Wednesday, April 15, 2009

பிக் பாக்கெட்


பர்சைத் தொலைத்திருந்தார் சங்கரன். அவர் பொதுவாக காரில் போகும் நபர். இன்று வண்டி திடீரென்று சப்பையான தனது வலது முன்பக்கச் சக்கரத்தைக் காட்டி 'சாரி பா' என்றது. ஸ்டெப்னி மாற்ற நேரம் இல்லாததால், ஆட்டோவைத் தேடினார். ஐந்து நிமிடங்களாகப் பிடி கொடுக்காத ஆட்டோக்களால் வெறுத்துப் போய், மூன்று வருடங்களில் முதன் முறையாக மாநகராட்சிப் பேருந்தில், நெரிசலில் பயணித்தார்.

அப்படி ஒண்ணும் சிரமமாக இல்லை. எத்தனை பேர்! எத்தனை முகங்கள்! ஒவ்வொன்றிலும் கவலை, மகிழ்ச்சி, ஆர்வம், சோர்வு என பலவகை உணர்ச்சிகளுடன் முகங்கள்! டிக்கெட் வாங்கிக்கொண்டு ஒரு பொறுப்புள்ள, கண்ணியமான குடிமகனின் இலட்சணங்களுடன் ஓட்டுனர் இருந்த திசையில் முன்னேறிக் கொண்டிருந்தார்.

சைதாப்பேட்டை தாண்டி, நந்தனத்தை நெருங்கியது பஸ். என்னவோ சொல்லமுடியாத உணர்ச்சி திடீரென்று. அனிச்சையாகப் பான்ட் பாக்கெட்டைத் தடவிப் பார்த்தார். ஆ, பர்ஸ் காணோம். சுற்று முற்றும் பார்த்ததில், அருகில் இருந்தவன் கையில் என்னவோ இருந்தது. நழுவி அவன் பின்னால் சென்றதைப் பார்த்து விட்டார். உடனே, சப்தமாக 'பிக் பாக்கெட் பிக் பாக்கெட்' என்று கூவி, ஒரு அதிர்ச்சி உண்டாக்கினார்.

பஸ் நிறுத்தப்பட்டது. அவர் காட்டியதன் பேரில் அந்த பிக் பாக்கெட் பிடிக்கப் பட்டான். போலிஸ் அழைக்கப்பட வேண்டும் என்று பொதுக்கருத்து நிலவியது. ஆனாலும் எல்லோருக்கும் ஆபிஸ், ஆசுபத்திரி என்று சொந்த அவசரங்கள்.

உடனே யாரோ இரு இளைஞர்கள் துவங்கி வைக்க, அந்தத் திருடனுக்கு சரமாரியாக தர்ம அடி விழுந்தது. அவன் வாயில் இரத்தம் கசிந்தது. அவனிடம் துழாவிப் பார்த்தார்கள். பர்சின் சுவடே இல்லை. வெறும் இரண்டு ருபாய் நாணயம் சட்டைப்பையில் இருந்தது.

"இவனுங்கள நம்பக்கூடாது சார். ஒரு ரெண்டு, மூணு பேரா வருவானுங்க. சும்மா பாஸ்டா பாஸ் பண்ணுவாங்க."

"ஆமாடா, ஒத்தன் எடுப்பான், உடனே இன்னொருத்தன் கிட்ட பாஸ் பண்ணி, அவன் மூணாவது இப்பிடி போயிடும்"

"இப்பிடித்தான் ஒரு தடவ, பஸ்லேந்து ஜன்னல் வழியா தூக்கிப்போட்டான். அத கரீட்டா இவன் சகா வந்து காட்ச் புடிச்சிகினு போயிடாம்பா"

கண்டக்டர் சங்கரனிடம் "சார், எல்லாருக்கும் லேட் ஆகுது. வண்டிய போலிஸ் ஸ்டேசனுக்கு விடுவோம். அப்புறம் நீங்க பாத்துக்கோங்க" என்றார்.

அதற்குள் பிக் பாக்கெட் ஆசாமியின் சட்டை பெரும்பாலும் கிழிந்து போயிருந்தது. ஒரு மாதிரி கைகால்களை மடக்கி உட்கார்ந்திருந்தான். தலைமேல் அடி விழாதபடி கைகளால் மூடிக் கொண்டான்.

சங்கரன் முன்பு அம்பத்தூரில் குடியிருந்தபோது பக்கத்து வீடு போலிஸ் ஸ்டேஷன். ஒவ்வொரு இரவும் குற்றவாளிகளின் அலறல் காதை அறையும். பகல் நேரங்களில், காவலர்கள் உள்ளே நுழைகையில், சிறு திருடர்களை ஏதோ நொறுக்குத் தீனி உண்பது போல் ஒரு தள்ளு தள்ளி பூட்ஸ் காலால் மிதிப்பதை நிறைய முறை பார்த்திருக்கிறார். தேவைக்கு அதிகமாக போலிஸ்காரர்கள் அடிப்பதாகவே இவருக்குத் தோன்றும். ஒரு மாதிரி சிறு குற்றவாளிகளின் மேல் பொதுப் பரிதாபம் இவருக்கு வழிந்து ஓடும்.

இப்போதும் பர்ஸ் பறிபோன கோபம், வருத்தம் எல்லாம் காணாமல் போய், உடலைக் குறுக்கி, சாலை ஓரமாய், இரத்தம் வழிய உட்கார்ந்து இருந்தவனிடம் பரிதாபம் மேலோங்கி நின்றது. ஒரு முடிவு எடுத்தவராக, செல் போனைக் காதில் வைத்துக்கொண்டார். பிறகு குரலை உயர்த்தி, 'சார், சாரி, பர்சு வீட்டுல வெச்சுட்டேன். இப்பதான் போன் வந்தது' என்று பொதுவாகச் சொன்னார். அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு இலேசான திட்டு, நிறைய அறிவுரை என்று பொதுஜனம் இவர் மேல் கக்கிய விஷயங்கள் அவ்வளவு முக்கியமில்லை.

எல்லோரும் போன பின்னும், அவன் அங்கேயே தலை குனிந்து இருந்தான்.

"நீ தா எடுத்தன்னு தெரியும். உனக்கு விழுற அடி பாக்க முடியல; அதான். பர்ஸ் எங்கே?'

அவன் ஒண்ணும் சொல்லவில்லை. கொஞ்ச நேரம் சும்மா இருந்த அவனால் இலேசாக எரிச்சல் அடைந்த அவர் "எனக்குத் தேவையான சில விஷயங்கள் பர்சில் இருக்கு. பணத்த விட்டுட்டு அதையாச்சும் கொடுத்திடு" என்றார்.

அவன் ஒண்ணும் பேசவில்லை. பிறகு திடீரென்று எழுந்து, இவரைப் பார்த்தான். வேகமாக நடக்க ஆரம்பித்தான். முட்டாள்தனமாக இருந்தாலும் சங்கரனும் தொடர்ந்தார்.

சிறிது நேரம் கழித்து அவன் "சார், சாயங்காலம் தரேன். உங்க அட்ரஸ் தாங்க" என்றான்.

"பர்சில் வீட்டு அட்ரஸ், போட்டோ எல்லாம் இருக்கு. இருந்தாலும், இதுதான் என் செல் நம்பர். அட்ரஸ் தெரியலேனா கூப்பிடு"

அவருக்கு நம்பிக்கை இல்லை. ஆனாலும் வேறு எதுவும் செய்ய முடியவில்லை. நல்ல வேளையாக செல் போன் இருந்தது. ஒரு ஆட்டோ (இப்போ கிடைக்குது!) பிடித்து நண்பன் ஆபிசுக்குப் போய் சேர்ந்தார்.

சாயங்காலம் ஏழு மணிக்கு வாசலில் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தார். நிழலாட, நிமிர்ந்து பார்த்தார். அவனேதான். தயங்கித் தயங்கி வந்தான். அவரிடம் பர்சை நீட்டினான். வாங்கிப் பார்த்தார். பணம் அப்படியே இருந்தது. மற்ற குப்பைகளும்.

"என்ன பணம் எடுத்துக்கலையா?"

"வேணாம் சார்"

"என் இப்பிடி ஒரு தொழில் பண்ணுற?"

' "

"உன்னத்தான் கேக்குறேன்"

"அது அப்புடித்தான் சார்; மாத்த முடியாது இனிமே"

"அதா ஏன்னு கேக்குறேன்"

"படிப்பும் இல்ல. வேற வேலையும் கெடைக்காது"

"உனக்கு என்ன வேல தெரியும்"

"சார், டிரைவிங் தெரியும் சார்"

"சம்பளம் நாலாயிரமோ, அஞ்சாயிரமோ கிடைக்கும். ஆமா, இதுல உனக்கு எவ்வளவு தேறும் மாசத்துக்கு?"

"மாமூல் போக, ஒரு பதினஞ்சு-இருபது வரும் சார். ஆனா நெறைய அடி ஒத திங்கணும் சார்"

"ம்ம்"

"அதோட மனுஷாலு நம்மள மதிக்க மாட்டாங்க - ஆனா பலகிடிச்சி"

கொஞ்ச நேர மௌனம். பிறகு அவனே தயங்கி அவரிடம் கேட்டன்.

"சார், நீங்க ஒரு டிரைவர் வேல போட்டுத் தரீங்களா?"

அவருக்கு அவன் மேல் உடனே ஒரு பச்சாதாபம் எழுந்தது. கிளர்ச்சியாக உணர்ந்தார். சமுதாயத்தில் ஒருவனையாவது திருத்தப்போகும் சாத்தியக்கூறு அவருக்கு கொஞ்சம் பரபரப்பைத் தந்தது. ஆனாலும், பெரிய மனிதர்களுக்கே உரிய, பல நூற்றாண்டுகளாக உட்புதைந்த, ஜாக்கிரதை உணர்வு "ம்ம், ரெண்டு நாள் கழிச்சு வா, பார்க்கலாம்" என்று சொல்ல வைத்தது.

இரண்டு நாட்களில் யோசிக்க யோசிக்க, உயர் இலட்சியங்கள் எனும் மெழுகுப் பொம்மையை நடைமுறை வாழ்க்கை என்னும் சுடர் உருக்கிக் கொண்டிருந்தது.

மூன்றாம் நாள் காலையில் வந்த அவனிடம் 'இப்போதைக்கு இல்லப்பா. பின்னாடி இருந்தா சொல்லுறேன். இப்ப இருக்குற ரெசஷன் டயத்துல கார் வேணாம்னு பாக்குறேன்' என்று முடித்துக் கொண்டார். கொஞ்ச நேரம் நிலத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். நிமிர்ந்த போது நிச்சயமாக ஈரமான கண்களைப் பார்த்தது உண்மை. சுதாரித்துக் கொண்டான். முள்ளும் மலரும் ரஜினி பார்த்திருப்பீர்களே. அதனை நினைவு படுத்திக் கொள்ளுங்கள். அதே போல இலேசாக தலையைச் சாய்த்து 'பரவாயில்ல சார்' என்றான். நிச்சயமாக அவன் கண்களில் இப்போது இவரைப் பார்த்து பரிதாபம் இருந்தது. மெல்ல நடந்து மறைந்தான்.

'பாவந்தான்; ஆனா எப்பவும் மடில நெருப்பக் கட்டிகிட்ட மாதிரியில்ல இருக்கணும்"

"ஏதாவது காணாம போச்சுன்னா, பாவம் அவனத்தான சந்தேகப் படுவோம்?"

"இப்போ, கஷ்டமோ நஷ்டமோ, பதினஞ்சு-இருவதுன்னு சம்பாரிக்குறான்; அஞ்சாயிரம் சம்பளம் எப்படிப் பத்தும் அவனுக்கு?"

இப்படியெல்லாம் சால்ஜாப்புகள் அவரைச் சுற்றி வந்தன ஒரு வாரத்திற்கு.

பிறிதொரு நாள் சிக்னலில் காத்திருக்கையில், ஓடிக் கொண்டிருந்த பஸ்சில் இருந்து இலாவகமாக, பெருமிதமாக இறங்கியவனைப் பார்த்தார். குற்ற உணர்ச்சி, எத்தனை சால்ஜாப்பு செய்தும் போகவில்லை. மனசாட்சி பின்குறிப்பாக 'நீ அவன் பெயரைக் கூட கேட்கவில்லையே' என்றும் உப கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தது.(நவீன விருட்சம் மின்னிதழில் பிரசுரம் ஆனது)

39 comments:

Cable சங்கர் said...

அருமை.. அனுஜன்யா..

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

கதை நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் மொழிநடை 1980களை ஞாபகப்படுத்துகிறது :(

ராமலக்ஷ்மி said...

அருமையான் கதை அனுஜன்யா. அடி படுவதை சகிக்க முடியாமல் பழியை ஏற்கத் துணிந்த மனது அவன் வாழ்வுக்கு வழி சொல்லவும் விழைந்த மனது தானே அதை செயல் படுத்த முடியாத கோழையாகி விட்டது. மனித இயல்புதான் இது.

[ஆனால் நாங்கள் இது போன்ற ஒருவரை 6 வருடங்கள் ஓட்டுநராக வைத்திருந்தோம். திருட்டு கிடையாது. ஆனால் அடிதடியில் இறங்கி அடிக்கடி ’உள்ளே’ போய் வந்தவர் எனப் பிற்பாடு தெரியவந்தது. சின்னவயது. திருமணமாகி இரண்டு குழந்தைகள் வேறு. மறுபடி பாதை மாறி விடக் கூடாதென வைத்திருந்தோம், பலரின் எச்சரிக்கையையும் மீறி. எங்களிடம் விசுவாசமாய் இருந்தாலும் நண்பர் சகவாசத்தால் அடிதடியில் இறங்கி ’உள்’ சென்று திரும்புவது தொடர்கதையாகவே இருந்ததால் ஒரு கட்டத்தில் விலக்க வேண்டியதாயிற்று.]

Shan Nalliah / GANDHIYIST said...

good...write more short stories!

VIKNESHWARAN ADAKKALAM said...

நல்ல கதை அனுஜன்யா... அசத்துங்க...

கதைக்கு வாழ்த்துகள்...

//
(நவீன விருட்சம் மின்னிதழில் பிரசுரம் ஆனது) //

இதற்ற்கு மேலும் வாழ்த்துகள்...

Unknown said...

கதை நல்லா இருக்கு.ஆனா கதை
// "ம்ம், ரெண்டு நாள் கழிச்சு வா, பார்க்கலாம்" என்று சொல்ல வைத்தது.// என்ற இடத்தில் முடிந்து விட்டது.முடித்திருந்தால் திரில்லர் கம்
நீதி கதையா crispபா இருந்திருக்கும்.

//ரெண்டு நாள் கழிச்சு வா, பார்க்கலாம்"// இந்த வரியிலேயே
பின் வரும் பாராக்கள் அடங்கிவிடுகிறது.

தராசு said...

//இரண்டு நாட்களில் யோசிக்க யோசிக்க, உயர் இலட்சியங்கள் எனும் மெழுகுப் பொம்மையை நடைமுறை வாழ்க்கை என்னும் சுடர் உருக்கிக் கொண்டிருந்தது.//

ரசித்தேன்

Unknown said...

நெம்ப அருமையான அனுபவுமுங்கோ......!!! கொஞ்சம் டச்ச்சபுலாவும் இருஞ்சுச்சு.....!!

அருமை......!! வாழ்த்துக்கள்........!!!

வால்பையன் said...

பிரபஞ்சனின் சித்தன் சிறுகதை தொகுப்பில் நான் படித்த ஒரு சிறுகதை ஞாபகம் வந்தது!

ஆனால் இதற்கும் அதற்கும் சம்பந்தமில்லை!

டிரைவராக சொந்தகாரனையே வைத்திருப்பார், அவன் திருடி கொண்டி ஓடி விடுவான். மீண்டும் வரும் போது சேர்க்கலாமா வேண்டாமா என்று மனப்போராட்டம்!

அந்த போராட்டம் இங்கேயும் பார்த்தேன்!

வால்பையன் said...

//மொழிநடை 1980களை ஞாபகப்படுத்துகிறது//

பீரியட் ஃப்ளிம் மாதிரி
பீரியட் கதையா இருக்கும்!

இன்னொறு முக்கிய குறிப்பு 1980 திலும் உலகம் ஒரு பொருளாதார சரிவை கண்டது!

முரளிகண்ணன் said...

மனச அடிச்சுட்டீங்க

சின்னப் பையன் said...

அருமை.

நிஜமா நல்லவன் said...

கதை நல்லா இருக்குங்க.

நிஜமா நல்லவன் said...

வாழ்த்துகள்!

Thamira said...

கதை நல்லாருந்தது பாஸ்.!

(முதல்ல கதைன்ன உடனேயே பயந்துபோய் எஸ்கேப்பாயிடலாமான்னு யோசிச்சேன் தல.. ஹிஹி..)

Prabhu said...

உள்ளுணர்வுகளையும் அவனுடைய மனோநிலையையும் நல்லா படம் புடிச்சிருக்கிங்க.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ரவிஷங்கர் சொல்லியிருப்பதுடன் எனக்கு உடன்பாடில்லை. கதையை அவர் சொல்லியது போல் முடித்திருந்தால் ஒரு சாதாரண பத்திரிகை கதையாகியிருக்கும்.

அவன் பெயர்கூடக் கேட்கவில்லை என்பதில் ஒருவித காவிய சோகம் இருக்கிறது! இந்தக் கதைக்கு இதுதான் சரியான முடிவாக இருக்குமென நினைக்கிறேன்.

narsim said...

மெழுகு மேட்டர் சூப்பர் அனுஜன்யா.. நல்ல நடையில் நல்ல கதை.

ராம்.CM said...

அழகான கதை .நல்லாயிருந்தது.

Kumky said...

உண்மையில் வாய்ப்பிருந்தும் பல நேரங்களில் பயமும் சந்தேகமுமே நம்மை எந்த நல்ல விஷயங்களையும் செய்ய விடாமல் தடுத்து விடுகின்றது.
போகிற போக்கில் பிட்பாக்கெட்டர்கள் வளர்ந்து அடி கொடுத்து விட்டு போகின்ற நிலை வந்தாலும் ஆச்சரியமில்லை.

மணிகண்டன் said...

எனக்கு பிடிச்சி இருக்கு அனுஜன்யா.

யாத்ரா said...

நவீன விருட்சத்திலேயே வாசித்தேன், கதை அருமை.

ரௌத்ரன் said...

நன்றாக இருக்கிறது சாரே...எனினும் கூறல் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்...இவ்வளவு போதுமா என்ன?

thamizhparavai said...

கதை நல்லாப் புரிஞ்சது. நல்லா இருந்தது. எதிர்பாராத திருப்பங்கள்தான் கதையில் ஆனாலும் அவை இயல்பில் இருப்பவைதான்.
இயல்பில் பரிதாபப்படும் ஆனால் சமூகத்தின் பேச்சுக்குப் பயந்து செயலாற்ற முடியாத தன்மையினை அழகாகச் சொல்லிவிட்டீர்கள்.
ரவிஷங்கர் சார், ஜ்யோவ்ராம் சுந்தர் இருவரின் கருத்தையுமே ஆமோதிக்கிறேன்..

காமராஜ் said...

யாரையும் காவியப்படுத்தாத எதார்த்தம்.
இது கண்ணாடி இலக்கியம், அருமை.

உயிரோடை said...

நவீன விருச்சத்திலேயே படிச்சேன்.
வாழ்த்துகள் அண்ணா.

anujanya said...

@ tamil cinema

நன்றி. வருகிறேன்

@ கேபிள் சங்கர்

நன்றி சங்கர்.

@ ஜ்யோவ்ராம்

நன்றி குருஜி. ஆமாம், எனக்கும் தோன்றியது. ஆனா .... எப்படி ....

@ ராமலக்ஷ்மி

விரிவான பகிர்தலுக்கு நன்றி சகோ. நீங்க உங்க அனுபவங்களை ஒரு கதையாக விகடனுக்கு அனுப்புங்களேன்.

@ Shan Nalliah

நன்றி உங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும். (ரொம்ப நாட்கள் கழித்து வரீங்க :) )

@ விக்னேஷ்வரன்

நன்றி விக்கி.

@ ரவிசங்கர்

நன்றி பாராட்டுக்கு. நீங்க சொல்ற மாதிரியும் செய்யலாம். ஆனா, கீழே சுந்தர் மீண்டும் சொல்கிறார் பாருங்கள் - அதுதான் என் மனதில் இருந்தது.

@ தராசு

நன்றி தல. உங்களுக்கும், நர்சிம்முக்கும் பிடிக்கும் வரிகள் எனக்கும் எழுதும் போது பிடித்தது. ஆனா, கொஞ்சம் நடை எண்பதுகளின் சாயல் என்பதும் உண்மைதான் :)

@ லவ்டேல் மேடி

உங்க பெயர் மற்றும் பின்னூட்ட ஸ்டைல் - எல்லாம் வித்தியாசம் மற்றும் அமர்க்களம். நன்றி தல.

@ வால்பையன்

நன்றி குரு. பிரபஞ்சனின் மிகப்பெரும் விசிறி நான். ஆனால் இந்தக் கதைத் தொகுப்பு படிக்கவில்லை இன்னும். நன்றி.

பீரியட் கதை - வால்பையன் என்பது சரிதான் :)

@ முரளிகண்ணன்

வாங்க முரளி. நன்றி. ஆமா, எங்க ஆளையே காணோம்?

@ ச்சின்னப் பையன்

வாங்க தல. முதல் வருகை. குஷியில் அங்க போனா, கடைய (தற்காலிகமா) மூடிட்டீங்க!
நன்றி.

@ நிஜமா நல்லவன்

மாப்ள, நீ நிஜமாவே நல்லவன்தான். இரெண்டு பின்னூட்டம் போடற பாரு. தேங்க்ஸ் பா.

@ ஆதிமூலகிருஷ்ணன்

//(முதல்ல கதைன்ன உடனேயே பயந்துபோய் எஸ்கேப்பாயிடலாமான்னு யோசிச்சேன் தல.. ஹிஹி..)//

கயமையில் தான் எத்தனை வகை! நல்லா இரு ஆதி.

@ pappu

நன்றி பப்பு.

@ ஜ்யோவ்ராம்

அதுதான் என் மனசிலும் இருந்தது சுந்தர். நன்றி.

@ நரசிம்

நன்றி தல. உங்க நடை எல்லாம் பாக்கும்போது ...வேணாம்... அளுதுடுவேன்

@ ராம்

வாங்க தல. வழக்கம் போல உங்க பின்னூட்டம். ரொம்ப நன்றி ராம்.

@ கும்க்கி

நீங்க வந்தாலே பரிசலும், செல்வாவும் பயப்படுவதாகக் கேள்வி :). நன்றி கும்க்கி.

@ மணிகண்டன்

அப்போ கதை நல்லா இருக்கா இல்லியா? ச்சும்மா. தேங்க்ஸ் மணி.

@ யாத்ரா

நன்றி யாத்ரா.

@ ரௌத்ரன்

நன்றி கவிஞர். நீங்க சொல்றதேதான் ஜ்யோவும் சொல்கிறார். சரிதான்.

@ தமிழ்ப்பறவை

சரியான அலசல் சார். நன்றி உங்க கருத்துக்கு.

@ காமராஜ்

நன்றி நண்பா. உங்கள மாதிரி எழுத்தாளர்கள் சொன்னா அதன் மதிப்பே தனி தான் .

@ மின்னல்

நன்றி மின்னல். சாரி, அங்க இன்னும் வரல :(


அனுஜன்யா

த.அகிலன் said...

நல்ல கதை அனுஜன்யா....

Kumky said...

@ கும்க்கி

நீங்க வந்தாலே பரிசலும், செல்வாவும் பயப்படுவதாகக் கேள்வி :). நன்றி கும்க்கி.

:-))
தவறு என்மீது ஏதுமில்லை.

anujanya said...

@ அகிலன்

நன்றி அகிலன். உங்கள் முதல் வருகை?

@ கும்க்கி

நக்கீரன் மீது தவறு/குற்றம் இல்லை; என்றாலும் பயம் இருக்குமே :)

அனுஜன்யா

கிருத்திகா ஸ்ரீதர் said...

"மனசாட்சி பின்குறிப்பாக 'நீ அவன் பெயரைக் கூட கேட்கவில்லையே' "
இதுதான் நச்.... யதார்த்தம்...

கிருத்திகா ஸ்ரீதர் said...

அப்புறம் ஒரு சின்ன வேண்டுகோள்.. இந்த பச்சை எழுத்து படிக்க கஷ்டமா இருக்கு... அடர் நிறம் ஏதாவது உபயோகியுங்களேன்...

Raju said...

கதை எழுத எனக்கும் கத்துக் கொடுங்கப்பா..!

Joe said...

//
மனசாட்சி பின்குறிப்பாக 'நீ அவன் பெயரைக் கூட கேட்கவில்லையே' என்றும் உப கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தது.
//

அருமை...

anujanya said...

@ கிருத்திகா

நன்றி கிருத்திகா. 'பச்சை நிறம்' - இனி திருத்திக் கொள்கிறேன்.

@ டக்ளஸ்

ஹாய் டக்ளஸ்! முதல் வருகை இல்ல? நானே கத்துக் குட்டி. பின்னூட்டங்களில் எப்பிடித் தாக்குறாங்க பாரு. நன்றி.

@ ஜோ

வாங்க ஜோ. உங்களுக்கும் முதல் வருகினு நினைக்கிறேன். நன்றி.

அனுஜன்யா

Unknown said...

ரெசெஷண் என்ற வார்த்தை வரும் வறை நான் ஏற்கனவெ படித்த கதை என்றே நினைத்தெந்--வாஹே குரு

Unknown said...

ரெசெஷன் என்ற வார்த்தை வரும் வறை நான் ஏற்கனவெ படித்த கதை என்றே நினைத்தேன்--வாஹே குரு

balavijayan said...

கதை நல்லா தான் இருக்கு, என்ன அந்த எழுத்து நடை அதுதான் ஏதோ ஒரு ஈர்ப்பு இல்லாமலே இருந்துச்சு... இருந்தாலும் பின்னால் வந்த இரண்டு பத்திகளும் இடையில் வந்த அந்த திருடனின் சலிப்பும் கொஞ்சம் நல்லா இருந்துச்சு..

anujanya said...

@ வாஹே குரு

உங்கள் வருகைக்கு நன்றி

@ பாலவிஜயன்

உங்கள் முதல் வருகை? சமீபத்தில் பதிவெழுத ஆரம்பித்து இருக்கும் உங்களுக்கு நல்வரவு. கவிதைகள் எழுதுபவரா? வாழ்த்துகள். நன்றி பாலா.

அனுஜன்யா