பாட்டுக்கு மதிப்பளித்து அதை எழுதவில்லை. துப்பாக்கியா-நெய்யா (Guns vs Butter) என்னும் விவாதம்: தேசப்பாதுகாப்பு செலவா அல்லது வளர்ச்சிக்கான நிதியா என்னும் விவாதம். பயங்கரவாதத்தின் புது அச்சுறுத்தல்களுடனும் புதுப்பிக்கப்படும் அணு ஆயுதப் போரின் சாத்தியங்களிலும் தொடங்கிய இருபத்தொன்றாம் நூற்றாண்டில் தற்போது இராணுவப் பாதுகாப்பு (அயல் தாக்குதலிலிருந்து காப்பாற்றுவது)அவசியம் என்பவர்களுக்கும் மனிதப் பாதுகாப்பே (பசிப்பிணியிலிருந்தும், வாழ்வில் நம்பிக்கை இழந்த நிலையிலிருந்தும் விடுதலை) அத்தியாவசியம் என்னும் குழுவினருக்கும் கொள்கைப் போர் மூண்டு கொண்டிருக்கிறது. போதிய பாதுகாப்பு இல்லாமல் ஒரு நாடு தன்னிச்சையாக வளர்ச்சி காண முடியாது என்னும் வாதத்தை மறுக்க முடியாது எனினும் வளர்ச்சி இல்லாத நாட்டுக்கு எதற்கு பாதுகாப்பு என்னும் வாதத்தையும் மறுக்க இயலாது.

மேற்கூறிய அனைத்தும் வெறும் அறிவுஜீவித் தனமான விவாதங்களல்ல. இவை தேசிய, உலக அரங்குகளில் அரங்கேற்றப்படுபவை. நாம் இப்போது எடுக்கும் முடிவுகள் இருபத்தொன்றாம் நூற்றாண்டில் எத்தகைய இந்தியாவை நம் குழந்தைகள் சுவீகரித்துக் கொள்வார்கள் என்று நிர்ணயிக்கும். இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் இந்தியர்கள் உலக மக்கட் தொகையில் ஆறில் ஒரு பங்கு இருந்ததால், இந்த முடிவுகள் உலகம் முழுதும் எதிரொலித்துக் கொண்டே இருக்கும்.

இப்ப மீண்டும் நான். என்ன? மண்டை காயுதா? முன்னுரை கொஞ்சம் இறுக்கமான மொழியில் தான் இருக்கிறது. போகப் போக ..... நீங்கள் இந்த மொழிக்குப் பழகி விடுவீர்கள். எவ்வளவு பதிவுகள் நமீதா இடுப்பு, சச்சின் கவர் டிரைவ், அனுஜன்யா கவிதைகள், தமன்னா ஸ்டில்ஸ் என்று அதி முக்கிய விஷயங்கள் படிக்கிறோம். கொஞ்சம் ஓய்வெடுக்க இந்த மாதிரியும் படிக்கலாமேன்னு.....

இனி அடுத்த வாரம் பார்க்கலாம். வர்ட்டா?

25 comments:

ராமலக்ஷ்மி said...

//நாம் இப்போது எடுக்கும் முடிவுகள் இருபத்தொன்றாம் நூற்றாண்டில் எத்தகைய இந்தியாவை நம் குழந்தைகள் சுவீகரித்துக் கொள்வார்கள் என்று நிர்ணயிக்கும். இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் இந்தியர்கள் உலக மக்கட் தொகையில் ஆறில் ஒரு பங்கு இருந்ததால், இந்த முடிவுகள் உலகம் முழுதும் எதிரொலித்துக் கொண்டே இருக்கும்.//

சத்தியமான வார்த்தைகள்!

கார்க்கிபவா said...

நல்ல முயற்சி தல. அப்படியே கீழ்கண்ட கவிதையையும் தமிழில் மொழிபெயர்ப்பு செய்து கொடுத்தால் புண்ணியமா போகும்.

உள்ளே இருந்தேன்
அதாவது வெளியே
அரங்குக்கு மிக சமீபத்தில்
மிதந்து கொண்டிருந்தேன்
ஒலிச்சித்திரம் கேட்ட
சில நாட்களுக்குப் பின்
திரையரங்கு என்னை
வாரிச்சுரிட்டி உள்ளிழுத்தது
கண்டிராத பலர்
நடித்துக்கொண்டே இருந்தனர்
இயக்குனர் இருப்பதாகச்
சொல்லப்பட்டாலும்
தங்களுக்கான வசனங்கள்
தாமாகவே பேசினர்
முதலில் காட்சிகளைக்
காணப் பழகியவன்
பிறகு நடிக்கவும் துவங்கினேன்
பல வேடங்களுக்குப்பின்
சிலரின் வெளியேற்றமும்
வேறு சிலரின் புது வருகையும்
உண்டாக்கிய அச்ச தினங்களில்
ஒரு நாள் திரையரங்கு
என்னையும் வாரிச்சுருட்டி
வெளியே துப்பியது
அரங்கத்துள் சிலர் என்
நடிப்பை விமர்சித்தனர்
இலேசாக உணர்ந்தாலும்
சில காட்சிகளில்
இன்னும் நன்றாக
செய்திருக்கலாம்
என்றெண்ணியபடி
வெளியே மிதந்தேன்
அதாவது உள்ளே

Anonymous said...

//துப்பாக்கியா-நெய்யா (Guns vs Butter) //

பொருட்குற்றம் ஐயா - அது வெண்ணைய். நெய் அல்ல. Clarified Butter தான் நெய்.
(ஏதோ என் பங்குங்குக்கு)

அ.மு.செய்யது said...

//அனுஜன்யா கவிதைகள்//

.ம்ஹூம்..இது சரி வராது...உங்கள போன் பண்ணி , ஓர்லி பிரிஜ்ஜிக்கு வரவழைத்து,
கோட்டர் ஊத்தி கொடுத்து................சரி வேணாம்....

அ.மு.செய்யது said...

பதிவுக்கு நல்ல சிரத்தை எடுத்து உழைத்திருக்கிறீர்கள்.நன்றாக வந்திருக்கிறது.

மொழிபெயர்ப்பு எக்ஸ்பெர்ட் !!!

anujanya said...

@ ராமலக்ஷ்மி

இவ்வளவு சீக்கிரமா? நன்றி சகோ.

@ கார்க்கி

எனக்கு இலத்தீன் அமெரிக்க இலக்கியமும், அதன் மொழியும் பரிச்சயமில்லை. அதனால சாரி பிரதர் :). ஆனாலும் ஏதோ ஒரு வசீகரம் அந்தக் கவிதையில் இருக்கு :).

ஏன் ஏன் இந்த கொலைவெறி? போன இடுகைக்குப் பழிவாங்கலா?

தேங்க்ஸ் கார்க்கி

@ சின்ன அம்மணி

உங்களுக்காகத்தான் இவ்வளவு சீக்கிரம் பின்னூட்டத்திற்கு பதில். Butter என்றால் வெண்ணெய் என்று தெரியும். நம் வழக்கத்தில் வெண்ணெய் என்பதற்கு சமயங்களில் வேறு அர்த்தம் வருகிறது. மேலும், நம் வழக்கத்தில் நெய் உண்பது ஒரு ஏழ்மையின்மைத் தன்மையைப் பிரதிபலிப்பது என்று இருப்பதால் நெய் என்று தெரிந்தே மாற்றினேன். அவ்வாறு மாற்றம் செய்தேன் என்று சுட்டிக் காட்டவே ஆங்கிலத்தில் இருந்த Guns Vs Butter என்ற பிரயோகத்தையும் எழுதினேன்.

இவ்வளவு நுட்பமாகப் படிக்கும் உங்களுக்கு நன்றி.


அனுஜன்யா

Ashok D said...

சமூகத்தின் ஊய்வை அதற்கு உண்டான சாதக பாதகங்களையும் அலசி அதன் ஊடோடி செல்வதால் (நமீதா இடுப்பு, சச்சின் கவர் டிரைவ், அனுஜன்யா கவிதைகள், தமன்னா ஸ்டில்ஸ் என்று அதி முக்கிய விஷயங்க) ளிலிருந்து விடுப்பட்டு இப்பதிவு முக்கியமானதாக சுட்டப்படுகிறது.(ஹிஹி)

தல சீரியஸா நல்லாவே இருக்கு... தொடர்ந்து எழுதுங்கள்.

Unknown said...

அண்ணா பதிவ படிச்சிட்டேன்.. பதிவுல இருந்து கேள்வியெல்லாம் கேட்க மாட்டீங்களே? ஹி ஹி ஹி.. கார்க்கி கமெண்ட் சூப்பர்... அதுக்கு உங்க பதில் அதவிட சூப்பர்.. :))(எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு?? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :( )

நர்சிம் said...

மிக நல்ல அறிமுகம் தல.நன்றி.

எழுதிய விதம்.சதம்.

மேவி... said...

தல, எனக்கு நமீதா இடுப்பு பிடிக்காது, ஆனால் உங்க கவிதை ன்ன ரொம்ப பிடிக்கும்.



"மருமகன் என்றால் என்னோட யூத் இமேஜ் என்னாவது?"

நீங்க யூத் ன்ன கார்கியை என்னன்னு சொல்வது ??? அப்ப என்னை என்னன்னு சொல்விங்க

மேவி... said...

இந்த புக் கொஞ்சம் மண்டையை காய வைக்கும் என்று கேள்வி பட்டேனே .....

மேவி... said...

"கோகோ-கோலாநைசெஷன் விவாதம் அல்லது உலகமயமாக்கலா சுயச்சார்மையா விவாதம்:"


இது தொடர்ப்பாக வேற ஒரு புக் இருக்கு தல ..... ஞாபகம் வந்துச்சுன்னா சொல்றேன்

அமிர்தவர்ஷினி அம்மா said...

இனி அடுத்த வாரம் பார்க்கலாம். வர்ட்டா?

வாங்க சார்! வாங்க சார்

இன்னும் நிறைய எழுதுங்க சார் இது மாதிரியே :)

நேசமித்ரன் said...

மண்டைய காலியாக்கிட்டு படிக்கணும் அதுக்கு ....
எனவே சேமித்து வைத்தாயிற்று
மொழிபெயர்ப்பு நச் !!!

Cable சங்கர் said...

பொறுமையா படிச்சிட்டு வந்து பின்னூட்டறேன்.. அதுவரைக்கும்.. இதுஸ்டார்ட்டர்

Ayyanar Viswanath said...

இலங்கையில் போர்குற்றங்களே நிகழவில்லை என ஐ நாவில் எடுத்துரைத்த நல்லவர்தானே இவர்?.இம்மாதிரி ஆட்கள் எம்மாதிரியான சிந்தனை தெறிப்புகளை சிந்தியிருந்தாலும் என்னால் படிக்க முடியாமல் போய்விடுகிறது.

மணிகண்டன் said...

அனுஜன்யா - இவரோட முந்தைய புத்தகம் படிச்சி இருக்கேன். ஈசியான மொழில தான் எழுதி இருந்தார். இது ஏன் இவ்வளவு கஷ்டமா இருக்கு ? ரெண்டு மூணு இடுகைல பழகாட்டி நீங்க simplify பண்ணி எழுதுங்க.

நீங்க மக்கள் கேக்கணும்ன்னு எதிர்பார்த்த கேள்வியை சின்னஅம்மிணி கேட்டுட்டாங்க :)-

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நல்ல பதிவு. சிந்திக்க வேண்டிய நிறைய சமாச்சாரங்கள் புத்தகத்தில் இருக்கும் போல.

//போதிய பாதுகாப்பு இல்லாமல் ஒரு நாடு தன்னிச்சையாக வளர்ச்சி காண முடியாது என்னும் வாதத்தை மறுக்க முடியாது எனினும் வளர்ச்சி இல்லாத நாட்டுக்கு எதற்கு பாதுகாப்பு என்னும் வாதத்தையும் மறுக்க இயலாது. //

உண்மைதான்.

-ப்ரியமுடன்
சேரல்

அத்திரி said...

கார்க்கி சொன்னதுக்கு ஒரு பெரிய ரிப்பீட்டு.........

"உழவன்" "Uzhavan" said...

தொடருங்கள்.. காத்திருக்கிறோம்

தராசு said...

மறுபடியும் அடுத்த வாரமா???

கார்க்கி போட்ட கவிதையே பரவாயில்லடா சாமி.

anujanya said...

@ செய்யது

இதுக்குதான் வோர்லி பிரிட்ஜ் பாக்கனும்னு சொன்னியா? ஏன் இந்த கொலைவெறி!

நன்றி செய்யது.

@ அசோக்

நன்றி அசோக்

@ ஸ்ரீமதி

ஆனாலும் கேள்வி கேட்பேன். Whats the equivalent of Butter in தமிழ்?

@ நர்சிம்

நன்றி நர்சிம்

@ மேவி

//உங்க கவிதை ன்ன ரொம்ப பிடிக்கும். //
இது பேச்சு.

//நீங்க யூத் ன்ன கார்கியை என்னன்னு சொல்வது ??? //
'சிட்டுக்குருவி முத்தங்கொடுத்து' நேயர் விருப்பம் கேட்பவர் யூத்து தான் - முப்பது வருடங்களுக்கு முன் :)

வேற புக் ஞாபகம் வந்தா சொல்லவும். (யூத்னா இந்த மாதிரி மறதிப் பிரச்சனைகள் இருக்காது)

நன்றி மேவி

@ அமித்து அம்மா

நன்றி AA

@ நேசமித்ரன்

நன்றி நேசன்

@ கேபிள்

ஓகே ஓகே - நன்றி

@ அய்யனார்

உங்க பின்னூட்டம் ரொம்ப சிந்திக்க வைக்கிறது அய்ஸ். நிச்சயம் கடுப்பான விஷயம்தான். என்ன செய்யட்டும்? சில கட்டுரைகள் நல்லா இருந்ததாகத் தோன்றியது.

வேணாம், இதோட விட்டுரு என்பீர்கள் என்றால்... பதிவெழுத மேட்டர் இல்லாத எனக்கு, ஐந்து கவிதைகள் கொடுங்க. உங்க பெயரிலேயே - ஆனால் என்னோட வலையில் - போடுறேன் :)

@ மணிகண்டன்

எனக்கும் அதேதான் தோணிச்சு மணி. ஆங்கிலத்தில் ஈசியா இருந்தது. என் கையில் வந்தவுடன் இடியாப்பச் சிக்கலாகிவிட்டது. ஹ்ம், பாப்போம். அய்ஸ் வேறு முக்கியமான விஷயம் சொல்கிறார்.

//நீங்க மக்கள் கேக்கணும்ன்னு எதிர்பார்த்த கேள்வியை சின்னஅம்மிணி கேட்டுட்டாங்க :)-//

யோவ் உன்ன!

நன்றி மணி

@ சிவா

நன்றி சிவா

@ சேரல்

நன்றி சேரல்

@ அத்திரி

ஏன்யா, வரதே ஆடிக்கொரு முறை; இதுல எத்தனை நல்ல கமெண்டு இருக்கு. உனக்கு கார்க்கி மட்டும் தெரியுதா? நாட்டுல உன்னைய மாதிரி குறைந்தது நானூறு பேரு இருக்காங்க :)

நன்றி அத்திரி

@ உழவன்

நன்றி நண்பா.

@ தராசு

//கார்க்கி போட்ட கவிதையே பரவாயில்லடா சாமி.//
ஹலோ, அதுவும் நம்ம சரக்குதான். கவிதையா? கட்டுரையா? நீங்களே முடிவு பண்ணுங்க.

அனுஜன்யா

Karthik said...

//துப்பாக்கியா-நெய்யா (Guns vs Butter) என்னும் விவாதம்: தேசப்பாதுகாப்பு செலவா அல்லது வளர்ச்சிக்கான நிதியா என்னும் விவாதம்.//

இதில் தேசப்பாதுகாப்பு, வளர்ச்சி என்று எதை நினைக்கிறார்கள் என்றும் புரியல தல..

வருஷம் நாலு குண்டுவெடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது, அக்னியின் லாங் ரேஞ்ச் வெர்ஷனை டெவலப் செய்து வைத்துக் கொள்வதில் மட்டும் என்ன பிரயோஜனம்?

எம்.என்.சி க்களுக்கு எவ்வளவோ வசதிகள் கொடுத்து சிவப்பு கம்பளம் விரிக்கிறார்கள். கோயம்புத்தூரில் சின்னக் கம்பெனிகளுக்கு மின்சாரம் கூட சரியாக கிடைப்பதில்லை.

anujanya said...

@ கார்த்திக்

அதேதான் கார்த்திக். Priorities வரிசைப்படுத்துவதில் அரசுக்குக் குழப்பம் இருக்கு. நீ முதலில் சொன்னது மத்திய அரசு. இரண்டாவது குறிப்பிட்டது பெரும்பாலும் மாநில அரசின் தடுமாற்றம்.

நன்றி கார்த்திக்

அனுஜன்யா

Kumky said...

தலைவரே ரொம்ப சீரியஸான விஷயத்தைத்தான் அலசியிருக்காரு போல...இருங்க இன்னொருக்கா படிச்சிட்டு வரேன்...
சரி கேள்வியாவே இருக்கே...பதில் எங்கே....அல்லது அவரின் தீர்வுகள் என்ன..?