Thursday, November 26, 2009

26/11 - மும்பை பயங்கரம் - சூசன் ஜார்ஜ்

சென்ற வருட நவம்பர் 26 மற்றும் 27 எனக்கு வாழ்நாளில் மறக்க முடியாத தினங்கள்.  ஒரு  பொதுத்துயரத்தில் நம் தனிப்பட்ட அனுபவமும் சேரும்போது, வாழ்வின் மறக்க முடியாத பக்கங்களில் அது ஒட்டிக்கொள்கிறது. இனி தொடர்ந்து படியுங்கள்:




சூசன் ஜார்ஜ்


அவள் வருகிறாள் என்று ஒரு வாரம் முன்பே தெரியும். டோரோண்டோவிலிருந்தும், ஹாங்காங்கிலிருந்தும் பிரத்யேகமாக மின்னஞ்சல்கள் வந்திருந்தன. ஆனாலும், சனி, ஞாயிறின் கொண்டாட்டங்களில் எல்லாவற்றையும் தொலைத்து, மறந்து, திங்கள் காலையைப் படைத்த ஆசாமியை கெட்ட வார்த்தைகளில் சபித்து, ஏழு மணிமுதல் வீட்டில் கலவரம் செய்து, ஒருவழியாக ஆபிஸ் சேர்ந்தாயிற்று.. அப்பாடா, இன்றைய சம்பளம் நியாயமானதுதான் என்று காபி குடிக்கையில் லவினா தொலைபேசியில், '9.30 ஆகிவிட்டது. கான்பரன்ஸ் ரூம் செல்லவும். சூசன் வந்தாயிற்று. மற்றவர்கள் காத்திருக்கிறார்கள்' என்றாள். ஓஹ், இன்று இந்தக் கிராதகி வந்தாயிற்றா? இந்த வாரம் குருபெயர்ச்சியில் ராசிபலன் பார்க்க வேண்டும்.

'ஹாய் சூசன் - ஹலோ கைஸ்'




'ஹாய் ராகவ், சோ நைஸ். நண்பர்களே, ராகவ் என்னும் தலையில் கொம்பு முளைத்த அரிய பிராணியைச் சந்தியுங்கள். நமது ஒரு வார நிகழ்ச்சி நிரலில் துவக்க மற்றும் நிறைவு நிகழ்ச்சிக்கு வர இசைந்த ராகவுக்கு, இந்த சிறிய வரவேற்பு' என்று மஹாபலேஷ்வர் தோட்டத்து ரோஜாப் பூங்கொத்துக்களை என்னிடம் அளித்து கை தட்ட, கூட்டமும் தட்டியது.



மரியாதை நிமித்த முதுகு சொறிதல்களுக்குப் பின், நான் சில உண்மைகள் சொல்ல, அவள் இன்னும் பல, பெரிய உண்மைகள் பேச, கலவரம் நிகழும் முன், எச்சரிக்கையுடன் சிரித்து முடித்துக்கொண்டோம். இப்போதைக்கு அவ்வளவுதான். இனி நாளை இரவுதான் அவளுடன் விருந்து என்ற நிம்மதியில் அலுவலக வேலைக்கிடையில் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் போல கவிதை முயற்சியில் இறங்கித் தோற்றேன்.



இந்த சந்தர்ப்பத்தில் சூசனை விவரிப்பதற்கு சிறிது அவகாசம் கிடைக்கிறது. முழுப் பெயர் சூசன் ஜார்ஜ். சிகப்பி. உயரி. அழகி. வயது முப்பத்தி இரண்டு என்று ஞாபகம். அவர்கள் 25-38 வரை கிட்டத் தட்ட ஒரே மாதிரி இருப்பதால் அவர்கள் வயதை துல்லியமாகக் கண்டுபிடிக்க நான் முயல்வதில்லை. டொரோண்டோ அருகில் உள்ள ஹாமில்டன் என்னும் சிறு நகரம் அவள் பிறந்து வளர்ந்து, அழகான இடம். கால்கரியில் பட்டம் முடித்து, டோரோண்டோவில் மேற்படிப்பு... இல்லை “யேல் எம்.பி.ஏ” என்றாளே. என்னவோ போங்க சார், இந்தப் கல்வி பற்றிய தகவல்கள் மட்டும் மூளைக்குள் நுழைய மாட்டேங்குது. எங்கப் படிச்சா நமக்கென்ன.



செவ்வாய் மதியம் கூப்பிட்டு, ‘நமது இரவு விருந்தை நாளை இரவுக்கு மாற்றட்டுமா’ என்றாள். 'நோ இஷ்யுஸ்' என்று சொல்லிவிட்டு மகிழ்ந்தேன். புதன் மாலை. 'பெரிய ஹோட்டல் சாப்பாடு அலுக்கிறது. நல்ல உணவகம் இருந்தால் சொல்லு. அங்கே போகலாம்' என்றாள். வொர்லியில் (வீட்டுக்குச் செல்லும் வழி. நேரம் மிச்சம்) 'ஜ்வெல் ஆப் இந்தியா' என்னும் உணவகம் சென்று இடம் பிடித்து அடுத்த மூன்று மணிநேர அறுவைக்குத் தயாரானேன்.



சட்டென்று அடையாளம் தெரியாத வெளிர் நீல சூடிதார் உடையில் வந்தாள். ஆபீஸில் மெதுவாகக் கைகுலுக்கும் சூசன் இப்போது ஆரத் தழுவினாள். சில பெண்கள் எவ்வளவு அழகாக இருந்தாலும் நமக்கு உள்ளிருக்கும் ஏதோவொன்று 'அட இருந்துட்டுப் போகட்டுமே. சும்மா தொந்தரவு செய்யாதே' என்று சோம்பேறித்தனம் காட்டும். அப்போதெல்லாம் ஒரு படபடப்பு, உத்வேகம், இத்யாதிகள் வருவதில்லை. ஒரு கசின் சிஸ்டரைப் பார்க்கும் உணர்வே மிஞ்சும். எனக்கு அப்படித்தான் இப்போது இருந்தது.



யோக்கியனாக நடிக்க முயன்ற என்னை சட்டை செய்யாமல் எனக்கு பியரும் அவளுக்கு 'ஜின்' என்னும் பெண்கள் அருந்தும் மதுவும் ஆர்டர் செய்தாள். 'இன்னைக்கு நமக்கு சரியான பூசைதான் விட்டுல' என்று அப்போதே வெளிறத் துவங்கினேன். முகத்தைச் சரியாகப் படித்தவள் போல, 'அனு கிட்ட நான் பேசிக்கறேன். பயப்படாமல் ஒரு கிளாஸ் பியர் குடி. அதற்கு மேல் நீ கேட்டாலும் கிடையாது' என்றதில் சிறிது ஆசுவாசம் ஆனேன்.



'இதோ பார் ராகவ், ஆபிஸ் பற்றி ஒரு வார்த்தை பேசக்கூடாது. நீயும் நானும், கொஞ்சம் சிடுமூஞ்சிகள் ஆனாலும் நல்ல நண்பர்களாக இருக்கலாம். சோ..'

'ஆகச் சரி குரங்கே'



என் மேல் தெறித்த கால் டம்ப்ளர் ஜின்னில் என் சட்டை ஈரமானதுடன், எங்கள் இறுக்கமும் காணாமல் போனது.

முதலில் தன்னை பற்றி நிறைய சொன்னாள். உயர் மத்யம குடும்பம். கல்வி. விளையாட்டு (ஐஸ் ஹாக்கி ரொம்ப பிடிக்கும்). கல்லூரி காதல் இரண்டு ஆண்டுகள். பிறகு மேற்படிப்பு. வேலை. பதவி உயர்வு. மேலும் அதிக வேலை. இடையில் ஹார்மிசன் என்னும் அழகான வாலிபனின் பிரவேசம். வாழ்வு மகிழ்ச்சியின் உச்சத்தில் திக்கு முக்கடியது. இன்னும் ஏறக்குறைய அவ்வாறே செல்லும் வாழ்க்கை என்று நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டு பேசினாள்.



'நானே பேசிக்கொண்டு இருக்கிறேன். நீ சொல்லு இப்போ'



'பெருசா ஒண்ணும் இல்ல'

'ஆபிஸ் சொற்பொழிவு போல் போலியாக இருக்காதே. ஓபன் அவுட் யு டாக்'



நானும் நிறைய பேசினேன். எல்லோரோடும் போட்டி போட்டு, அரைகுறை வெற்றி பெற்று, கிடைத்த வேலையை வாங்கிக்கொண்டு, வேண்டிய வேலையை அதன் மாயக் கவர்ச்சி போனபின் பெற்று, எல்லா சராரசி ஆண்கள் போல் நான்கு பெண்களைப் பார்த்து, மூவரைக் குறிவைத்து, இருவரைத் தேர்வு செய்து, ஏமாந்த ஒருத்தியைக் காதலித்து, ஆச்சரியமாக அவளையே திருமணமும் செய்ததுவரை எல்லாம் சொன்னேன்.



"உன் வாழ்க்கை பிரமாதமாக இருக்கிறது. ஜிக் ஜாக் என்று மேலும் கீழும், மாயமும், சிறு சிறு ஏமாற்றங்களும். நீ விவரித்த விதம் இன்னும் சுவாரஸ்யம். இந்தியாவைப் பற்றி பேசேன். எளிதில் புரிந்துகொள்ள முடியவில்லை உங்கள் நாட்டை"



"உங்கள் நாட்டுக்கு 300-400 வயது. பொருளாதார முறையில் செதுக்கப்பட்ட, ஓரளவு தட்டையான கலாசாரம். நான் சொல்வதை தவறாக எண்ணாதே. இந்தியா மிகப் பழமையானது. தொன்மை வாய்ந்தது"

"எனக்கும் தெரியும். மூவாயிரம் ஆண்டுகள் முந்தைய கலாசாரம். ரைட்? "



"வெளியில் சொல்லாதே. ஒரு பொதுக்கூட்டமே உன்னை அடிக்க ஓடி வரும். காஷ்மிரிலிருந்து கன்யாகுமரி வரை யாரைக் கேட்டாலும், இந்தியாவுக்கு சராசரி வயது ஒரு பத்தாயிரமாவது இருக்கும்"



"சும்மா விளையாடாதே"



"நெசமாலுந்தான் புள்ள. தெற்கே செல்லச் செல்ல, குமரி மாவட்ட ஆசாமிக மூழ்கிப்போன குமரிக் கண்டத்த கணக்கில எடுத்தா, ஒரு இலட்சம் வருஷ கலாச்சாரம்னு சொல்லுவாங்க"



"இதுல எவ்வளோ கட்டுக்கதை? எவ்வளோ வரலாற்று உண்மைகள்?"



"யாரு சொல்றாங்க என்பதைப் பொறுத்தே கதையா அல்லது வரலாறா என்று முடிவு செய்யப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை இரண்டுக்கும் அதிக வித்தியாசம் இல்லை - உங்கள் மேற்கத்திய வரலாற்று உண்மைகள் உட்பட"



எல்லாம் பேசி முடித்த போது மணி ஒன்பது. மீண்டும் ஆரத்தழுவிய சூசன் என் தங்கையை நினைவு படுத்தினாள்.



"ஒரு உர்ரான்குட்டானுக்குள்ள இவ்வளவு மென்மையான ஆசாமி ஒளிந்திருப்பானு நினைக்கல. நல்லது. நாளை காலை பார்ப்போம். போரைத் தொடர்வோம்" என்று சொல்லி டாக்சியில் ஏறி ஹோட்டலைச் சென்றடைந்தாள்.



நான் இளம் ஏப்பத்துடன், இளையராஜாவைக் கேட்டுக்கொண்டு, வீடு சேர்ந்தபோது பத்து. வழக்கம் போல வடிவேலு பார்க்காமல் தூக்கம் வராது என்பதால், அனுவுடன் அமர்ந்தேன். விளம்பர இடைவேளையில், சேனல் தாவுகையில், டைம்ஸ் நவ்வில் "தாஜ் மற்றும் ஓபராய் ஹோட்டல்களில் பயங்கரவாதிகள் நுழைவு" என்ற Breaking News.



முதலில் உரைக்கவில்லை. கடவுளே, சூசன் தங்கியிருப்பது ஓபராய் அல்லவா!



சுசனைத் தொலைபேசியில் கூப்பிட்டேன். மொபைல், மற்றும் ப்ளாக்பெர்ரி இரண்டுமே உயிர் போயிருந்தது. ஹோட்டல் நம்பர் சிலமுறை 'தற்சமயம் உபயோகத்தில் இல்லை'; பலமுறை சுடுகாட்டு மௌனம். ச்சே, என்ன உவமை.



அனு, 'வண்டி எடுங்கள், போய் பார்த்துவிடலாம்' என்றாள்.



Pant போடும்போதே, நிகழ்ச்சிகளின் தீவிரம் புரியத் தொடங்கியது. நாங்கள், அந்தேரி தாண்டுகையில், இடையில் மறித்த கும்பல் ஒன்று "பார்லாவில் குண்டு போட்டு, ஒரு டாக்சி சுக்குநூறு, மேலே போகாதீர்கள்" என்றது. ஆயினும் குருட்டு தைரியத்திலும், சூசன் பற்றிய பயங்களிலும் காரை மேலும் ஓட்டினேன். ஒரு கூட்டம் வழியில் நின்றதால், வேறு வழியின்றி காரை நிறுத்தி ..'ஒ என்ன கோரம்! ஒரு தலை மட்டும் ரோட்டின் ஓரத்தில், கழுத்தில் ரத்தக்கூழுடன்'. அதற்கு மேல் முடியவில்லை இருவருக்கும். பேசாமல் திரும்பிவிட்டோம்.



முடிந்த வரை விழித்திருந்து இருவரும் தொலைக்காட்சி பார்த்தோம். NDTV, TIMES NOW, CNN IBN என்று எல்லா சேனல்களும் நேரடி ஒளிபரப்பில் TRP ஏற்றிக்கொண்டிருந்தன. மூன்று மணியளவில் அசதியில் கண்ணயர்ந்துவிட்டோம். காலை ஆறு மணிக்கே புறப்பட்டேன். அவளுக்கு ஒன்றும் ஆகி இருக்காது.



சாலை முழுதும் வெறிச்சோடி இருந்தது. மரின் டிரைவ் மும்பையின் கிரிடங்களில் ஒன்று. பெடெர் சாலையிலிருந்து மரின் டிரைவ் திரும்பியதுமே, தூரத்தில் எழும்பிய ஓபராய் ஹோட்டல். அதனுள் பதினாறாம் அடுக்கில் … சூசன்?



'இல்லை. அவள் அங்கு இல்லை. அந்தக் கிறுக்கு, பெரிய வாக்கிங் சென்று, ஹோட்டலுக்குள் நுழைய முடியாமல் முழித்துக்கொண்டு இருக்கவேண்டும். அப்படியானால் போன் பண்ணுவாளே. ஐயோ, மூளையே, கொஞ்சம் நேரம் தர்க்கரீதியாக சிந்திக்காமல் இரேன்'.



மரின் பிளாசா என்ற ஹோட்டல் அருகிலேயே காரை நிறுத்திவிட்டார்கள். ஏகப்பட்ட கெடுபிடி. என்னைபோன்ற பலர் உறவினர், நண்பர்களை ஒபராயில் தொலைத்துவிட்டு, கையறு நிலையில் முழித்துக்கொண்டு இருந்தோம். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. உதவி செய்யவும் யாருமில்லை. ஆபிஸ் P.R.O. வும் வந்துவிட்டு இருந்தார். எனக்கு 'இதெல்லாம் சகஜமப்பா' பாணியில் காக்கியில் மெல்ல நகர்ந்துகொண்டிருந்த மகாராஷ்டிர போலீஸ் மீது நம்பிக்கை சிறிதும் இல்லை. சிறிது நேரத்தில் என்.எஸ்.ஜி. வந்தது.

யாருக்கும் ஒரு தகவலும் சொல்லப்படவில்லை. ஏனென்றால், யாருக்கும் எதுவும் தெரியவில்லை. சேனல்கள் தங்கள் அனுமானங்களை, வழக்கம் போல், செய்திகளாகச் சொல்லிக்கொண்டிருந்தன.



அப்புறம், ஒரு D.G.P. பரிந்துரையில், ஹோட்டல் அருகில் செல்ல அனுமதி கிடைத்தது. அங்கு மிக சூடாகவும், புகையினால் தொண்டை எரிச்சலும் இருந்தது. ஓபராயின் பெண் ஒருத்தி, ஒரு ராணுவ வீரருடன் அமர்ந்து விருந்தினர் பட்டியலைக் கலந்தாலோசித்து, உறவினர்/நண்பர்களுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தாள். மெல்ல, மெல்ல, அச்சத்துடன் அவளை அணுகி 'சூசன் ஜார்ஜ்; ரூம் நம்பர் 1617 ' என்றேன். என் வாழ்வின் மிக மிக அதிகமான இரண்டு நிமிடங்களை எடுத்துக்கொண்டு, உதட்டைப் பிதுக்கி, சற்று சோகத்துடன் 'அவள் மேலே இருக்கிறாள்' என்றாள்.

'இஸ் ஷி அலைவ்?'



'டொன்னோ. நிறைய பேரை கொன்று விட்டார்கள். பல பேர் பணயக்கைதிகளாக இருக்கக்கூடும் என்று எண்ணுகிறோம்'



'எப்படி மீட்கப் போகிறீர்கள்?'



'என்.எஸ்.ஜி.யை நம்புங்கள். நிச்சயம் நாங்கள் செய்வோம்' என்றார் இராணுவம்.



இதற்குள் சில உடல்களை வெளியே கொண்டு வந்தார்கள். சிலருக்கு உயிரும் இருந்தது. ஒரு அம்புலன்சின் மூடும் கதவில், கடைசியாக சூசனின் வெளிர் நீலச் சூடிதார் தெரிய, விழுந்தடித்துக்கொண்டு ஓடினேன். ஜெ.ஜெ.ஹாஸ்பெடல் சென்றடைந்து, அவர்களை பிடிக்கையில், சூசன் எங்கோ உள்ளே கொண்டு செல்லப்பட்டிருந்தாள். விசாரித்ததில், 'நிலைமை மிக மோசம் என்றும், பிழைக்க வாய்ப்பு இருபது விழுக்காடு' என்றும் சொன்னார்கள். ஆயினும், அந்த ஊழியர்களும், மருத்துவர்களும் ஆற்றிய பணியை என் வாழ்நாளில் மறக்க முடியாது. இது அல்லவா சேவை. பிறகு வாழ்வில் அரிய கணங்களில் ஒன்றாக பிரார்த்தனைகள் செய்யத் துவங்கினேன்.



சூசனின் தந்தைக்கும், அவளின் ஆதர்ச கணவனுக்கும் (ஹர்மிசன்) தொலைபேசியில் "ஒன்றும் கவலைப்பட வேண்டாம்" என்று சொன்னதற்கு, மற்றவர்கள் திட்டினார்கள். இப்படியே கழிந்த அடுத்த பதினெட்டு மணி நேரங்களுக்குப் பின் ஜெ.ஜெ.வின் ஐ.சி.யு. வழியே ஒரு நல்ல செய்தி 'அவள் பிழைத்துவிட்டாள் என்று நம்புகிறோம். வாழ்த்துக்கள்.'



அவள் நுரையீரலை ஒரு தோட்டா காற்றிழக்கச் செய்து, கிழித்துவிட்டிருந்தது. 'நிறைய இரத்த இழப்புடன் சேர்க்கப்பட்ட அவள் பிழைத்தது ஒரு மருத்துவ விந்தை மற்றும் அவளுடைய வாழ்வின் மீதான பிடிப்பு' என்று அவர்கள் கூறினார்கள்.



இன்று காலை சென்றபோது அவளுக்கு சுய நினைவு திரும்பியிருந்தது. மிகச் சோர்வுடன் என் கைகளைப் பிடித்தவள் கைகளில் என் முகத்தை புதைத்து .....வேண்டாம், ஆண்கள் அழுதாலும் வெளியில் சொல்லக்கூடாது என்பது ஒரு வினோத நியதி.



இப்போது பார்க்கிறேன் குருபெயர்ச்சி பலன்கள்: "மகர ராசிக் காரர்களுக்கு மேற்கில் இருந்து வரும் விருந்தாளிகளால் மிகுந்த மனக் கிலேசமும், அலைச்சலும் அமையும். உங்கள் உதவும் மனப்பான்மையால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானாலும், கடவுள் பக்தி மிகுந்த (!) உங்களுக்கு தன்வந்திரி யோகம் இருப்பதால் இந்தக் கவலையிலிருந்து சீக்கிரமே மீள்வீர்கள். புதிதான உறவுகள் பிறக்கும்'.



எப்போதும் ஜோசியத்தில் ஆர்வமுடைய அனு, 'ஐயோ, மிகச் சரியாகத்தான் போட்டிருக்கிறார்கள்.' என்றாள்.
*****************************************************************************************

இது ஒரு மீள்பதிவு. எதற்கு  என்ற கேட்பவர்களுக்கு: 

பதிவில் எழுத புதிதாக விஷயம் ஒன்றுமில்லை; 
இப்போது பயணத்தில் இருப்பதால் இணைய இணைப்புக்குக் கொஞ்சம் சிரமம்; 
பிரபலங்கள் மீள்பதிவு போடுவதைப் பார்த்து, இந்தப் பூனையும்.....

முன்பே படித்தவர்கள் கோபிக்காதீர்கள். மற்றவர்களும் படிக்கலாமே என்று தான்..

18 comments:

கார்க்கிபவா said...

//பிரபலங்கள் மீள்பதிவு போடுவதைப் பார்த்து, இந்தப் பூனையும்//

நல்ல வேளை..

புதிதாய் கவிதை எழுதாமல் இது போன்று மீள்பதிவு போட்டால் ஹிட்ஸூம், ஃபோலொயர்ஸும் அதிகரிக்க கூடுமென ஒன்பதில் இருக்கும் சுக்ரன் சொல்றாருங்க

மணிஜி said...

டச்சிங்.....

அமிர்தவர்ஷினி அம்மா said...

இப்போதுதான் முதல்முறையாக படிக்கிறேன்.

பிரமிக்க வைத்த விறுவிறு எழுத்து நடை.

இப்போது சூசன் எப்படியிருக்கிறார்கள்?

பா.ராஜாராம் said...

மீள் பதிவுக்கு நன்றி அனு.இப்பத்தான் வாசிக்கிறேன்.அப்பா.. என்ன சுவராஸ்யமான நடை!ஆனால் சம்பவம் யாருக்கும் நிகழ வேணாம்.இப்போ சிகப்பி நலமா?நல்லா இருக்கட்டும் மக்கா.

வினோத் கெளதம் said...

அடுத்து என்ன நடக்குமோன்னு இருந்துச்சு..சூஸன் இப்ப நல்லா இருக்கங்கள அது போதும்..

Mahesh said...

டச்சிங் ராகவ்......

Thamira said...

நானும் முதல் முறையாக படிக்கிறேன். ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டதால் ஒரு பயத்தோடே படிக்கவைத்தது, வேதனையை நெடுக வைத்திருந்த இந்த பதிவு.

இன்றைய பொழுதில் சூசனின் நிலை குறித்து அப்டேட் செய்திருக்கலாம்.

சிவக்குமரன் said...

இந்த சம்பவம் நிகழ்ந்த போது, நான் எனது நிறுவனத்தின் மும்பை கிளையில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். நான் தங்கியிருந்த முகவரி ஷ்ரத்தானந்தா சாலையில். அதிவேக நெடுஞ்சாலைக்கருகில். பார்லா டாக்சி குண்டுவெடிப்பு நிகழ்ந்தபோது அந்த அதிர்வு அலைகள் நான் தங்கியிருந்த இடங்களில் உள்ளவர்களால் மிகத் தெளிவாக உணரப்பட்டது. நாங்கள் நில நடுக்கம் என்றெண்ணி வெளியில் கூடிப் பேசிக்கொண்டிருக்கும்போது, எனக்கு மொபைலில் வந்த அழைப்பு , என் நிறுவனத்தின் தலைவரிடமிருந்து. அவருடைய முதல் கேள்வி, all are alive? காரணம்? எங்களில் பெரும்பாலானோருக்கு சி.எஸ்.டி பகுதியில்தான் அன்றைய வேலை. எங்களில் மூவர் சி.எஸ்.டி இலிருந்து கிளம்பிய நேரம் 8.15.
பிறகு தொலைக்காட்சி செய்தி பார்க்கும்போதுதான் நிலைமையின் தீவிரம் புரிந்தது. என் வாழ்வின் நினைவுகள் தேங்கிய நாட்களில் ஒன்று.

thamizhparavai said...

நல்ல வேளை மீள்பதிவிட்டீர்கள்.. இல்லையேல் மிஸ் பண்ணியிருப்பேன்...
இதை நல்ல கட்டுரைன்னு சொல்றதா இல்லை பதட்ட நேர உங்கள் இதயத் துடிப்பை உணர்ந்து அதிர்வதா...??

Unknown said...

ஒவ்வொரு பத்திக்கும் நடுவுல எதுக்கு அண்ணா அவ்ளோ கேப்? Scorl பண்ணா ரொம்ப பெரிய பதிவு மாதிரி தெரியுது.. எடிட் பண்ணும்போது கொஞ்சம் பத்திகளுக்கான இடைவெளிகளை குறைங்க.. பதிவு ஏற்கனவே படிச்சு,பாராட்டிட்டதால(?!) இங்க கருத்து மட்டும் சொல்லிட்டு போறேன்.. ஹி ஹி ஹி :))))))))

"உழவன்" "Uzhavan" said...

மனதைக் கரைத்துவிட்டது :-(

jamee said...

I never read a blog like this before.. Really I got goose bumps while reading.

ராமலக்ஷ்மி said...

முன்னரே படித்ததுதான் என்றாலும் இந்தநாளில் இதைப் பகிர்ந்திருப்பது நன்றே.

பெசொவி said...

அப்போது படிக்கவில்லை, இப்போதுதான் படிச்சேன்.

ஒவ்வொரு வரியிலும் உங்களோடு நானும் அந்த துயரத்தை அனுபவிப்பது போல், டச்சிங் நடை.

இப்போது சூசன் எப்படி இருக்கிறார்?

anujanya said...

@ கார்க்கி

:))))).

@ தண்டோரா

நன்றி மணிஜி

@ அமித்து.அம்மா

நன்றி AA. சூசன் கனடாவில் இருக்கிறார். சில சிறு உபாதைகள் தவிர்த்து, நன்றாகவே இருக்கிறார்.

@ ராஜாராம்

நன்றி ராஜா. சூசன் நலமே.

@ ஸ்ரீமதி

வெளியூரிலிருந்து, ஏதோ எனக்குத் தெரிந்த தொழில் நுட்பத்தில் மீள் பதிவு போட்டதே பெரிய விஷயம். இதுல இந்த அம்மாவுக்கு scrol செய்ய கஷ்டமாம். இருந்தாலும், அடுத்த முறை ஆவன செய்கிறேன் மேடம் :)

@ சிவக்குமாரன்

ஒவ்வொருவருக்கும் மறக்க முடியாத அனுபவங்கள். இப்ப எங்க இருக்கீங்க பாஸ்?

@ உழவன்

நன்றி தல

@ தமிழ்ப்பறவை

நன்றி பரணி. வாழ்த்துகளும் ('நச்' சுக்காக)

@ jamee

Thanks buddy.

@ மஹேஷ்

தேங்க்ஸ்பா.

@ வினோத்கௌதம்

நன்றி வினோத்.

@ ஆ.மூ.கி.

நன்றி ஆதி. அபூர்வமான பாராட்டு. சூசன் தற்போது நலம், சிறு உபாதைகள் இருந்தாலும்.

@ ராமலக்ஷ்மி

நன்றி சகோ. நீங்க சொல்றதுதான் சரி :)

@ பெயர் சொல்ல விருப்பமில்லை (அடுத்த முறை பெ.சொ.வி.தான். ஓகே?)

நன்றி உங்கள் முதல் வருகைக்கும், பாராட்டுக்கும். இது என்ன விளையாட்டு? சீக்கிரம் பேர சொல்லுங்க. சூசன் நலம்.

அனுஜன்யா

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

இப்போதுதான் முதலில் படிக்கிறேன்..

அனுபவங்களிலிருந்து தோன்றும் எழுத்துக்கள் எப்போதும் அசத்தலாக இருக்கும்..

நல்ல பத்தி....

anujanya said...

@ அறிவன்

நன்றி அறிவன் - உங்கள் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும்.

அனுஜன்யா

சிவக்குமரன் said...

google plus-ல் மீண்டும் நினைவுக்கிளறல்கள்.