Tuesday, June 9, 2009

ஒரு உரையாடலும் பதிவுலகும் ……(எதைப்) பற்றியும் பற்றாமலும் .... (9th June '09)

தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் மின்னஞ்சலில் ஒரு உரையாடல்:

நான் : என்னப்பா, லக்கி 25-30 நிச்சயம் என்கிறார். இட்லி வடையும் அதேதான் சொல்றாரு. ஆனா, அம்மாவுக்கு அவ்வளவு கிடைக்கும் என்கிறார்.

அவர் : சான்சே இல்ல. தி.மு.க.கூட்டணி குறைஞ்சது 25.

நான் : நீங்க என்ன தி.மு.க.வா? இதுவரை நடுநிலை ஆசாமிகள் யாரும் தி.மு.க.வுக்கு இவ்வளவு கிடைக்கும்னு சொல்லவே இல்ல?

அவர் : உண்மைய சொன்னா உங்களுக்கு அப்படித் தெரியுது. ரிசல்டு வரட்டும்.

நான் : அப்படியில்ல. பலமான கூட்டணி. ஈழ அதரவு. அதனால எனெக்கென்னவோ இது ஒரு 20-20 மேட்ச் தான்னு தோணுது.

அவர் : பாப்போம்.

தேர்தல் முடிவு தினம்; காலை எட்டு மணி.

என் அலைபேசி ஒளிர்கிறது. அவரேதான்.

"ஹலோ, பாத்தீங்களா ரிசல்ட்ட?"

"இன்னும் சரியா தெரியலியே"

"தி.மு.க. அமோக வெற்றி. வை.கோ., பா.ம.க., இளங்கோவன், தங்கபாலு எல்லாரும் தோல்வி முகம்."

"வாவ். சூப்பர். நா அப்பவே சொன்னேன்ல. நா நினைத்த மாதிரியே, லக்கி சொன்ன மாதிரியே இவ்வளவு ஸ்ட்ராங் ஃ பெர்பார்மன்ஸ்.

அந்தப் பக்கம் பல் கடிக்கப்படும் சப்தம் கேட்டது. லைன் கட்..

இதற்கு மேல் அந்தப் பதிவரை மரியாதையுடன் விளிக்க முடியவில்லை. கொலை வெறியில் எனக்கு ஃபோன் பண்ணி உசுப்பேற்றிய புண்ணியவான் நம் எல்லோருக்கும் சகா தான்.

இப்போது வெற்றி நடை போடும் 32 கேள்விகள் குசும்பன் மூலம் என்னையும் தீண்டினாலும், நான் பங்கேற்க விருப்பமில்லாததை அவரிடன் சொன்னவுடன், பெரிது படுத்தாமல் 'லூஸ்ல விடுங்க' என்ற பெருந்தன்மைக்கு ஒரு நன்றி. எனக்குப் பொதுவாகவே இந்த me-me களில் அலர்ஜி. அதாவது 'நான் தனி' என்ற அகந்தையினால் இருக்கலாம்; அல்லது 'இதுவரை சொன்னதை விட நாம என்ன புதுசா சொல்லப் போறோம்' என்ற அடக்கமும் இருக்கலாம். இரண்டும் சந்திக்கும் ஒற்றைப்புள்ளியில் (ஆஹா, என்ன ஒரு பி.ந.நடை) இது வந்ததால், மறுத்து விட்டேன்.

அத்திரி நான் அறிந்தவரை ஒரு innocent kid. அவருக்குக் கோபம்/வருத்தம் என்றால், அதனை வெறும் சாமர்த்திய வார்த்தைகளால் மட்டும் எதிர்கொள்ளாமல் ஏன் அந்தக் கருத்து நிலவுகிறது என்று எல்லா பிரபலங்களும் எண்ணிப் பார்ப்பது நல்லது. ஏனென்றால், அத்திரி வலையுலகில் நிறைய பதிவர்களின் வருத்தத்தை ஒரு பிரதிநிதியாகச் சொல்லியிருப்பது போல எனக்குப் படுகிறது. ஆதியோ, கேபிளோ தவறு செய்ததாக எனக்குத் தோன்றாவிட்டாலும், ஒரு சுய சோதனை எல்லாருக்கும் நலம் பயக்கும். அதே சமயம், எல்லோரும் பொதுவாக சுட்டிக்காட்டும் 'குரூப்' மனப்பான்மை உண்மை என்றாலும் அதில் என்ன தவறு என்று புரியவில்லை. நான் கவனித்து வந்ததில், தண்ணீர் தனது நிலையை நாடுவது போல, ஒவ்வொரு பதிவரும் தனக்கு ஒத்திசையில் உள்ள சக பதிவர்களுடன் நட்பை நாடுவது நடந்து கொண்டேதான் இருக்கிறது. அலைவரிசைகள் வேறானால் சற்று சிக்கல் ஏற்படுகிறது.

சுவாரஸ்ய ஆட்கள் மற்ற சுவாரஸ்ய ஆசாமிகளுடனும், இலக்கியவாதிகள் சக ஹிருதயர்களுடனும், பெண் பதிவர்கள் ஏனைய பெண் பதிவர்களுடனும், கவிஞர்கள் பிற கவிஞர்களுடனும், மிக முக்கியமாக மொக்கைவாதிகள் எல்லா மொக்கைவாதிகளுடனும் ஒரு குழுமமாக செயல் படுவதை ஒரு ஒப்புக்கொள்ளக் கூடிய இயல்பாகவே நான் எடுத்துக் கொள்கிறேன்.

ரொம்ப சீரியசாகப் போகிறதா? சமயம் கிடைக்கும் போதெல்லாம் வண்ணதாசன் படிப்பதில் கொஞ்சமாவது உங்களுக்கு கொடுக்க வேண்டாமா? அய்யனாருக்கு (நம்ம அய்ஸ் இல்ல) எழுதும் கடிதத்தின் நடுவே இப்படி சில வரிகள்:

"சுஜாதாவை நான் பார்த்ததில்லை என்று சத்தியம் பண்ணினால்கூட யாரும் நம்ப மாட்டார்கள். சிரிப்பது சௌகரியமான பதிலாக இருக்கிறது. சுஜாதா பற்றி ஒரு தனி அத்தியாயம் எழுத வேண்டிய அளவுக்கு தற்காலத் தமிழ் உரைநடையில் அவருக்கு தாக்கம் இருக்கிறது. மிகச்சிறிய ஆயுதங்களுக்கு மிக நுட்பமான சாணை பிடிக்கிற காரியத்தை அவர் செய்திருக்கிறார். தோட்டக் கத்திரியால் மீசை வெட்டிக்கொண்டிருந்த உரைநடையின் பெருவிரலிலும், சுட்டு விரலிலும் சின்னஞ்சிறிய கத்திரியைக் கொடுத்து டிரிம் பண்ணினார். தமிழ் மீசைகள் ஒத்துக்கொள்ளாது போனாலும், கன்னம் இழைக்கிற தமிழ் மீசையின் இளங்காதலிகள் இதை ஒத்துக் கொள்வார்கள், அந்தரங்கமாகவேனும்.”

வண்ணதாசனுக்கு நன்றி. அவர் சொல்வது சரியா என்று பார்ப்போம் - இப்போது சுஜாதா:

உரைநடையை எளிதாக எழுதுவதற்கு ஒரு கழகம் ஆரம்பித்தால் அதற்கு நான் உடனே ஆயுள் சந்தா அனுப்புவேன். தற்போது தமிழில் கொஞ்சம் தீவிரமாகச் சிந்திப்பவர்கள் மிகச் சிக்கலாக எழுதுகிறார்கள்.அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று தெரிந்து கொள்வதற்கு திரும்பத் திரும்பப் படித்துப் படம் வரைந்து பாகங்களைக் குறிக்க வேண்டியிருக்கிறது. என்னைச் சராசரிக்குச் சற்று மேற்பட்ட வாசகனாகக் கொள்ளலாம். எனக்குப் புரியவில்லை என்றால், புரிவது கஷ்டமாக இருக்கிறது என்றால் இது யார் தவறு?

உதாரணம் சொல்கிறேன்: "இலக்கியத்தில் நேற்று இல்லாதிருந்து இன்று இக்கணம் புதிதாக நிகழ்ந்து சாத்தியமாகி உள்ள ஒரு பரிமாண விஸ்தாரம் புகைப்படக்கலை அல்லது தியேட்டரைச் சார்ந்துள்ள எல்லைகளிலிருந்து பிய்த்து எடுக்கப் பட்டதனாலும் விஸ்தாரம் சாத்தியமாகிவிட்ட இக்கணத்திலிருந்து அது இலக்கியத்தைச் சார்ந்த எல்லையாகி விடுகிறது."

இந்த வாக்கியம் ஒரு தீவிரமான பத்திரிகையில் சமீபத்தில் வெளியானது. அதை எழுதியவர் தீவிரமான ஒன்றைச் சொல்ல முயன்றிருக்கிறார். ஆனால் விஷயம் பஞ்சு படிந்து வாக்கியச் சிக்கலில் தன்னைத்தானே சுருட்டிக்கொண்டு இருக்கிறது. நத்தை போல் தொட்டால் உள்ளே போய்விடுகிறது. இந்தத் தீவிர எழுத்தாளர்களைவிட, "அடேய், பக்கெட் சாம்பார்" என்று நேர்முகமாகத் தாக்கும் 'சவுக்கடி' போன்ற பத்திரிகைகளின் வசன நடை மேல் என்று தோன்றுகிறது.

இன்னொரு தருணத்தில் இப்படி: ‘புதுக் கவிதை இப்போது இயக்க ரூபத்துக்கு வந்து விட்டது. 'கணையாழி' ஆசிரியர் ஒரு வருசத்துக்கு கவிதை சேர்ந்து விட்டது என்னும்போது சற்று பயமாகக் கூட இருக்கிறது. அதற்கு ஒரு காரணம் தபால் கார்டு .... சட்டென்று பத்து பைசா கொடுத்து வாங்கி ...
"தமிழக அரசு
ரூட் நம்பர் 21 இல்
அவளைப் பார்த்தபோது
அவள் உதட்டின் மேல்
மெலிதான மீசை"

என்று அந்த பஸ்சிலேயே எழுதிவிட்டு அருகில் உள்ள தபால் பெட்டியில் சேர்த்துவிடும் சௌகரியம் அதில் இருக்கிறது..’

சமீபங்களுக்குச் செல்வோமா?

படைப்புகள் ஆ.வி.யில் வரும் புண்ணியம் செய்தவர்கள்: வெண்பூ, கேபிள் சங்கர், ஆதி, ஜ்யோவ்ராம் மற்றும் வழக்கம் போல் நர்சிம். அனைவருக்கும் பாராட்டுகள்.

உயிரோசை, வார்த்தை, நவீன விருட்சம் போன்ற இலக்கியப் பத்திரிகைகளில் அடிக்கடி வெளிவரும் கவிதைகளுக்குச் சொந்தக்காரர்கள் நமக்கு பரிச்சயமான அக நாழிகை, யாத்ரா, லாவண்யா, முத்துவேல், நந்தா, மண்குதிரை, சேரல், பிராவின்ஸ்கா , ஆதவா, முத்துராமலிங்கம். இவர்கள் எல்லோருமே அவ்வளவு நன்றாக எழுதுகிறார்கள்.

பிரபல கவிதைகள்: யாத்ராவின் 'திருவினையாகாத முயற்சி' மற்றும் ஜ்யோவின் 'காற்றில் படபடக்கும் பக்கங்கள்'. யாத்ரா கவிதைக்கு அக நாழிகையின் பின்னூட்டம் சிறப்பு. ஜ்யோவ் கவிதை, அதைச் சிலாகித்த பை.காரன் பதிவு, அதைப் பகடி செய்த வளர் பதிவு, இவை அனைத்திலும் வந்த பின்னூட்டங்கள் அட்டகாசம்.

பரபரப்பு: 'உரையாடல்' அமைப்பு நிகழ்த்தும் சிறுகதைப் போட்டி. சாட்டிலும், மின்னஞ்சல்களிலும் கதை/கருத்துப் பரிமாறல்கள். இதுவரை கருத்து கேட்டு என்னிடம் பதினேழு கதைகள் வந்திருக்கு. ஒவ்வொரு கதையின் ஒரு பத்தியை வெட்டி, ஒட்டி ஒரு புது கதை நானே தயாரித்து வைத்திருக்கிறேன். மிகப் பிரமாதமான பின் நவீனக் கதையாக உருவாகியிருக்கிறது. உண்மையிலேயே பன்முகம் தெரிகிறது. மற்றவர்கள் பிழைத்துப் போகட்டும் என்று அதை அனுப்பப் போவதில்லை.

பெரிய ஆச்சரியம்: பிரபாகரன் பற்றிய என் பதிவுக்கு ஒரே நாளில் சுமார் 900 ஹிட்ஸ் வந்தது. தொடர்ந்து மூன்று நான்கு நாட்கள் ஹிட்ஸ் நிறைய இருந்தன. இப்போது ஜுரம் முற்றிலும் வடிந்து, சகஜ நிலை திரும்பி, ரசம் சாதம் சாப்பிட்டுக் கொண்டே இது வரை வந்த பதினான்கு பேருக்கு வணக்கம் சொல்லுகிறேன்.

ஏமாற்றம் : ஒரு வருடத்தில் ஒரு முறைகூட சூடான இடுகை இன்ன பிற என்று தமிழ்மணத்தின் இடது பக்க சமாச்சாரங்களில் என் பெயர் வராமல் இருந்த பெருமை, பிரபாகரனால் பாழாகிவிட்டது. வாசகர் பரிந்துரை/சூ.இடுகை எல்லாம் ஏதோ கெட்டவர்கள் பிரபலத்துகாகவோ அல்லது பிரபலங்கள் கெட்டதற்காகவோ செய்யும் காரியங்கள் என்று பொறாமையில் இருந்தேன். வெறும் நான்கு தினங்கள் நல்லவனாகி, மீண்டும் இப்போது பொறாமை வந்து விட்டது.

படபடப்பும் நிம்மதியும்: நண்பனின் உறவினர் குழந்தைக்கு உடல் நலம் பாதித்து, கொஞ்சம் சிக்கல் என்று முதலில் சொல்லப்பட்டதும், சரியான சிகிற்சை, நிறைய பேரின் பிரார்த்தனைகள் மூலமும் அது எல்லாம் சரியாகி இப்போது குழந்தை போகோ சேனல் பார்ப்பதும்.

29 comments:

Anonymous said...

//இலக்கியவாதிகள் சக ஹிருதயர்களுடனும், //

இது நல்ல இருக்கே... செல்வேந்திரன் மேடைக்கு வரவும். ( பொழுது பொனுமில்ல)

நட்புடன் ஜமால் said...

படபடப்பும் நிம்மதியும்\\

படபடப்புகள் என்றும் நீங்கி

நிம்மதி என்றும் நிம்மதியாக கிடைக்க மென்மேலும் பிரார்த்தனைகள்

லக்கிலுக் said...

வலைப்பதிவுக் குழுக்கள் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது இச்சூழலில் மிக முக்கியமானது.

இந்தப் பிரச்சினையில் இருந்து தப்பிக்க நான் கையாள்வது ஒரே ஒரு உபாயம் தான். கிட்டத்தட்ட எல்லா குழுவிலும் ஐக்கியமாகி விடுகிறேன் :-)

அத்திரியும் இதை பின்பற்றினால் டென்ஷன் ஆகவேண்டியதில்லை!

நட்புடன் ஜமால் said...

வலையுலகில் நிறைய பதிவர்களின் வருத்தத்தை ஒரு பிரதிநிதியாகச் சொல்லியிருப்பது போல எனக்குப் படுகிறது\\

சர்தானுங்கோ!

Mahesh said...

அப்பாடா... நான் ஒருத்தனே "பிரபல" பதிவரா தனியா இருக்கேனே.. கூட யாருமே இல்லயேன்னு பாத்தேன்... நீங்களும் இருக்கீங்கன்னதும் ஒரு ஒஉது தெம்பு வந்துடுச்சு.

சென்ஷி said...

// லக்கிலுக் said...

வலைப்பதிவுக் குழுக்கள் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது இச்சூழலில் மிக முக்கியமானது.

இந்தப் பிரச்சினையில் இருந்து தப்பிக்க நான் கையாள்வது ஒரே ஒரு உபாயம் தான். கிட்டத்தட்ட எல்லா குழுவிலும் ஐக்கியமாகி விடுகிறேன் :-)

அத்திரியும் இதை பின்பற்றினால் டென்ஷன் ஆகவேண்டியதில்லை!//

லக்கி சொன்னதை கன்னாபின்னாவென வழிமொழிந்து கொள்கின்றேன்.

:))

அகநாழிகை said...

//சமயம் கிடைக்கும் போதெல்லாம் வண்ணதாசன் படிப்பதில் கொஞ்சமாவது உங்களுக்கு கொடுக்க வேண்டாமா? //

இதிலிருந்துதான், ரொம்பப் பிடித்திருக்கிறது.
கணையாழியின் கடைசிப் பக்கங்கள் இப்போது நாம் பதிவுகளில் எழுதுகிறோமே... சிறுசிறு குறிப்புகளாக, ஒரு கலவையாக, அவ்வப்போது தோன்றும் மனதின் பல உணர்வுகளை வெளிக்கொணர்வதாக இருக்கும். எதைப்பற்றியும் பற்றாமலும்,, என்ற தலைப்பிற்கேற்றபடி பதிவு மனதின் எண்ணங்களை அப்படியே விருப்பு வெறுப்பற்றுப் பகிர்வதாக இருக்கிறது.
பகிர்தலுக்கு நன்றி.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

Athisha said...

''கலக்கி''ட்டீங்க

அத்திரி said...

//அத்திரி நான் அறிந்தவரை ஒரு innocent kid.//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...........எனக்கு அது வேணும்.........அவ்வ்வ்வ்வ்

வசந்த் ஆதிமூலம் said...

மனதின் எண்ணங்களை அப்படியே விருப்பு வெறுப்பற்றுப் பகிர்வதாக இருக்கிறது.
பகிர்தலுக்கு நன்றி.

கார்க்கிபவா said...

அத்திரியை நாம் தவறாக நினைக்க வேண்டாம். ஆனால் அவர் சொன்ன அக்ருத்து சரியெனப் படவில்லை.. அதுவும் எல்லா சகாக்களையும் நேரில் பார்த்து பழகியவர் உரிமையுடன் கேட்டிருக்கலாம். வெறுப்பை உமிழ்ந்திருக்க வேண்டாம்..

ஆனாலும் நீங்கள் சொன்னது போல அவரை நாமறிவோம்.. நம்ம அத்திரி தானே.. இட்ஸ் ஓக்கே..

☼ வெயிலான் said...

// இதற்கு மேல் அந்தப் பதிவரை மரியாதையுடன் விளிக்க முடியவில்லை. கொலை வெறியில் எனக்கு ஃபோன் பண்ணி உசுப்பேற்றிய புண்ணியவான் நம் எல்லோருக்கும் சகா தான் //

:)))

Ashok D said...

உங்கள் பதிவுகள் முடியும் போது கஷ்டமாயிருக்கு. சிலரோட பதிவுகள் படிக்கவே பேஜாரா கீதுபா.

சின்னப் பையன் said...

கடைசி வாக்கியத்தை படிக்க ஆரம்பித்த எனக்கே படபடப்பா ஆயிடுச்சே... அப்புறம் ஓகே.

கே.என்.சிவராமன் said...

அனு,

வர வர உங்களிடம் ஒரு ப்ளோ அபாரமாக உயிர்பெற்று வளர ஆரம்பித்திருக்கிறது.

ஒரு பத்தி எழுத்தாளருக்கான தன்மைகள் பதிவில் பளிச்சிடுகின்றன. எழுதி வைத்துக் கொள்ளுங்கள். விரைவில் ஏதேனும் ஒரு இதழிலிருந்து உங்களை கடைசிப் பக்கம் எழுத அழைக்கப் போகிறார்கள்.

அட்வான்ஸ் வாழ்த்துகள் :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

நேசமித்ரன் said...

கவிதைக்கு பக்கத்திலிருக்கிறது உங்கள் மொழி
கருப்பொருள் செறிவு குறைவதே இல்லை
எதை எழுதினாலும் ....

thamizhparavai said...

சுவையான கலவைதான்...
//"தமிழக அரசு
ரூட் நம்பர் 21 இல்
அவளைப் பார்த்தபோது
அவள் உதட்டின் மேல்
மெலிதான மீசை"//
கவிதை சூப்பர்ண்ணா...

ஆ.சுதா said...

அருமையான 'எழுத்து'
நிறைய விசயங்களை நிறைவாக சொல்லி விட்டிருக்கீக!

நந்தாகுமாரன் said...

சும்மா சொல்லக் கூடாது ... கூட்டுப் பொறியலைச் சுவையாகச் சமைக்கும் உங்கள் கைப் பக்குவம் நன்றாக இருக்கிறது ... நன்றாக எழுதும் கவிஞர்கள் குறித்த உங்கள் பிரத்தியேகப் பட்டியலில் நீங்கள் ’நந்தா’, எனக் குறிப்பிடுவது நான் தான் என்று நம்பிக் கொண்டு நன்றி சொல்லிக் கொள்கிறேன்; இல்லையென்றால் சொல்லுங்கள் வருத்தப்படமாட்டேன் ... என்ன, நீங்கள் சொன்ன நேரம் நான் ஒரு சற்றே சிறிய சிறுகதையை எழுதி்த் தொலைத்துவிட்டேன் - அதைப் படித்தவர்கள் என் வலைதளம் பக்கம் இனிமேல் வரவே மாட்டார்கள் போல இருக்கிறது ... சரி நம்ம விதி அப்படித் தான் போல ... :)

குப்பன்.யாஹூ said...

i think editing is required for this post. here and there it goes.

But thanks for sharing sujatha and Vannadasan's writings.

Hopen in yr next post u will post the full text of sujatha and vannadasan.

யாத்ரா said...

உங்கள் பத்தி மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது, நண்பர்களோடு என் பெயரையும் உங்கள் பத்திகளில் பார்க்கும் போது மனம் மிகவும் நெகிழ்ந்து போகிறேன். எனக்கு தான் எவ்வளவு உறவுகள், இந்த வலையுலகில் என்பதை நினைக்கும்போது மனம் நிறைகிறது. மிக்க நன்றி.

Mahesh said...

ஸ்வாமி... உங்க எழுத்து ஸ்டைல் பக்காவாயிண்டு இருக்கு... சுஜாதா மாதிரி வெரைட்டியா எழுதறது நன்னா இருக்கு !!! நடுப்பற லைட்ஸ் ஆன் வினோத் மாதிரி இங்லீஷ் க்வோட்ஸ் குடுக்கறது பொங்கல்ல முந்திரி மாதிரி. கலக்குங்கோ !!

குசும்பன் said...

//பைத்தியக்காரன் said...
அனு,

வர வர உங்களிடம் ஒரு ப்ளோ அபாரமாக உயிர்பெற்று வளர ஆரம்பித்திருக்கிறது.//

இதுக்கு பேருதான் உசுப்பேத்துதல் டெக்னிக்!:)) இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே...

// எழுதி வைத்துக் கொள்ளுங்கள். விரைவில் ஏதேனும் ஒரு இதழிலிருந்து உங்களை கடைசிப் பக்கம் எழுத அழைக்கப் போகிறார்கள்.//

முற்றும் அல்லது நன்றி எழுத நீங்களா வாவ் சூப்பர். அட்வான்ஸ் வாழ்த்துக்கள்:))

அத்திரி மேட்டர் பத்தி தனியாக எழுதனும்!

வணங்காமுடி...! said...

\\
"தமிழக அரசு
ரூட் நம்பர் 21 இல்
அவளைப் பார்த்தபோது
அவள் உதட்டின் மேல்
மெலிதான மீசை"
என்று அந்த பஸ்சிலேயே எழுதிவிட்டு அருகில் உள்ள தபால் பெட்டியில் சேர்த்துவிடும் சௌகரியம் அதில் இருக்கிறது..’
\\

சுஜாதாவின் எழுத்தை அளித்ததற்கு நன்றி.. எங்கு படித்தாலும், அவர் எழுதிய எதைப் படித்தாலும் மிகப் பிடிக்கிறது எனக்கு.

\\
மற்றவர்கள் பிழைத்துப் போகட்டும் என்று அதை அனுப்பப் போவதில்லை
\\

மிக்க நன்றி

\\எல்லாம் சரியாகி இப்போது குழந்தை போகோ சேனல் பார்ப்பதும்\\

மகிழ்ச்சி...

Vinitha said...

என்ன சொல்ல வரீங்க புரியலே?

32 கேள்வி பதிலுக்கு யாரும் உங்களை கூப்பிடலையா?

தமிழ் ப்ளாக் உலகில் வர வர, சில "பிரபல" (கொடுமை!) பதிவர்கள் பெயர் இல்லாமல் ஒரு பதிவும் பார்க்கமுடிவதில்லை.

anujanya said...

@ மயில்

:))) நன்றி விஜி

@ ஜமால்

வாங்க ஜமால். கொஞ்ச நாட்களுக்குப் பின் உங்கள் வருகை.

@ லக்கி

தளபதி துணை முதல்வர் ஆன பின்புதான் இங்க வரணும்னு இருந்தீங்களா? Whatever, உங்கள் முதல் வருகை.

குழுமம் - நீங்க சொல்வது சரிதான். நீங்களும் அதிஷாவும் நிறைய அதைக் கடைப்பிடிக்கவும் செய்கிறீர்கள். Neither of you can be identified with a group. நன்றி லக்கி.

@ மஹேஷ்

:)))). நன்றி மஹேஷ்

@ சென்ஷி

சென்ஷி, உனக்கு சொந்தக் கருத்து என்று ஒன்று ... ச்சும்மா, டைம் பாஸ் மச்சி.

நன்றி சென்ஷி

@ அகநாழிகை

நன்றி வாசு. இனி கொஞ்சம் குறைத்துக் கொள்கிறேன்.

@ அதிஷா

என்னடா இது! இவங்களும் ஒரு 'குருப்பா' மொத தடவ வந்திருக்காங்க :)

நன்றி அதிஷா.

@ அத்திரி

யோவ், எனக்கு இதுவும் வேணும் .... நன்றி அத்திரி

@ வசந்த்

நன்றி வசந்த். அப்படி இருக்கவே (பெரும்பாலும்) முயல்கிறேன்.

@ கார்க்கி

அப்பிடி லூஸ்ல விடு சகா.

@ வெயிலான்

வாங்க தல. பாருங்க அவன் அதப் பத்தி ஒண்ணுமே சொல்லல :)

@ அசோக்

ஒரு பொதுப் புரிதலில் 'நன்றி'னு போட்டுக்கறேன். அந்த 'சிலரில்' நானும் இருக்கேனா?

@ ச்சின்னப் பையன்

உண்மையில் எனக்கும் அப்படித்தான் இருந்தது. நன்றி.

@ பை.காரன்

முதலில் உண்மையா இருக்குமோன்னு பரபரப்பா இருந்தது. குசும்பன் சொன்ன பின்பு தான் நிலைமை தெளிஞ்சது. இருப்பினும் நன்றி உங்கள் பேராசைக்கு.

@ நேசமித்ரன்

பெயரே வித்தியாசமாக இருக்கேன்னு உங்க தளம் வந்து பார்த்தேன் நேசன். அருமையான மொழிவளம் உங்களுக்கு. நன்றி உங்கள் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும்.

@ தமிழ்ப்பறவை

நன்றி பரணி.

@ முத்துராமலிங்கம்

வாங்க கவிஞரே! நன்றி முத்து.

@ நந்தா

எனக்கு வேறு நந்தா யாரும் பரிச்சயம் இல்லை. You are certainly one of my fav.guys when it comes to poems. சிறுகதை படித்தேன். நல்லாவே வந்திருக்கு.

நன்றி நந்தா.

@ குப்பன் யாஹூ

oops, i thot its my understanding of non-linear writing.

full text? didnt quite get it. anyways, will write abt them from time to time. both are prolific.

thanks.

@ யாத்ரா

உங்கள் 32 பதில்கள் பின்னூட்டத்தில் சொன்ன மாதிரி, நீங்கள் ஒரு பவழமல்லி மரம். மெல்லத் தொட்டாலே பொலபொலவென்று கொட்டும் மனம்.

உங்களை மற்றவர்கள் கொண்டாடுவது இயல்பான ஒன்று தான் யாத்ரா. நன்றி.

@ மஹேஷ்

ரொம்ப தேங்க்ஸ்டா அம்பி. நன்னா இரு.

@ குசும்பன்

நல்ல வேளை, இந்த மாதிரி கலாய்த்தல் செஞ்ச. இல்லாட்டி, பை.காரன் சொன்னத நம்பி நான் அவராக மாறியிருப்பேன் :)

@ வணங்காமுடி

நன்றி சுந்தர்.

@ வினிதா

//இப்போது வெற்றி நடை போடும் 32 கேள்விகள் குசும்பன் மூலம் என்னையும் தீண்டினாலும், நான் பங்கேற்க விருப்பமில்லாததை அவரிடன் சொன்னவுடன்,//

இப்படிச் சொல்லியும் புரியவில்லை என்றால் ..நான் வேறுமாதிரி எழுதப் பழக வேண்டும் :)

'பதிவுலகு' பற்றிய பதிவில் பிரபலங்கள் வருவது எதிர்பார்க்க வேண்டியதுதான். ஆயினும், நீங்கள் சொல்வதும் கரெக்ட். நினைவில் வைத்துக் கொள்கிறேன்.

நன்றி வினிதா.

முரளிகண்ணன் said...

அருமையாக இருக்கிறது. நல்ல வாசிப்பனுபவம் கிடைக்கிறது. உங்கள் பத்தியை வாசிக்கும்போது

நர்சிம் said...

எதைப் பற்றியும் பற்றாமலும் விட்டும் விடாமலும் வெளுத்தும் வாங்காமலும்னு எல்லா ஏரியாலையும் கலக்கி இருக்கீங்க...

சப் டைட்டில்கள் அருமை.

நாடோடி இலக்கியன் said...

// 'குரூப்' மனப்பான்மை உண்மை என்றாலும் அதில் என்ன தவறு என்று புரியவில்லை//


"ஒத்திசைவான கருத்துக்களை எழுதும்போதும்,ஒரே அலைவரிசையில் சிந்திக்கும்போதும் "அட" இவன் நம்ம ஆளுய்யா என்கின்ற எண்ணம் வருவது மிகவும் இயல்பான விஷயம்" என்பதுதான் என்னுடைய கருத்தும்.

பதிவு நல்லதொரு வாசிப்பனுபவத்தை தந்தது,அருமையா எழுதியிருக்கீங்க.