Wednesday, November 18, 2009

ஒரு கவிதையின் கதை

பத்திரிகைகளுக்கு படைப்புகளை அனுப்பும்போது பிரசுரம் ஆனால் போதும் என்ற மனநிலையே ஆரம்ப நிலை படைப்பாளிகளுக்கு இருக்கும். பத்திரிகை ஆசிரியர்களுக்குப் படைப்பின் தரத்துடன் நேர்த்தி, வடிவமைப்பு, வாசகர்களின் ரசனை அளவு போன்ற அளவுகோல்களும் இருக்கும் என்று நினைக்கிறேன். அதனால், படைப்பில் சில மாற்றங்கள் செய்வது அவர்கள் உரிமை மற்றும் தேவையும் கூட என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.



பொதுவாகக் கவிஞர்கள் மற்றவர்களைக் காட்டிலும் உணர்ச்சிவசப் படக்கூடியவர்கள். மென்மையானவர்கள். உத்வேகம் மிகுந்தவர்கள். தம் படைப்பில் ஆழ்ந்த பெருமை உடையவர்கள் என்பது என் எண்ணம். நிச்சயமாக உரைநடை அளவு கவிதை எழுதுவது எளிதில்லை. எனக்குப் பிடித்த கவிதாயினி பெருந்தேவி சொல்வது போல கவிதை என்பது 'மொழியின் கொதிநிலை'.


எதற்கு இத்தனை பீடிகை என்றால்...நான் ஒரு கவிதை 'உன்னதம்' என்னும் சிற்றிதழுக்கு அனுப்பி இருந்தேன். அந்தக் கவிதை பிரசுரம் ஆனது எனக்கு நண்பர் பொன்.வாசுதேவன் (அகநாழிகை) சொல்லித்தான் தெரிய வந்தது. பிறகு பத்திரிக்கை கையில் வந்ததும் பெருமையுடன் பிரித்துப் பார்த்தால் கவிதை உருமாற்றம் அடைந்திருந்தது. உண்மையில் அது 'கவிதை' ஆகியிருந்தது. பிரசுரமான கவிதை, நான் அனுப்பிய கவிதை முயற்சி இரண்டையும் கீழே தருகிறேன். அப்போது உங்களுக்குப் புரியும் - பத்திரிகை ஆசிரியர்களின் அன்றாடச் சிரமங்கள் எவ்வளவு என்று.


சில நாட்கள் முன் 'உன்னதம்' ஆசிரியர் கௌதம சித்தார்த்தன் அவர்களுடன் பேசும்போது அவரே 'சில மாற்றங்கள் செய்தேன். பரவாயில்லை தானே' என்று பரிவாகக் கேட்டார். நமக்கு நம்ம பேர் அச்சில் வரணும். அதுவும் நிசமாலுமே ஒரு கவிதையின் எதிரில் என்றால் கசக்குமா? 'தாராளமாகச் செய்யுங்கள்' என்றேன். பிறகு யோசித்தேன். மற்ற கவிஞர்கள்/படைப்பாளிகள் எப்படி உணருவார்கள் என்று. உதாரணத்திற்கு, நண்பன் சேரல் நான் அவதானித்த அளவில் தன் படைப்புகளில் நியாயமான பெருமை உடையவர். சமயங்களில் சில பின்னூட்டங்கள் 'இந்த வரி இப்படி இருக்கலாம்; இன்னும் கொஞ்சம் சொற்சிக்கனம் தேவை' என்ற தொனியில் வந்தால், 'இருக்கலாம். ஆனால் இது என் கவிதை; என் குழந்தை; இப்படியே இருக்கட்டும்; அதுதான் எனக்குப் பிடித்திருக்கிறது' என்று சொல்வதைக் கவனித்து இருக்கிறேன். அதை மமதை, கர்வம் என்று கொள்ளாமல் நியாயமான, இயல்பான தன்னம்பிக்கை என்றே பொருள்கொள்ள வேண்டும்.


அதே சமயம், நண்பன் முத்துவேல் ஒரு முறை ஹரன் பிரசன்னாவின் இரு வரிக் கவிதையைப் பார்த்து, நான் பலவரிகளில் சொல்லியதை இவ்வளவு அழகாக, சிக்கனமாகச் சொல்ல முடியுமா என்று வியந்த அடக்கத்தையும் குறிப்பிட வேண்டும்.


‘உன்னதம்’ உருமாற்றிய கவிதையில் சொல்லப்படுவதற்கும், நான் சொல்ல வந்ததற்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதை உணர்ந்ததால் இதை எழுதுகிறேன். நான் சராசரி மனிதனின் அல்ப ஆசைகளை சற்று அங்கதமாக சொல்ல முயன்றேன். பிரசுரம் ஆகிய கவிதை இன்னும் சற்று ஆழமாக, சிந்தனையைத் தூண்டும் விதமாக இருக்கிறது. இவ்வளவு பீடிகை போதும். இனி கவிதைகள்:

முதலில் நான் அனுப்பிய கவிதை



மனக்கணக்கு


குளிரைப் போக்கிட


விசிறியை நிறுத்தினேன்


வட்டப் படலமாய்த்


தொங்கிச் சுழன்ற


மின்விசிறி இறக்கைகள்


மூன்றாகப் பிரிந்து


ஒன்றை ஒன்று


துரத்தத் துவங்கியதில்


சாயம் போயிருந்த


ஒரு இறக்கை


என்னைக் கடப்பதை


எண்ணத் தொடங்கினேன்


ஒவ்வொரு சுற்றிலும்


என் மீத வருடங்கள்


ஏறிக் கொண்டிருந்தன


ப ன் னி ரெ ண் டி ல்


பதட்டமாகி


மீண்டும் தட்டிவிட்டேன்,


அடுத்த முறை


ஊதிய உயர்வோ, காதலிகளோ


மட்டுமே எண்ணவேண்டும்


என்ற முடிவோடு






இப்போது பிரசுரம் ஆகிய கவிதை






வெக்கை


வெந்து புழுங்கியத்தில்


விசிறியை ஓடவிட்டேன்






வட்டப் படலமாய்த்


தொங்கிச் சுழன்ற


மின்விசிறி இறக்கைகள்


மூன்றாகப் பிரிந்து


ஒன்றை ஒன்று


துரத்தத் துவங்கியதில்


சாயம் போயிருந்த


அந்த இறக்கைகள்


என்னைக் கடப்பதை


எண்ணத் தொடங்கியது காலம்






என்னைச் சூழ அடர்ந்த காற்று


காதோரங்களில் நரை ஏற்றியதில்


பதட்டமாகி விசிறியை நிறுத்தினேன்






வெந்து புழுங்கியது வெளி




47 comments:

வளர்மதி said...

அனுஜன்யா,

கௌதம சித்தார்த்தன் செய்திருப்பது என்னைப் பொருத்த அளவில் மிக மோசமான ஒரு முன்னுதாரணம். கவிதை அனுப்பியவருடன் பேசி “இது போன்ற திருத்தங்களைச் செய்தால் மேலும் நன்றாக வரும்” என்று சொல்வதே அதை வெளியிட விரும்பு ஒரு இதழாசிரியரின் பொறுப்பு. தன் விருப்பப்படி - அனுமதியின்றி திருத்திவிட்டு பின் “ஒன்னும் கோவிச்சுக்க மாட்டீங்களே” என்று கேட்பது ... கடுமையான வார்த்தைகளைப் பிரயோகிக்க விருப்பமில்லை :(

கார்க்கிபவா said...

வல்லவனுக்கு வல்லவன் பூமியில் உண்டுன்னு சும்மாவா சொன்னாங்க.. ஆனாலும் ஒரே பதிவில் இரண்டு குண்டுகள் எல்லாம் ஓவரு சாமீயோவ்..

Rajan said...

டிங்கரிங் பண்ணிட்டாங்க!

தினேஷ் ராம் said...

:D

இரண்டாவது கதை கொஞ்சம் அடர்த்தி மிக்கதாய் உள்ளது போல் படுகிறது.

☼ வெயிலான் said...

ஆஹா! இது தான் தொழில் ரகசியமா? :)

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நீங்கள் எழுதிய கவிதை முற்றிலும் வேறு. இந்த மாற்றம் பிரசுரிக்க முன்பு அனுமதி பெறப் பட்டிருக்க வேண்டும் என்பது என் கருத்து.

தராசு said...

ரெண்டும் ரெண்டு ரகம்

Ashok D said...

இரண்டுமே வேறுவேறானவை. முக்கியமாய் second halfல். உங்களது ’மிடில் க்ளாஸ் மாதன்’ என்றால் கௌதம மாற்றியது தத்துவம்.

//வெந்து புழுங்கியது வெளி//
’சுற்றி சூழ்ந்தது வானம்’ என்ற எனது வரி நியாபகத்திற்கு வந்து போனது :)

மணிஜி said...

வளர்மதி...நீங்கள் சொல்வது சரியாயிருக்கலாம்..ஆனால் பத்திரிக்கையில் மாற்றவும், திருத்தவும் ஆசிரியருக்கு அனுமதி உண்டு என்றே அறிகிறேன்..விவாதம் திசை மாற வேண்டாமே...

நல்லவேளை...
நிலமை இன்னும்
மோசமடைவதற்குள்
கட்டானது கரண்ட்....

Ashok D said...

//கவிதாயினி பெருந்தேவி சொல்வது போல கவிதை என்பது 'மொழியின் கொதிநிலை'//

:)

Thamira said...

வெளியானது கவிதை முற்றிலுமாக வேறு பொருள் தருகிறது என்றே சொல்வேன்.

இன்னொரு முக்கிய விஷயத்தையும் சொல்லவேண்டும்.

முதல் கவிதையை சாதாரணமாக படித்திருந்தால் எத்தனை தூரம் உள்வாங்கிக்கொண்டிருந்திருப்பேன் என தெரியவில்லை. ஆனால் அதற்கு முன்னால், உங்களது 'சராசரி மனிதனின் அல்ப ஆசைகளை சற்று அங்கதமாக சொல்ல முயன்றேன்' என்ற ஒற்றை வரி கவிதையை முழுதுமாக ரசிக்க, உணர உதவியது. இதைப்போல சின்னச் சின்ன கோனார் நோட்ஸ், என்னைப்போன்ற இளையவர்களுக்கு கவிதைகளுடன் இன்னும் நெருங்கச்செய்ய உதவும். தொடர்ந்து செய்வீர்களா.?

மணிஜி said...

///வெந்து புழுங்கியது வெளி//
’சுற்றி சூழ்ந்தது வானம்’ என்ற எனது வரி நியாபகத்திற்கு வந்து போனது :)//

ஆனாலும் இது ஓவர்யா!!

Vinitha said...

நீங்க முதலில் எழுதியதே நன்றாக இருந்ததாக எனக்கு ஒரு எண்ணம்.

சரி விட்டுக்கொடுத்தல் என்பது வைரமுத்துவிற்கும் இருந்ததாமே? இருவர் படப்பாடல் ஒன்றினை பற்றி அவர் காபி வித் அணு நிகழ்ச்சியில் சொன்னது...

மண்குதிரை said...

வணக்கம் தலைவரே

நிறையவே மாற்றம் அடைந்திருக்கிறது.

வளர்மதி said...

அனுஜன்யா,

நிதானமாக மீண்டும் மீண்டும் இரு கவிதைகளையும் வாசித்துப் பார்த்ததில் கோபமே மேலிடுகிறது. கௌதம சித்தார்த்தன் செய்திருப்பது மிகமோசமான editorial arrogance. வார்த்தைகளை விட்டுவிட வேண்டாம் என்று மிகவும் கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கிறேன். தனியாக ஒரு பதிவு எழுத யோசனை. எழுதியதும் தெரிவிக்கிறேன்.

Ashok D said...

//ஆனாலும் இது ஓவர்யா!!//

தண்டோரா ஜி, இப்படியேல்லாம் எழுதேறனேன்னு ஒரு ’இது’ இருக்க தான் செய்யும்.. விடுங்க.

//நல்லவேளை...
நிலமை இன்னும்
மோசமடைவதற்குள்
கட்டானது கரண்ட்....//
இது உங்க பஞ்ச் :)

அன்புடன் அருணா said...

அச்சச்சோ....இதென்ன..."சில"மாற்றங்களா? எப்படி இப்படி அமைதியாக ஏற்றுக் கொண்டீர்கள் என்பதே எனக்கு வியப்பு!

அகநாழிகை said...
This comment has been removed by the author.
விநாயக முருகன் said...

Sorry Tamil typewriter is not working here...

Lot of difference between these two version of poems...

Each of them is good in their context..

Irandu kavithaikalum nala iruku

நேசமித்ரன் said...

ஒரே மரம்தான் ஆனா ரெண்டு சிங்கமும் வேற வேற தெசைய இல்ல பார்க்குது மூணாவது எஙகன்னு கேக்கப்
படாது
:)

ரெண்டும் நல்லா இருக்கு

சண்ட போடாதீங்க சாமீயோவ்

thamizhparavai said...

முதல் கவிதை புரிஞ்சது..
ரெண்டாவது கவிதை அவ்வளவாப் புரியலை..
அவ்வளவுதான். அரசியல் விளையாட்டுக்கு நான் வரலை...
ஆனா ரெண்டுமே வேற,வேற கவிதைன்ற அளவுல புரியுது...

கார்க்கிபவா said...

//இதைப்போல சின்னச் சின்ன கோனார் நோட்ஸ், என்னைப்போன்ற இளையவர்களுக்கு கவிதைகளுடன் இன்னும் நெருங்கச்செய்ய உதவும்//

யோவ் யோவ் ஏதாவது சொல்லிடப் போறேன்.. போய் உங்களுடைய இன்னைக்கு கவிதையை படிங்க.. எனக்கு படிச்சதும் ஸ்டார்ட் ஆனது.. இன்னும் நிக்கல..

பா.ராஜாராம் said...

ரெண்டும் வெவ்வேறு அழகுடன் உள்ளது,அனு.

யாத்ரா said...

கவிதை நிறையவே மாற்றமடைந்திருக்கிறது,

எனக்கும் வளர்மதி அவர்கள் சொல்வது தான் சரியென்று படுகிறது.

நந்தாகுமாரன் said...

எதற்காக கவிதையின் வரிகளுக்கிடையே இப்படி அநியாயமாக இவ்வளவு spacing தருகிறீர்கள் ... Though I like both the versions of the poems ... your draft seems more unique in experience; the published one has explicit philosophical overtones ... I personally love your version the better ...

நந்தாகுமாரன் said...

I just read other comments ... ha ha ha :)

அ.மு.செய்யது said...

ஒரு கோடி ரூவா கொடுத்தாலும் உங்க‌ க‌விதையை மாற்றி எழுத‌ நீங்க‌ள் அனும‌தித்திருக்க‌ கூடாது த‌ல‌.

ரெண்டாவ‌து க‌விதை ந‌ல்லா இருந்தாலும், முத‌ல் க‌விதையின் ஒரிஜினாலிட்டி,இர‌ண்டாவ‌துல‌ இல்ல‌.

Anonymous said...

ரெண்டும் வேறவேற கவிதைமாதிரி இருக்கு. மாற்றங்களுடன் வெளியிடப்பட்ட ஒரே கவிதைன்னு நினைக்க முடியலை.

சென்ஷி said...

கொடுமை :-(

உயிரோடை said...

உன்ன‌த‌ம் ப‌த்திரிக்கையில் வெளிவ‌ந்த‌மைக்கு வாழ்த்துக்க‌ள்

//வட்டப் படலமாய்த்
தொங்கிச் சுழன்ற
மின்விசிறி இறக்கைகள்


மூன்றாகப் பிரிந்து
ஒன்றை ஒன்று
துரத்தத் துவங்கியதில் //


அட‌ போட‌ வைத்த‌ வ‌ரிக‌ள்

Karthikeyan G said...

கௌதம சித்தார்த்தனின் edited version ரொம்பவும் நல்லா இருக்கு.
அனால் அவர் செய்தது சரியா தவறா என்பது பற்றி தெளிவான அபிப்ராயம் எனக்கு இல்லை.

நர்சிம் said...

வணக்கம்னா.

Unknown said...

'உங்க' கவிதை நல்லா இருக்கு...

வால்பையன் said...

இரண்டுக்கும் சம்பந்தமில்லை,

இரண்டுமே வெவ்வேறு அர்த்தம் தருகிறது!

CS. Mohan Kumar said...

எடிடருக்கு எடிட் செய்யும் உரிமை உண்டு தான். எந்த சந்தேகமும் இல்லை. நாம் விரும்பியவாரே இருக்க நமது blog-ல் மட்டும் தான் வைத்து கொள்ள வேண்டும். புத்தகம் அவர் குழந்தை எனும் போது அதில் எப்படி வர வேண்டுமென அவர் முடிவு செய்யலாம்.

நிற்க. உங்க கவிதையே நன்றாய் இருந்தது. சொல்ல வந்ததை நேரடியாக சொல்லி இருந்தீர்கள். ஒன்ற முடிந்தது

Mohan Kumar
http://veeduthirumbal.blogspot.com

MSK / Saravana said...

வளரின் இரண்டு பின்னூட்டங்களுக்கும் ஒரு பெரிய ரிப்பீட்டு.

அவர் கவிதையும் நல்லாத்தான் இருக்கு. அந்த கவிதைக்கு அவர் பெயரை போட்டு கொள்ள சொல்லி இருக்கலாம். அந்த கவிதை முற்றிலும் உங்களுடையுது இல்லை.

உங்கள் கவிதை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. வேறு எதாவது பத்திரிக்கைக்கு 'உங்கள்' கவிதையை அனுப்பவும்.

"உழவன்" "Uzhavan" said...

hmm.. congratz for Unnatham

செந்தில் நாதன் Senthil Nathan said...

ரெண்டுமே சூப்பர்.....ஆனா உங்கட்ட சொல்லிட்டு மாற்றம் பண்ணிருக்கணும்...

பா.ராஜாராம் said...

அனு,

உங்கள் கவிதை ஒன்றை எண் தளத்திற்கு எடுத்துட்டு போறேன் அனு.என்னை கவர்ந்த வரிகளுக்காக.பத்திரமா திருப்பி தாரேன்.

:-))

Anonymous said...

கெளதம் சித்தார்த் ,
நீ ராஜ தந்திரங்களைக் கரைத்து குடித்திருக்கிறாய் போ ! நல்லவேளை அந்தக் கவிதையை ???? கொஞ்சம் நீர்த்து தந்தாய் இல்லாவிட்டால் "உன்னதம்" படிப்பவர்களின் நிலை என்ன ஆவது.

நீர்மலிவேலியன்

Vaa.Manikandan said...

வளர்மதியின் கருத்துக்களோடு முழு உடன்பாடு எனக்கு.

கவிதை பிடிக்கவில்லையென்றால் ஆசிரியர் நிராகரிக்க வேண்டுமேயல்லாமல் மாற்றியமைக்கக் கூடாது.

தெரிந்த கவிதையின் கருவை தன் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றியமைத்த பிறகு அந்தக் கவிதை மாற்றியவருடையதாகிவிடுகிறது.

கவிதையோடு தனக்கிருக்கும் அந்தரங்க உறவை படைப்பாளி இழந்துவிடுகிறான்.

அச்சில் பெயர் வருவதற்காக செய்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது அனுஜன்யா.

உங்களை நீங்கள் தாழ்த்திக் கொள்ள வேண்டாம்.

Anonymous said...

//உங்கள் கவிதை ஒன்றை எண் தளத்திற்கு எடுத்துட்டு போறேன் .என்னை கவர்ந்த வரிகளுக்காக.பத்திரமா திருப்பி தாரேன்.
:-))//
இந்த டெம்ப்ளேட் பாராட்டா? நக்கலா ? பல பக்கங்களில் இதே மாதிரி எடுத்துட்டுப் போறதால வருகிற சந்தேகம். எது பாராட்டு எது நக்கல் என்றே வர வர புரிந்து கொள்ளமுடிவதில்லை

sathishsangkavi.blogspot.com said...

//இது என் கவிதை; என் குழந்தை; இப்படியே இருக்கட்டும்; அதுதான் எனக்குப் பிடித்திருக்கிறது//

நமது படைப்பை திருத்தவும்,
மெருகேற்றவும் நமக்கு மட்டுமே உரிமை உண்டு......
கருத்து சொல்வதற்கும் மட்டும்
தான் மற்றவர்களுக்கு உரிமை......

anujanya said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் பொதுவாக நான் தனித்தனியே பதில் சொல்வது வழக்கம். அது அவர்களுடன் தனியே உரையாடும் உணர்வைத் தருவதாலும், அதற்கான நேரம் வாய்ப்பதாலும். இந்த முறை சற்று பிரச்சனைக்குரிய இடுகை என்பதாலும், மொத்தமாக இரண்டு கருத்துகள் மட்டுமே இருப்பதாலும் எல்லோருக்கும் பொதுவாக என்னுடைய நிலையை பதிலாகச் சொல்லிவிடுகிறேன்.

இந்த இடுகையை நான் எழுதியது கௌதம சித்தார்த்தன் அவர்களை தவறான கோணத்தில் சித்தரிக்கும்படி செய்துவிட்டதில் எனக்கு மிகவும் வருத்தம். அது எப்போதும் என் நோக்கமில்லை. என்னைப் பொருத்தவரையில் அவர் செய்ததில் சிறிதும் மனவருத்தம் இல்லை என்றாலும், உங்களில் பெரும்பாலோரின் கருத்தான "மாற்றங்கள் செய்ய வேண்டுமென்றால் முன்னாலேயே சொல்ல வேண்டும். அல்லது இவ்வளவு மாற்றம் ஆன கவிதையை உங்கள் பெயரில் பிரசுரம் செய்திருக்க வேண்டாம்' என்னும் நிலையுடன் ஒத்துப் போகிறேன். ஒரு சாதாரணப் பிழை, நோக்கம் தவறாக இருந்தால் மட்டுமே குற்றமாக கருதப்படும். இந்த விதயத்தில் கௌதமனின் நோக்கத்தை யாரும் தவறாகப் பார்க்க முடியாது. அதனால், இந்த விதயத்திற்கு இதற்கு மேல் முக்கியத்துவம் கொடுப்பது அவசியமில்லை என்று தோன்றுகிறது.

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.

அனுஜன்யா

மணிகண்டன் said...

Good answer anujanya. One more request - kindly vote for yourself in tamilmanam. It is always boring to see your post with just one vote and that too mine :)-

மதன் said...

இப்போதுதான் படிக்க நேரம் கிடைத்தது. அப்பப்பா.. கவிதை என்பது எப்போதுமே விவாதங்களுக்கு செங்கம்பளம் விரிக்க வழி செய்கிறது என்று தோன்றுகிறது.

அவரவரும், அவரவர் கருத்தை சொல்லிவிட்டார்கள். எனக்கு சேரலைப் பற்றி நீங்கள் சொன்னது பிடித்தது.

அது கர்வம், மமதை, ஆங்காரம், திமிர் என்று என்ன பெயரால் விளிக்கப்பட்டாலும் சரி. பாரதிக்கு இல்லாததா? அவரளவுக்கு எழுதாவிடினும், இதையாவது செய்வோமே!

வாழ்த்துக்கள் அனு!

:)

anujanya said...

@ மணிகண்டன்

நன்றி மணி. எல்லாவற்றுக்கும் :). எனக்கு தமிழ் மணத்தில் வாக்களிக்கும் தொழில் நுட்பம் வரவில்லை. அதனால் நீங்களே ஒரு கள்ள வோட்டும் போடுங்களேன் :)

Amsterdam எப்படி இருக்கு?

@ மதன்

ஹாய், மதன். ரொம்ப நாள் கழித்து வரீங்க. ஏதாவது சமீபத்தில் எழுதினீர்களா? பெங்களூர் தானே?

உங்கள் கருத்துக்கு நன்றி மதன்.

அனுஜன்யா