Saturday, September 12, 2009

ஜ்யோவ்ராம் சுந்தரின் சீற்றம்: 'அனுஜன்யாவின் கதை ஒதுக்கப்படவேண்டியது'
உரையாடல் போட்டி நடந்தது எல்லோருக்கும் நினைவிருக்கும். அதற்குப் பிறகு இப்போது பதிவர்கள் 'சிறுகதைக் பட்டறை' யில் பட்டை தீட்டப் படுகிறார்கள். நான் உரையாடல் போட்டிக்கு அனுப்பிய கதை (அரி அ.ரி அ...ரி) உங்களில் சில பேருக்கு நினைவு இருக்கலாம். படித்த பலர் பாராட்டியதும் உண்மை. ஏற்கெனவே பரிசு கிடைக்காத ஏமாற்றத்தில் இருக்கும் எனக்கு நேற்று, நான் மிக மதிக்கும் ஜ்யோவ்ராம் சுந்தர், இந்தக் கதை பற்றிய காட்டமான விமர்சனத்தை மின்னஞ்சல் மூலம் அனுப்பினார். எங்கள் இருவருக்குமே இந்த விமர்சனம் பொது வெளியில் வைக்கப்படவேண்டுமேன்பதே அவா. நட்பு வேறு; அது தாண்டிய உள்ளார்ந்த விமர்சனம் வேறு என்று எல்லோரும் கொள்கையளவில் ஒப்புக்கொண்டாலும், நம் பதிவுலகில் நடைமுறையில் எப்போதாவது தான் சாத்தியமாகிறது.

கதை படித்தவர்கள் நேராக இதன் கீழ் இருக்கும் விமர்சனத்திற்குச் செல்லலாம். படிக்காதவர்கள், மேலே கொடுத்த சுட்டியின் ஊடே கதைக்குச் சென்று, கோபமோ, மகழ்ச்சியோ எய்தி, விமர்சனத்திற்கு வரலாம்.

ஆரோக்கியமான கருத்துக்கள் எப்போதும் போலவே நல்வரவு. தனிநபர் தாக்குதல்கள் தவிர்த்து விடலாம். முதலில் சுந்தரை அவர் வலைப்பூவில் போடுமாறு கேட்டுக்கொண்டேன் (வேற என்ன, இன்னும் நிறைய பேர் படிப்பார்களே). அவர், 'ஜ்யோவுக்கும், அனுஜன்யாவுக்கும் பலத்த (கொடுக்கல்-வாங்கல்) சண்டை' என்று தவறாகப் புரிந்துக் கொள்ளப்படும் சாத்தியங்கள் இருப்பதால், உங்க வலைப்பூவில் பதிவேற்றம் செய்து விடுவது நலம் என்றார். பலி கடாவைக் குளிப்பாட்டி, சாந்து, சந்தனப் பொட்டுகள் வைத்து, மாலை போட்டதோடு விடாமல், அதனிடமே "ம், கழுத்த வெட்டிக்கோ' என்கிற மாதிரி இருக்கு. ஏதோ மக்கா, பார்த்து செய்யுங்க. ஏன்னா, நான் இன்னமும் 'ரொம்ப நல்லவன்ன்ன்னு' ஊரே நம்புது :)

இனி சுந்தர்:

அனுஜன்யாவின் சிறுகதை (http://anujanya.blogspot.com/2009/06/blog-post_12.html) ஹரி, அ.ரி அ....ரி கதையை வாசித்ததும் முதலில் அதிர்ச்சியாகவே இருந்தது.

என்ன சிக்கல் கதையில்? முதலில் கதையைத் தொகுத்துக் கொள்வோம்.

கணவன் மனைவி விமானத்தில் சர்வ ஜாக்கிரதையாக சைவ உணவு கேட்டு வாங்கிச் சாப்பிடுபவர்கள். விமானம் இமயமலையில் விபத்துக்குள்ளாகிறது. இவர்களும் இன்னும் இருவரும் உயிர் பிழைக்கிறார்கள். அடுத்த நாள் ஓடி வரும் பனிப்பாறை இவர்கள் நால்வரையும் தாக்குகிறது. மற்ற இருவர் என்னவானார்கள் எனத் தெரியாத நிலையில் ஹரியால் உமாவைக் கண்டுபிடிக்க முடிகிறது. உமா இறந்திருக்கிறாள். இறந்த அவள் உதடுகளில் முத்தம் கொடுக்கிறான். பிறகு, அவளைப் புதைக்கிறான். சில மாதங்கள் கழித்து தொலைக்காட்சி சேனலில் விலாவரியாகத் தான் தப்பித்த கதையைச் சொல்கிறான். இவனது வலது கையில் இரு விரல்கள் இல்லாதிருப்பது குறித்து பிரஸ்தாபிக்கப்படுகிறது. இரண்டு வாரம் கழித்து ஒரு நாள் நடப்பதாகக் கதையில் வரும் வரிகள் :

இன்று என்ன?""முதலில் ஊசி போட்டுக்கொள் - பிறகு வலியில் துடித்து விடுவாய்"சாவித்துவாரம் வழியாகப் பார்த்திருந்தால் இடது பக்கம் பச்சை ஸ்வெட்டர் போட்டிருந்த உமா வலப்பக்கம் ஒன்றுமில்லாமல் இருந்த ஹரியின் நடுவிரலை ....மேசையில் கிடந்த தேவதச்சனின் விரிந்த ஒரு பக்கத்தை புகைப்படத்தில் சிரித்த உமா படித்துக்கொண்டிருந்தாள்

எனச் சென்று தேவதச்சனின் கவிதையொன்றோடு கதை முடிகிறது. உரையாடல் சிறுகதைப் போட்டிக்கான கதை என்ற குறிப்பும் இருக்கிறது.

தான் புத்திசாலி என்பதை எழுத்தாளன் காட்டிக் கொண்டேயிருக்கும் கதைகள் எனக்கு உவப்பாயிருப்பதில்லை. கதையின் முதலில் வரும் சைவ உணவுப் பழக்கம் வலிந்து திணிக்கப்பட்டிருக்கிறது. முட்டைகூடச் சாப்பிடாதவன் பிறகு உடலையே தின்கிறான் என்பதற்காக உருவாக்கிய காண்டிராஸ்டாம்!

கதையின் தலைப்பாக ஹரி அரி அரி என வைத்திருப்பதன்மூலம் அவன் சிவனாகிவிடுவதாகக் கதையை வாசிக்கமுடியும். அரியை அகோரியாகவும் பார்க்கலாம் (நான் கடவுள்?). இந்தக் கதையில் தேவையில்லாமல் உயிர் தப்பும் இரண்டு வெளிநாட்டவர்கள் (பெயர்கள் இங்கு முக்கியமாகிறது. நம்மவர்களுக்குக் கடவுளர்களான உமா ஹரி எனப் பெயர் இருக்க அவர்களுக்கு டானி, ஜிங்!) பிறகு தேவையில்லாமலேயே காணாமல் போகிறார்கள் (மரணம்?). இந்த இடத்தில் கதையின் வருபவன் சிவனா அல்லது கதை எழுதுபவரே சிவனா எனச் சந்தேகம் வருகிறது. கடவுளாக மாறிவிட்டவனின் கையில் அதிகாரங்கள் குவிந்து கிடப்பதை நாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். அதில் யார் உயிருடன் இருப்பது, யார் மரணமடைய வேண்டுமென்பது முக்கியமானது இல்லையா.

சிவன் தன் இடப்பக்கத்தை உமாவுக்குக் (பார்வதி) கொடுத்திருப்பதாகப் புராணக் கதைகள் இருக்கின்றன. சிவனோடு தொடர்புடைய இடம் கைலாயம். இக்கதையை சிவனோடு தொடர்புடைய கைலாயத்தில் உமையைப் புசித்து உயிர் பிழைத்த ஹரி பிறகு அரியாகிறான் என்றும் வாசிக்க இயலும்.

முதலில், இறந்தவளின் உடலோடு காதலாக முத்தம் கொடுத்தவன் (அதை உடலுறவு கொண்டதாகவும் வாசிக்கலாம்), பிறகு பசிக்காக மட்டுமே அவளைப் புசித்திருக்க முடியுமே தவிர பிணங்களைத் தொடர்ந்து உண்டு வாழும் அகோரியாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு. தனிப்பட்ட முறையில் உணவுக்காக இறந்த உடலின் பிரேதத்தைப் புசிப்பதைக் குறையாகச் சொல்லவில்லை. ஆனால் அதை புராணீகக் கதைகளோடும் இந்து மதக் குறியீடாக மாற்றுவதைத்தான் நான் ஆட்சேபிக்கிறேன்.

உமாவை அவன் உண்டதால் பிழைத்திருக்கிறான். பிறகு அர்த்தநாரியாகி அவளுக்குத் தன் இடப்பாகத்தைத் தருகிறான். ஆனாலும் பாருங்கள் அவனது வலது கை விரல்களை அவள் சாப்பிடுவிடுகிறாள் (ஆறு மாதங்களில் இரண்டே இரண்டு விரல்கள்தான்!). ரொம்ப slow eater போலிருக்கிறது!

இந்தக் கதையின் முக்கியக் குறியீடாகச் சிலவற்றைக் கொள்ளலாம் என நினைக்கிறேன். அவை : விபத்து, அகோரி, சிவன், அர்த்தநாரி, இடப்பாகம், உமையள், மெதுவான மரணம்.

இது உரையாடல் போட்டிக்கான கதை. சிவனுக்கும் பார்வதிக்குமான போட்டியில் என்ன நடந்தது என்பது புராணக் கதைகளின் மூலமாக நமக்கு ஏற்கனவே விளக்கப்பட்டிருக்கிறது. பார்வதி எரிந்து சாம்பலாக்கப்பட சிவன் வென்றாக வேண்டும்!

பெண்களுக்கு இடமளிக்காதே என்ற ஒரு சொலவடை உண்டு. அப்படிக் கொடுத்தால், அவர்கள் உன்னையே காலி செய்துவிடுவார்கள் கபர்தார்! என்று கட்டுப்பெட்டித்தனமான ஆண்டாண்டு காலமாக கூறப்பட்டுவரும் குப்பையையே இவர் நவீன எழுத்து என்ற பெயரில் முன்வைத்திருக்கிறார். அந்த வகையிலேயே இந்தக் கதை ஆபத்தானதாக மாறுகிறது. அதற்காகவே இந்தக் கதையை நான் நிராகரிக்கிறேன்.

மற்றபடி, கதை என்று பார்த்தாலும் பல ஓட்டைகள் இருக்கின்றன. முக்கியமாக,
சுஜாதா பாணி கதை விவரணையும் (பிளாஸ்டிக் புன்னகை, உயரன் போன்ற வார்த்தைகள் இந்த எழுத்தாளரின் சுஜாதா மோகத்தைப் பறைசாற்றுகின்றன) மற்றும் கையாண்டிருக்கும் மொழிநடையும் கதையின் ஆதாரமான மிஸ்டிக் தன்மைக்கு கொஞ்சம்கூடச் சரியாக ஒத்துவரவில்லை என்பதை இந்தக் கதையை வாசிக்கும் பலர் உணர்ந்திருக்கக்கூடும்!

என்னளவில் இது தோல்விக் கதையே.

(இதை நான் தனிப்பட்ட முறையில் - அதாவது உரையாடல் போட்டிக்கான கதைகளைத் தேர்ந்தெடுக்கப் போகிறேன் எனத் தெரியுமுன்பு எழுதினேன் - போட்டி என்பதால், முடிவு தெரிந்த பின்பு வெளியிடலாம் என நினைத்திருந்தேன் - இந்த விமர்சனம் பற்றி நண்பர் அனுஜன்யாவிடம் தொலைபேசியில் பேசியிருக்கிறேன்.

வலைப்பதிவில் பின்னூட்டங்கள் என்பவை முக்கியமானவை. ஆனால் பல சமயங்களில் அவை வெற்று பாராட்டுகளாகவும் முன் தீர்மானிக்கப்பட்ட template வாசகங்களாகவும் இருக்கின்றன. அதை மாற்ற, கதை கவிதைகளைப் பற்றிய இம்மாதிரியான விரிவான விமர்சனங்கள் தேவை என நினைத்தேன். அனுஜன்யாவும், ஆக்கபூர்வமான விமர்சனங்களை வரவேற்பவர் என்பதால், இப்பதிவு).

32 comments:

Sridhar Narayanan said...

:) சுந்தரின் விமர்சனமும் வேறு தளத்தில் இருக்கிறது போல. பிறகு படித்து புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

உங்கள் கதையை படித்தபோது ஏதோ கண்ணிகள் விடுபட்டது போல் இருந்தது. பிறகு நண்பர் வெட்டிப்பையல் மடற்குழுவில் நடந்த விவாதத்தையும் உங்கள் விளக்க்த்தையும் அளித்த பி்றகு எனக்கு முழுப் படமும் கிடைத்தது. வியக்க வைத்தது உண்மை. முதல் வாசிப்பில் அது கிடைக்காததும் உண்மை.

சுந்தரின் விமர்சனத்தில் சில முக்கிய புள்ளிகளைப் பார்க்கிறேன்.

//முதலில், இறந்தவளின் உடலோடு காதலாக முத்தம் கொடுத்தவன் (அதை உடலுறவு கொண்டதாகவும் வாசிக்கலாம்), //

வேட்டையாடு விளையாடு படம் பார்க்கும்போது இறந்த மனைவியை மார்ச்சுவரியில் பார்க்கும் கணவன் தடுப்புகளை பிடுங்கிப் போட்டுவிட்டு மனைவியின் அருகில் படுத்துக் கொள்ளும் காட்சி நினைவிற்கு வந்தது.

//பெயர்கள் இங்கு முக்கியமாகிறது. நம்மவர்களுக்குக் கடவுளர்களான உமா ஹரி எனப் பெயர் இருக்க அவர்களுக்கு டானி, ஜிங்!//

//இந்த இடத்தில் கதையின் வருபவன் சிவனா அல்லது கதை எழுதுபவரே சிவனா எனச் சந்தேகம் வருகிறது.//

//ஆறு மாதங்களில் இரண்டே இரண்டு விரல்கள்தான்//

//இவர் நவீன எழுத்து என்ற பெயரில் முன்வைத்திருக்கிறார். அந்த வகையிலேயே இந்தக் கதை ஆபத்தானதாக மாறுகிறது. //

’எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க’ என்று தோன்றுகிறது :)

ஆடு தானாக வெட்டிக் கொள்ள் ரெடியா இருந்தாக் கூட சென்சேஷனலான தலைப்பு வச்சுகிட்டுத்தான் வெட்டிக்குது பாருங்க :))

ஜ்யோவ்வோட கதையை ஏதாவடு எடுத்து நீங்க ‘எதிர்’ விமர்சனம் எழுதலாமே. நாங்களும் ஓரமா குந்திகிட்டு வேடிக்கைப் பார்ப்போம்ல :))

நேசமித்ரன் said...

:)

நல்ல விமர்சனம்

என்னடா இது எல்லாத்துக்கும் கைதட்டுரீங்கன்னு நீங்க கேட்குறது புரியுது
என்ன பண்றது அப்புடியே பலகீருசுள்ள..

Jokes apart

மிக நுணுக்கமாக கதையை அணுகும் ஜ்யோவ் இன் விமர்சனம் அற்புதம்

கார்க்கிபவா said...

நடக்கட்டும் நாச வேலைகள்.. தொடங்கட்டும் துஷ்ட தனங்கள்..

சுந்தர்ஜி, எல்லோரும் சொல்வது போல் பல நேரம் நாமிடும் பின்னூட்டம் வெறும் புகழ்ச்சி அல்ல. எங்கள் வாசிப்பனுபவத்திற்கு இந்த குறைகள் தெரிவதில்லை. மிகவும் நல்ல கதை என்றே நம்பிவிடுகிறோம்(?). அதனாலே அப்ப‌டி சொல்ல நேர்கிறது. தவறென்று தெரியும் எதையும் நாங்க‌ள்,அல்லது நான் புகழ்வதில்லை.

இது போன்ற விரிவான விமர்சனங்கள், படைப்பை விட முக்கியமானதென்று நான் நினைக்கிறேன். எங்களை மேம்படுத்திக் கொள்ள உதவும்.

எங்களுக்கு தெரியும் குறைகள் பெரும்பாலும் எழுத்துப் பிழைகளே. தெரியாமல் வரும் பிழைகள் அல்ல. தளத்தின் பெயரிலே பலர் தவறு செய்கிறார்கள். அதை எடுத்து சொன்னால் பலரின் வசைக்கு ஆளாக வேண்டியிருக்கிறது.


அப்படியே.. சரி வேண்டாம். நன்று சுந்தர்ஜி&அனுஜன்யா

நந்தாகுமாரன் said...

இப்போது புரிகிறது (புரிகிறதா என வாசிக்கக் கூடாது) இந்தக் கதைக்கு நான் ஏன் ஏற்கனவே பின்னூட்டம் இடவில்லை என்று -

ஒன்று. சுஜாதா பாணியை அலுப்பாக செய்திருப்பது (இம்மாதிரி குற்றச்சாட்டுகளை நீங்கள் என் கதைகள் மீதும் வைக்க முடியலாம் என்பதை நான் உணராமலில்லை)

ரெண்டு. என்ன தான் நடை ஸ்வாரஸ்யமாக இருந்தாலும் புதிதாக எதையும் சொல்லாமல் ஆனால் புதிதாக எதையோ சொல்ல இருப்பதாக ஒரு தோற்றத்தை மட்டுமே உருவாக்கி இருப்பது

மூன்று. இந்தக் கதை எனக்கு பிடிக்கவில்லை என்று முற்றாக என்னால் ஒதுக்க முடியவில்லை ... படிப்பதற்கு ஸ்வாரஸ்யமாக்த்தான் இருந்தது(அப்போதும் இப்போதும்) ... இது முக்கியம் ... ஆனால் பெரிதாகக் கவரவில்லை (பெரிதாக நான் உங்களிடம் எதிர்பார்த்தேன் ... இப்படி எதிர்பார்ப்புகளோடு ஒரு படைப்பை அணுகுவது சரியில்லை என்றாலும்)

நந்தாகுமாரன் said...

இன்னும் கொஞ்சம் சொல்லலாம் எனத் தோன்றுகிறது ... ஜ்யோவின் விமர்சனம் மிக நுணுக்கமாக, அருமையாக இருக்கிறது என்றாலும் இம்மாதிரி கதைகளை இவ்வளவு நுணுக்கமாக அணுகினால் நிரகரிக்கத் தான் தோன்றும் ... this is too much of dissection for a an entertainer ...

//

இது உரையாடல் போட்டிக்கான கதை. சிவனுக்கும் பார்வதிக்குமான போட்டியில் என்ன நடந்தது என்பது புராணக் கதைகளின் மூலமாக நமக்கு ஏற்கனவே விளக்கப்பட்டிருக்கிறது. பார்வதி எரிந்து சாம்பலாக்கப்பட சிவன் வென்றாக வேண்டும்!

பெண்களுக்கு இடமளிக்காதே என்ற ஒரு சொலவடை உண்டு. அப்படிக் கொடுத்தால், அவர்கள் உன்னையே காலி செய்துவிடுவார்கள் கபர்தார்! என்று கட்டுப்பெட்டித்தனமான ஆண்டாண்டு காலமாக கூறப்பட்டுவரும் குப்பையையே இவர் நவீன எழுத்து என்ற பெயரில் முன்வைத்திருக்கிறார். அந்த வகையிலேயே இந்தக் கதை ஆபத்தானதாக மாறுகிறது. அதற்காகவே இந்தக் கதையை நான் நிராகரிக்கிறேன்.

//

மூடநம்பிக்கைகளைப் புனைவில் கொண்டாடுவதில் எந்தத் தவறும் இல்லை ... ஏனெனில் இது ஒரு புனைவு (புனைவின் சுதந்திரத்தையும் கேள்வி கேட்பது படிப்பவர் சுதந்திரம் என்றாலும்) ... expression vary - to entertain and not to enlighten ; to expolit and not to explore ... this is ok in fiction ...

யாத்ரா said...

கதை விமர்சனம் பின்னூட்டங்கள் எல்லாமே அழகாக இருக்கிறது :)

நந்தாகுமாரன் said...

well on second thoughts since this story was for a competition, this had to be dissected ...

சென்ஷி said...

//வலைப்பதிவில் பின்னூட்டங்கள் என்பவை முக்கியமானவை. ஆனால் பல சமயங்களில் அவை வெற்று பாராட்டுகளாகவும் முன் தீர்மானிக்கப்பட்ட template வாசகங்களாகவும் இருக்கின்றன. அதை மாற்ற, கதை கவிதைகளைப் பற்றிய இம்மாதிரியான விரிவான விமர்சனங்கள் தேவை என நினைத்தேன். அனுஜன்யாவும், ஆக்கபூர்வமான விமர்சனங்களை வரவேற்பவர் என்பதால், இப்பதிவு).//

சிறப்பான குறிப்புடன் நல்ல விமர்சனம். நன்றி சுந்தர்ஜி!

மணிகண்டன் said...

கதை நல்லா தான் இருக்கு. நடை ஒன்னும் சுஜாதாவோட கம்பேர் பண்ணுகிற அளவுக்கு எல்லாம் இல்லை :)- ஜ்யோவுக்கு எல்லா எடத்துலயும் சுஜாதாவை தேடி குறை சொல்றதே பொழப்பா போச்சு.

ஆனாலும் அருமையான விமர்சனம். பாதி கதை இப்ப தான் புரிஞ்சது. இதுக்குத் தான் கவிஞர் எழுதும் கதை எல்லாம் படிக்க கூடாது போல.

thamizhparavai said...

அப்பாடா... ஒரு வழியா இன்னைக்குத்தான் கதை புரிஞ்சது..
ஜ்யோவுக்கும்,பதிவிட்ட உங்களுக்கும் நன்றி... :-)

பா.ராஜாராம் said...

இப்போதான சிறுகதை வாசிக்க வாய்த்தது அனு. எவ்வளவு அருமையான நடை! சுந்தர் அநியாயத்துக்கு உடைத்து போட்டிருக்கானோ(சுந்தரின் புகை படம் பார்க்கும் போது போட்டிருக்காரோ என சொல்ல தோனுது) என இருக்கு.இது ஒரு நாவலாக,விரிந்திருக்கவேனும் போல் இருக்கு அனு.வரையறுக்கப்பட்ட size க்குள் உட்க்கார வைக்க செதுக்கியத்தின் சிரமம் மட்டுமே இதில் தெரிகிறது.மற்றபடி,நல்ல flow.எடுத்ததும் தெரியலை முடித்ததும் தெரியலை.பரிசுக்கு ஏற்றது என அறுதியிட என்னால் இயலாது.உங்களுடையதையும் சேர்த்தால் நாலு சிறுகதையே வாசித்திருக்கிறேன்.உங்கள் மேல் வைத்திருக்கும் அன்பை விலக்கிவிட்டு பார்க்கும் போதும் இந்த சிறுகதை எனக்கு பிடித்திருக்கிறது.சுந்தரை மோந்து பாருங்கள் கிரீஸ் வாடை வரும்.கதை,கவிதைகளை கழட்டி மாட்டுகிற கிரீஸ் வாடை!

மங்களூர் சிவா said...

நல்லாதான் இருக்கு அவர் விமர்சனமும்.

விநாயக முருகன் said...

கவலைப்படாதீங்க. Author Dead. எப்ப எழு‌தி முடிச்சீங்களோ அப்பவே ஆசிரியர் இறந்துட்டாரு. நைசா கழண்டுக்கிட்டு அடு‌த்த படைப்பு எழுத ஆரம்பிங்க...

ரௌத்ரன் said...

எனக்கு தெரிந்த வரையில் சாதாரண ஒரு கதை..கொஞ்சம் அதிர்ச்சி முலாம் பூசப்பட்டிருக்கிறது.அவ்வளவு தான்.முக்கியமாக கதையில் உயிரில்லை.பூத கண்ணாடி கொண்டு பார்த்து புட்டு புட்டு வைக்கும் அளவுக்கெல்லாம் கதையில் சரக்கிருப்பதாக தெரியவிலை.

ஹரி,உமா என்று பாத்திரங்களின் பெயர் இருப்பதும் மேற்படி சம்பவங்களும் தெரிந்தே கட்டமைக்கப்பட்டவை தான் எனினும் அதில் ஆபத்தெல்லாம் ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை.போகிற போக்கை பார்த்தால் கதை,கவிதை இன்னது இன்னது தான் பேச வேண்டும் என கூறப்படும் போல.

இந்து,புராணிய குறியீடுகளை பயன்படுத்த முனைவது செய்ய கூடாததா என்ன?என்னை பொறுத்தவரை ஒன்றை(மட்டும்) உயர்த்தி பிடிப்பது.ஒன்றை(மட்டும்) நிராகரிப்பது இரண்டும் ஒன்றே தான்.அந்த வகையில் இவ்விமர்சனத்தை நிராகரிக்கவே தோன்றுகிறது.

மற்றபடி இப்படியும் வாசிக்க முடியும் என்பதை அழகாக கூறிய ஜ்யோராம் அவர்களுக்கு நன்றி.

அ.மு.செய்யது said...

ஸ்ஸப்பா...விமர்சனம் !!! கண்ண கட்டிருச்சி !!!

அந்த கதைக்கு நானும் பின்னூட்டம் போட்டதாக நினைவு.அதுல இவ்ளோ மேட்டரா இருந்துச்சி ???

Mahesh said...

அம்மாடி.... நல்லவேளை... ஜ்யோவ் என் கதையைப் படிக்கலைன்னு நினைக்கிறேன்.... :)

Karthik said...

கதையை படிச்சு கிறுகிறுத்து வந்தா, விமர்சனம்... பெரிய பசங்க விளையாட்டு! :)

Karthikeyan G said...

//ரௌத்ரன் said...
முக்கியமாக கதையில் உயிரில்லை.பூத கண்ணாடி கொண்டு பார்த்து புட்டு புட்டு வைக்கும் அளவுக்கெல்லாம் கதையில் சரக்கிருப்பதாக தெரியவிலை.
//

அவ்ளோதான்.. :)

ரௌத்ரன் Sir, How simply said..

Thamira said...

நல்லா வேணும்.. நல்லா வேணும்.. ஹிஹி..

Kumky said...

:-))

பாலோ ஆப்புக்காக.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//பா.ராஜாராம்
இந்த சிறுகதை எனக்கு பிடித்திருக்கிறது.சுந்தரை மோந்து பாருங்கள் கிரீஸ் வாடை வரும்.கதை,கவிதைகளை கழட்டி மாட்டுகிற கிரீஸ் வாடை!//

இந்தக் கருத்தை வாசித்துச் சிரித்துக் கொண்டிருக்கிறேன். உண்மை போல் தான் தெரிகிறது.

வால்பையன் said...

இப்ப தான் எனக்கு அந்த கதையே புரியுது!

மணிகண்டன் said...

புகைப்படத்தில் சுந்தரை விட நீங்கள் அழகாக தெரிகிறீர்கள். ஏன் இப்படி ?

மண்குதிரை said...

kathaiyai patiththu vittuththaan
intha vimarsanam patikkaventum enru ninaiththeen athuthaan kala thaamatham.


kathaiyai oru muussil patikka ennaal iyalavillai.

"கையாண்டிருக்கும் மொழிநடையும் கதையின் ஆதாரமான மிஸ்டிக் தன்மைக்கு கொஞ்சம்கூடச் சரியாக ஒத்துவரவில்லை "

inthak karuththotu udan patukireen

en nanban n v murugan solvathu poola, author dead

atuththa kathaikku pena putingka

Ashok D said...

பின்னோட்டங்கள் interesting.

ஜ்யோவ் விளக்கியதால் கதை புரிந்தது.

கதையின் முடிவில் (எனக்கு) உடன்பாடில்லை.

நர்சிம் said...

ரொம்ப சந்தோஷம். பட்டறைக்கு அப்புறம், இனிமே புனைவு எழுதலாமா வேணாமான்னு நினைச்சு டரியல் ஆகி இருக்கும் போது இப்பிடி பார்ட் பார்ட்டா விமர்சனம் வேறயா?

அறிவிலி said...

ஒரு சிறுகதைக்கே...

நல்ல வேளை நாவல் போட்டி நடக்கல... :))))

குசும்பன் said...

அல்லோ கதை கதைன்னு சொல்றீங்களே அது எங்கன்னு கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கப்பா கொழப்பம் புடிச்ச பின்நவீனத்துவ பிரபங்களா!

(ஜானி வீடு எங்க இருக்குன்னு சொல்லுங்கடா ... ஸ்டைலில் படிக்கவும்)

anujanya said...

@ ஸ்ரீதர்

'சென்செஷனலான' தலைப்பு - பிரபலமாகும் தொழில் நுட்பம் கொஞ்சமாச்சும் தெரிஞ்சுக்கலாம்னுதான் :)

//ஜ்யோவ்வோட கதையை ஏதாவடு எடுத்து நீங்க ‘எதிர்’ விமர்சனம் எழுதலாமே. நாங்களும் ஓரமா குந்திகிட்டு வேடிக்கைப் பார்ப்போம்ல :))//

எனக்கும் ஆசை தான். ஆற்றல் ? :(((

நன்றி ஸ்ரீதர் :)

@ நேசமித்ரன்

நன்றி நேசன்

@ கார்க்கி

//எங்கள் வாசிப்பனுபவத்திற்கு இந்த குறைகள் தெரிவதில்லை. மிகவும் நல்ல கதை என்றே நம்பிவிடுகிறோம்(?). //

யாராவது கொஞ்சம் பயமுறுத்தினா, உடனே அப்ரூவர் ஆகிடுவியா நீ? :(((

நன்றி கார்க்கி :)))

@ நந்தா

நன்றி நந்தா. சுவாரஸ்யமான பின்னூட்டங்கள்.

@ யாத்ரா

நீ ரொம்ப நல்லவன்பா. நன்றி யாத்ரா :)

@ சென்ஷி

//சிறப்பான குறிப்புடன் நல்ல விமர்சனம். நன்றி சுந்தர்ஜி!//

சரி சரி, உன்ன தனியா கவனிக்கிறேன் :(((

நன்றி சென்ஷி :)))

@ மணிகண்டன்

:))). நன்றி மணி.

@ தமிழ்ப்பறவை

நன்றி பரணி.

@ ராஜாராம்

//இது ஒரு நாவலாக,விரிந்திருக்கவேனும் போல் இருக்கு அனு.வரையறுக்கப்பட்ட size க்குள் உட்க்கார வைக்க செதுக்கியத்தின் சிரமம் மட்டுமே இதில் தெரிகிறது//

ஆமாம், ராஜா உண்மைதான்.

//சுந்தரை மோந்து பாருங்கள் கிரீஸ் வாடை வரும்.கதை,கவிதைகளை கழட்டி மாட்டுகிற கிரீஸ் வாடை!//

இன்னும் சிரித்துக் கொண்டே இருக்கேன். நன்றி ராஜா.

@ சிவா

வெளங்கிடும் :(

நன்றி சிவா :)

@ வி.மு.

ஆஹா, இப்படி ஒரு எஸ்கேப் இருக்கா? நன்றி வி.மு.

@ ரௌத்ரன்

உங்கள் பின்னூட்டமும், நந்தாவுடையதும் முக்கியமானவை. நன்றி ரௌத்ரன்.

@ செய்யது

//அதுல இவ்ளோ மேட்டரா இருந்துச்சி ???//

இருக்கும் போல ஒரு பாவ்லா. பயப்படாத செய்யது :)). நன்றி.

@ மஹேஷ்

நீ புண்ணியம் (அந்த வார்த்தை எல்லாம் சொல்லலாமா?) செய்தவன்.

நன்றி மஹேஷ்

@ கார்த்திக்

:))). நன்றி கார்த்திக்

@ கார்த்திகேயன் ஜி.

என் இந்த கொலவெறி? நன்றி கார்த்தி.

@ ஆதி

யோவ்...

@ கும்க்கி

ரொம்ப தேவை

@ ஜெஸ்வந்தி

நானும்தான் :))

நன்றி ஜெஸ்வந்தி

@ வால்பையன்

அய்யய்யோ. புரிஞ்சுடிச்சா?

நன்றி குரு

@ மண்குதிரை

ஹ்ம்ம், ரொம்ப நன்றி அய்யா :)

@ அசோக்

நன்றி அசோக்

@ நர்சிம்

இதோட நிறுத்திடுவீங்கன்னு நினச்சா....

நன்றி நர்சிம்

@ அறிவிலி

ஆமாம் இல்ல? நன்றி பாஸ்.

@ குசும்பன்

அடேய்

@ எல்லோருக்கும்

இதன் நீட்சியாக நர்சிம் பெரிய பின்னூட்டம் ஒரு பதிவாகவே வந்து, அதிலும் பின்னூட்டங்கள், ஜ்யோவின் பதில் என்று இருப்பதால், அங்கு நான் சொல்ல வந்ததை சொல்லி விடுகிறேன்.

அனுஜன்யா

JACK and JILLU said...

உண்மையில் இந்த விமர்சனத்தை படித்த பிறகுதான் சிறுகதை இன்னும் நன்றாகவே புரிந்தது... இதற்காக... நன்றி சுந்தர்

ராமலக்ஷ்மி said...

விவாதம் அடுத்தக் கட்டத்துக்கெல்லாம் போய் அங்கே சுபமும் போட்டாயிற்று. பரவாயில்லை, என் கருத்துக்களை பதிந்து செல்கிறேன்.

சுந்தரின் 'ஒருசில' கருத்துக்கள் சரி போலத் தோன்றினாலும், நேரடியான கவிதை கதைகளை எழுத பலபேரும் இருக்கையில் இது போன்ற படைப்புகளை உங்கள் போன்ற ஒருசிலராலேயே தரமுடிகிறது. கதை [அல்லது கவிதை] புரிகையில் அல்லது புரிய வைக்கப் படுகையில் [அதில் தவறொன்றுமில்லை என்றே கருதுகிறேன், பதிவுலகின் வரப்பிரசாதமே இந்த கருத்துப் பரிமாற்றங்கள்தானே] ஒரு ‘அட!’ எழுகிறதே, அதுவே பெரிய வெற்றி.

உழவனின் உரையாடல் சிறுகதைக்கான உங்கள் பின்னூட்டம், இந்தக் கதையை எழுத நீங்கள் எப்படி சிந்தித்துச் சிரமப் பட்டிருப்பீர்கள் எனப் புரிய வைத்தது! பரிசு கிடைக்கலை என்றெல்லாம் வருத்தப் படாதீர்கள். பதிவிட்டபோது கிடைத்த பாராட்டுக்களே பரிசு. நல்லா ஓடிய ஆர்ட் ஃபிலிம். மாநில விருது தவறினாலும் தேசிய விருதுக்குக் காத்திருக்கிறது என எண்ணுங்கள். நடக்கும்.

தொடருபவர் எண்ணிக்கை ஒன்றரை சதம் தாண்டியதற்கும் வாழ்த்துக்கள். [வேறு யாராவது கவனித்தார்களா, நான்தான் ஃபஸ்ட்டா:)?]

anujanya said...

@ Jack and Jullu

உங்கள் முதல் வருகை? 'திருவிளையாடல்' தருமி வசனம்தான் ஞாபகம் வருது. "பாட்டுப் பாடி புகழ் பெறுபவர்கள் சிலர். குற்றம் கண்டுபிடித்தே ....". நான் கஷ்டப்பட்டு கதை எழுதினால், சுந்தருக்குப் பாராட்டா? கிர்ர்ர்ர்ர்

நன்றி ஜெ ஜெ.

@ ராமலக்ஷ்மி

ரொம்ப நெகிழ்வாக இருக்கு சகோ. பரவாயில்ல, நீங்களாவது ஒரு படைப்பாளி (ரொம்ப ஓவர்ல இது?) படும் கஷ்டங்களைப் புரிந்து கொள்கிறீர்களே!

//பதிவிட்டபோது கிடைத்த பாராட்டுக்களே பரிசு. //

உண்மைதான். அதன் மகிழ்ச்சியே தனிதான்.

//தொடருபவர் எண்ணிக்கை ஒன்றரை சதம் தாண்டியதற்கும் வாழ்த்துக்கள். [வேறு யாராவது கவனித்தார்களா, நான்தான் ஃபஸ்ட்டா:)?]//

நாட்ல இதனை அப்பாவி ஜனங்களா என்று தோணுது இல்ல? :)))

நன்றி சகோ - யாவற்றுக்கும்.

அனுஜன்யா