Saturday, April 3, 2010

அகநாழிகை - ஒரு பார்வை


முதன் முறையாக அகநாழிகை இதழ் படித்தேன். இது மூன்றாவது நாழிகை (இதழ்) என்று நினைக்கிறேன். அட்டைப்படம் சுழன்று நடனமாடும் ஒரு நங்கையின் படத்துடன் நன்றாக இருக்கிறது.


தலையங்கம் ‘விழைவின் பெருங்கனவு’ என்ற தலைப்பில் இலக்கியப் பின்புலத்தில் நிகழும் அரசியல் பற்றி வாசு எழுதியிருக்கிறார். “கவனமற்ற சொல்லாடல்கள், சிதைந்த உரையாடல்கள் நம் மூளைக்குள் தேங்கித் ததும்பி கணங்கள் தோறும் எப்படி எதைச் செய்வது என யோசித்தபடியே வழிந்து கொண்டிருக்கின்றன. இயல் நிகழ்வுகளைத் தவிர்த்து அனிச்சையான செயல் என்பதே அற்றுப் போய் ஒவ்வொருவரும் ஒவ்வொரு உள்மன விகாரத்துடன் செயலாற்றிக் கொண்டிருக்கிறோம். இதுவே பலருக்கு உவகையான வாழ்க்கையாகவும் ஆகிவிட்டிருக்கிறது.” என்று எழுதுகிறார். இதில் நிறைய கசப்பு இருந்தாலும் உண்மை இருப்பதை மறுப்பதற்கில்லை.

மனுஷ்ய புத்திரனின் நேர்காணலின் தொடர்ச்சி இந்த இதழில் இருக்கிறது. வாசுவின் தளத்தில் இது பதிவேற்றம் செய்யப்பட்டும் இருக்கிறது. ஒரு இலக்கியவாதி ஆளுமையாக வளரும் போது தவிர்க்க முடியாத அரசியல் சூழலை இந்த நேர்காணல் உணர்த்துகிறது. இலக்கிய உலகின் அரசியலைப் பற்றிய பரிச்சயமும் ஆர்வமும் குறைவாக இருப்பதால் அதைப் பற்றிப் பேச அதிகமாக ஒன்றுமில்லை. ஆனால் மனுஷ்ய புத்திரன் நவீன தமிழ்க் கவிதை பற்றிச் சொன்னது சுவாரஸ்யமாக இருந்தது.

“நவீன தமிழ்க் கவிதையின் பாசாங்கான பூடகத்தையும் இறுக்கத்தையும் என் கவிதைகள் தளர்த்த முயற்சித்திருக்கின்றன. உரையாடலின் சாத்தியங்ளை அதிகமான கவிதைகளுக்குள் கொண்டு வருவதற்கு நான் மிகவும் பிரயாசைப்படுகிறேன். மேலும் பிரத்யேகமான அனுபவங்களை கவிதைக்குள் உருவாக்குவதில் எனக்கு நம்பிக்கையில்லை. அன்றாடம் நாம் எதிர்கொண்டு கடந்து செல்லும் அல்லது கடந்து செல்ல முடியாமல் தத்தளிக்கும் பொதுவான அனுபவங்களை நான் கவிதைக்குள் கொண்டு வருகிறேன்.” என்கிறார். உண்மை தான். இத்தகைய கவிதைகளே பெரும்பான்மை வாசகர்களைக் கவரவும் செய்கின்றன. ஆயினும் எனக்கு பூடகமாகச் சொல்வதிலும், சில பிரத்யேக அனுபவங்களைக் கவிதையாக்குவதிலும் ஆர்வமும் நம்பிக்கையும் இருக்கிறது என்றும் சொல்ல வேண்டும்.

எனக்குப் பிரியமான கவிஞர் ரெளத்ரன் இந்த இதழில் ‘ரெஜியின் பூனை’ என்ற சிறுகதை எழுதி இருக்கிறார். இது போன்ற கதைகளை ஏற்கெனவே படித்த உணர்வு எப்படியோ வந்தது. ஒரு வேளை நிறைய படைப்பாளிகள் அலுக்கும் அளவுக்கு பூனைகள் மீது கவனம் செலுத்துவதால் வந்த ஆயாசம் என்று கொள்ளலாம். ஆனால் கதையின் நடையும், பூடகத் தன்மையும் எனக்கு மிகவும் பிடித்தது. பூனைகளைப் பற்றிய அவதானிப்பும் சுவாரஸ்யம். – “ நாய்களைப் போல் பூனைகளை சில ரொட்டித் துண்டங்களால் வசியம் செய்து விட முடியாது. பூனைகள் தம் உலகத்திற்குள் வேறொருவரை எளிதில் அனுமதிப்பதில்லை” – “பூனைகளின் மொழி உரையாடலுக்கு ஏற்றதல்ல. அவை குறிப்புகளாலும் நிமித்தங்களாலும் பேசுகின்றன. பூனைகளின் மொழி கவிதையால் ஆனது’ என்றெல்லாம் சொல்கிறார்.

சத்யஜித்ரேயின் பெங்காலிக் கதையை ஆங்கிலம் வழி தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார் கவிதாயினி நதியலை. ‘சஷ்மலின் வினோத இரவு’ என்னும் கதை சுவாரஸ்யம். அழகாக மொழியாக்கம் செய்திருக்கும் நதியலையைப் பாராட்ட வேண்டும்.

மற்றொரு சிறுகதை சாந்தன் எழுதிய ‘கோழை’. கதையில் இறுதியில் வரும் ‘அடி வயிற்று விம்மல்’ நாம் அனைவரும் ஒரு தினம் அனுபவித்தது அல்லது அனுபவிக்கப் போவது என்பது நடைமுறை யதார்த்தம்.

கமலாதாஸ் எழுதிய சிறுகதையை ‘பிண ஆய்வாளன்’ என்னும் தலைப்பில் தி.சு.சதாசிவம் மொழியாக்கம் செய்திருக்கிறார். மொழியாக்கத்தில் எதிர்ப்படும் சிக்கல்கள் இந்தக் கதையிலும் இடர்ப்படுவதை உணர்ந்தேன். எதனாலோ இந்தக் கதை மனதைக் கவரவேயில்லை.

இந்த விதத்தில் நான் எஸ்.ஷங்கர நாராயணன் மொழியாக்கம் பற்றிச் சொல்ல வேண்டும். ஒரு மொழிபெயர்ப்புக் கதை படிக்கும் உணர்வே வருவதில்லை. அவ்வளவு நேர்த்தியாக இருக்கிறது. ஆனால் கதையின் தலைப்பு ‘முதல் வேலை’ என்று வருவதற்குப் பதில் ‘முதல் வேளை’ என்று வந்து விட்டதென்று நினைக்கிறேன்.

நம்ம அய்யனாரின் கட்டுரை ‘மத்தியக் கிழக்கின் வாழ்வும் திரையும் : துபாய் திரைப்பட விழா’ நான் ஏற்கெனவே அவர் தளத்தில் படித்து விட்டேன். அவசியம் படிக்க வேண்டிய இடுகை.

போலவே வா.மணிகண்டன் ‘கவிஞன் ஏன் காணாமல் போகிறான்’ என்னும் கட்டுரை எழுதியிருக்கிறார். கவிதையில் நாட்டமிருக்கும் அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை.

லாவண்யாவின் அகத்திணை கட்டுரையும் நல்ல வாசிப்பனுபவம்.

நூல் மதிப்புரை பகுதியில் கே.ஸ்டாலின் எழுதியிருக்கும் ‘பாழ் மண்டபமொன்றின் வரைபடம்’ என்னும் கவிதைத் தொகுப்பு பற்றிய விமர்சனம் ‘மொழி’ அவர்கள் கச்சிதமாக எழுதியிருக்கிறார்கள்.

வசந்தத்தின்
தளர்ந்த பிடியிலிருந்து
தன்னை விடுவித்துக் கொண்ட
பழுத்த இலையொன்று
எத்தனையாவது சுற்றில்
பூமியை வந்தடைகிறது
என்பதாய் உணரப்படுகிறது
காற்றின் இருப்பு

என்ற கவிதை கவர்ந்தது.

இதழ் முழுவதும் கவிதைகள். பெரும்பாலான கவிதைகள் பதிவுலகுக் கவிஞர்கள் எழுதியது. நல்லா இருக்கு.

அச்சு மற்றும் தாளின் தரம் நிச்சயம் மேம்பட வேண்டும். நிதி நிலைமை தெரியாமல் விமர்சிப்பது சுலபம். மேலும் இலக்கியத்திற்கு இவை அத்தியாவசியம் என்று சொல்ல முடியாது.

மொத்தத்தில் நல்ல வாசிப்பனுபவம். ‘இலக்கிய சேவை’ என்று வாசு தைரியமாகக் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம்.

16 comments:

Unknown said...

நல்ல விமர்சனம் அனுஜன்யா.

எறும்பு said...

//‘இலக்கிய சேவை’ என்று வாசு தைரியமாகக் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம். //

ஒரு நல்ல இலக்கிய புத்தகத்தை தேர்ந்தெடுத்து படித்ததற்கு நீங்களும் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம்.

நேசமித்ரன் said...

//எனக்கு பூடகமாகச் சொல்வதிலும், சில பிரத்யேக அனுபவங்களைக் கவிதையாக்குவதிலும் ஆர்வமும் நம்பிக்கையும் இருக்கிறது என்றும் சொல்ல வேண்டும்.//


வழி மொழிகிறேன் தலைவரே

நல்ல விமர்சனம்

Kumky said...

எனக்கு முதல் இதழை தவிர பிறகு வந்தபாடில்லை...

வாசிப்பனுபவத்திற்கு ஒரு நெல் முனையளவேனும் காகிதத்தின் தரம் குறுக்கிடுவதை மறுக்கவியலாது.

வாசு கொஞ்சம் மிகு தன்னம்பிக்கையாளர்...சமரசங்களை ஏற்காததனால் மாற்றம் சாத்தியமா எனதெரியவில்லை..பார்ப்போம்.

ஆயினும் எனக்கு பூடகமாகச் சொல்வதிலும், சில பிரத்யேக அனுபவங்களைக் கவிதையாக்குவதிலும் ஆர்வமும் நம்பிக்கையும் இருக்கிறது என்றும் சொல்ல வேண்டும்...

எங்களுக்கு...?

பூனைகளின் மொழி உரையாடலுக்கு ஏற்றதல்ல. அவை குறிப்புகளாலும் நிமித்தங்களாலும் பேசுகின்றன..

இந்த இடத்தில்...நிமித்தங்களாலும்.. என்ற வார்த்தைப்பிரயோகம்....அற்புதம்.

இதற்கும் மேல் புத்தகத்தை வாசிக்காமல் சமாளிக்க முடியவில்லை..

சமீபமாக யூத் என்ற உங்களுக்கான ப்ரத்யேக மொழியினை யாரும் பிரயோகிக்ககாணோம்...?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

எப்போதும் உங்கள் பத்திகளில் இருக்கும் வாசிப்புத்தன்மை இதில் மிஸ்ஸிங் :( எழுத வேண்டுமென்று எழுதியதைப் போல இருக்கிறது.

Kumky said...

உங்கள் கருத்துரை சேமிக்கப்பட்டது, வலைப்பதிவு உரிமையாளரின் ஒப்புதலுக்கு பின்னர் காண்பிக்கப்படும்.


இது வேறயா.....

Kumky said...

ஆமாம்..

ஒரு மெல்லிய புரிதலுடன் கூடிய அங்கதநடை இதில் மிஸ்ஸிங்..

அதனாலென்ன..இருந்துவிட்டுபோகட்டும் வுடுங்க பாஸ்....

Thamira said...

நானும் ஒவ்வொரு தபாவும் எயுதனும் எயுதனும்னு நெனக்குறேன். ஃபுல்லா பட்ச்சாதானே எயித முடியும்? இன்னா சொல்ற தல.?

மேவி... said...

"முதல் வேலை’ என்று வருவதற்குப் பதில் ‘முதல் வேளை’ என்று வந்து விட்டதென்று நினைக்கிறேன்."



அப்படியா ...


(நல்ல படிச்சிங்களா ???)

அகநாழிகை said...

அகநாழிகை பற்றிய விமர்சனத்திற்கு மிக்க நன்றி அனுஜன்யா.

0

நான் அனுஜன்யாவை அகநாழிகைக்கு விமர்சனம் எழுதச் சொல்லி நீங்கள் எழுதியிருப்பது போல வாசிக்கும் அனைவரின் புரிதலும் மிகச்சரியாக இருக்கிறது.

:)

மறுபடியும் நன்றி அனுஜன்யா.

- பொன்.வாசுதேவன்

அகநாழிகை said...

பகிர்தலுக்கு மிக்க நன்றி.

பனித்துளி சங்கர் said...

///////வசந்தத்தின்
தளர்ந்த பிடியிலிருந்து
தன்னை விடுவித்துக் கொண்ட
பழுத்த இலையொன்று
எத்தனையாவது சுற்றில்
பூமியை வந்தடைகிறது
என்பதாய் உணரப்படுகிறது
காற்றின் இருப்பு/////////


நானும் ரசித்தேன் மிகவும் அருமை .
உங்களின் பார்வையில் விமர்சனம் அருமை !

ச.முத்துவேல் said...

/‘மொழி’ அவர்கள் கச்சிதமாக எழுதியிருக்கிறார்கள். /

எனக்கு இவ்வளவு மரியாதை குடுத்து நெளியவைப்பீங்கன்னு முதல்லேயே தெரிஞ்சிருந்தா, இயற்பெயரையே அடியேன் அளித்திருப்பேன்.

அப்புறம் , அந்தப் புனைப்பெயர் எப்படி? நல்லாருக்கா?

கருத்துக்களுக்கு நன்றி.

selventhiran said...

அக்கப்போருக்கு இடம் கொடாத பத்திரிகை என்பது பிரதான ஆறுதல்!

பா.ராஜாராம் said...

நல்ல விமர்சம் அனு.

ரௌத்திரனின் சிறுகதை அவர் தளத்தில் வாசித்தேன்.ரொம்ப பிடிச்சிருந்தது.

// நிதி நிலைமை தெரியாமல் விமர்சிப்பது சுலபம். மேலும் இலக்கியத்திற்கு இவை அத்தியாவசியம் என்று சொல்ல முடியாது.//

உண்மை.

anujanya said...

@ செல்வராஜ் ஜெகதீசன்

நன்றி பாஸ்.

@ எறும்பு

அப்பிடீங்கற? ஓகே

@ நேசமித்ரன்

நன்றி நேசன்

@ கும்க்கி

//எங்களுக்கு...?// உங்களுக்கு எல்லாம் வேற வழியே இல்லை. அது தான் விதி :)

//சமீபமாக யூத் என்ற உங்களுக்கான ப்ரத்யேக மொழியினை யாரும் பிரயோகிக்ககாணோம்...?//
கேபிள் முதல் டி.வி.ஆர். வரை எல்லா பெரியவர்களும் (ab)use செய்வதால்... நான், கார்க்கி போன்ற இளைஞர்கள் பேசாமல் சும்மா இருப்பது என்று முடிவெடுத்து விட்டோம் :)

@ ஜ்யோவ்

//எழுத வேண்டுமென்று எழுதியதைப் போல இருக்கிறது.// யோவ், அப்ப எதுக்குய்யா போன்?

ஆனால், ஓரளவு உண்மைதான். இலக்கிய விமர்சனம் பண்ணும்போது ஹாஸ்யம் ஒத்து வராது பாஸ் :)

@ கும்க்கி

தேங்க்ஸ் கும்க்கி புரிதலுக்கு. மட்டுறுத்தல் ரொம்ப நாட்களாக இருக்கே.

@ ஆதி

ஆமா, நீ பத்தாவது ஃபெயிலு. நா ஏழாப்பு பாஸ்.

@ மேவீ

மேலே ஆதிக்கு எழுதியுள்ளதைப் படிக்கவும்

@ அகநாழிகை

அப்படி யாரும் குறிப்பால் உணர்த்துகிறார்களா? எனக்குத் தெரியவில்லை வாசு. எப்படி இருந்தாலும், உங்களுக்கு வாழ்த்துகள். உங்கள் அன்புக்கு நன்றியும்.

@ பனித்துளி சங்கர்

நன்றி சங்கர்.

@ முத்துவேல்

அடப்பாவி, நீ தானா 'மொழி'? நல்லாதேன் இருக்கு.

@ செல்வேந்திரன்

அக்கப்போர் இல்லாட்டா என்ன தமிழ் இலக்கியம்? :)))
நன்றி செல்வா.

@ ராஜாராம்

நன்றி ராஜா.

@ தமிழிஷில் வாக்களித்த அனைவருக்கும் நன்றி.

அனுஜன்யா