Sunday, June 21, 2009

சிங்கள அரசு பிணக்குவியலின் மேல் ஈட்டிய வெற்றி (?)



ஈழத்தில் சிங்கள அரசு கையாண்ட போர்முறைகள், தமிழின மக்கள் பிணக்குவியலாக மாறுவதை இராணுவத் திட்டத்தின் ஒரு பகுதியாக முன்பே உணர்ந்த சிங்கள அரசு, குரல்வளை நெரிக்கப்பட்ட சிறிலங்காவின் ஊடகங்கள் என்று மிகக் கவலைக்கிடமான விடயங்களைப் பகிர்ந்துகொண்ட சுனிலா அபயசெகராவின் ஆங்கில நேர்காணலின் இன்னொரு பகுதி. இதன் காணொளி வளர்மதியின் பதிவில் காணலாம். நேர்காணல் செய்தவர் ஷார்மினி பெரிஸ் என்னும் பத்திரிகையாளர்.

இப்போது நேர்காணலின் தமிழாக்கம்:

ஷார்மினி: சுனிலா, இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம் - சிங்களர்கள், தமிழர்கள், இஸ்லாமியர்கள், புலம் பெயர்ந்த தமிழர்கள் - எல்லோருக்கும்; விடுதலைக்குப் போராடிய பலர் துக்கத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள் - சிங்கள இராணுவத்திடம் தோற்றுவிட்ட விடுதலைப் புலிகளை எண்ணி - உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது தற்போது?

சுனிலா: ம்ம், எம்மைப் போன்ற மனித உரிமைப் போராளிகளும், சிறி லங்கப் போருக்கு அரசியல் ரீதியில் தீர்வு காண முயன்றவர்களுக்கும் - மிக மனவழுத்தம் தரும் தருணம் இது. ஏனெனில் - இந்த போர் நிகழ்ந்த முறையும், பன்னாட்டு அரசுகள் இதை எதிர்கொண்ட விதமும் - தற்போது நடப்பவையும் - ஒரு விதமான அமானுஷ்ய அமைதி நிலவும் சூழல் - உள்நாட்டிலும், வெளியிலும்; இவற்றைத் தாங்கவே முடியாததாக இருக்கிறது. ஏனென்றால், நான் என் வாழ்நாளில் முப்பது வருடங்களை சிறிலங்காவில் மனித உரிமை போராட்டங்களில் செலவழித்தவள். சில தருணங்கள் கையறு நிலையை உணர்ந்திருக்கிறோம் - இதற்கு முன்பே இவ்விதம் ஒருமுறை உணர்ந்ததை நான் சொல்ல வேண்டும் - எண்பதுகளில் ஏராளமானோர் சிறிலங்காவில் காணாமல் மறைந்த போழ்தில் - இம்மாதிரியான தருணங்களில் நாம் என்ன செய்தாலும் ஒரு வித்தியாசமும் ஏற்படப் போவதில்லை என்று உணர்ந்தது - இப்போது அப்படித்தான் உணர்கிறேன்.

ஷார்மினி: இது ஒரு நீண்ட யுத்தம். சிறிலங்கா இராணுவத்தின் புலிகளைத் தோற்கடிக்கும் திட்டம் வெகு நாட்கள் கிடப்பில் இருந்த ஒன்றுதான். 2006 ஆம் ஆண்டில் நீங்கள் இது புலிகளை வெல்வதற்கான ஒரு பாய்ச்சலின் ஆரம்பம் என்று கூறியிருந்தீர்கள். இது எவ்வாறு துவங்கியது? ஏன் துவங்கியது என்று விளக்க முடியுமா?

சுனிலா: இந்த சிறிலங்க அரசு, முந்தைய எல்லா அரசுகளைக் காட்டிலும் புலிகளை, அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த இடங்களிலிருந்து வெளியேற்ற இராணுவத் திட்டத்தைத் தொடங்கியது. கிழக்கு மாகாணத்தை முதலில் 2006 இலும், பிறகு தற்போது முடிவடைந்திருக்கும் வன்னியிலும்.
முதலிலிருந்தே - 2006 ஆம் ஆண்டின் நடுவில் என்று எண்ணுகிறேன் - இந்த இராணுவத் தாக்குதல் குடிமக்களுக்கு நேரக்கூடிய பின்விளைவுகளையோ, குடிமக்கள் மரிப்பதைப் பற்றியோ சற்றும் பொருட்படுத்தாமல் முன்னேறப் போவதின் அறிகுறிகள் தெளிவாகத் தெரிந்தது. வாஹரில் நடந்தேறிய 'வான் குண்டு மழை' ஒரு உதாரணம் என்று நினைக்கிறேன். ஆனால் அரசு அதனை மறுத்தது. எப்போதும் போலவே. அரசு, நாட்டின் கிழக்குப் பகுதி ஒரு துளி இரத்தமும் சிந்தப்படாமல் விடுவிக்கப் பட்டதாகவே எப்போதும் சொல்லி வந்தது. ஆனால், குறைந்தது நூறு பேர்கள் அந்த 'வான் குண்டு மழையில்' உயிரிழந்ததை நீங்கள் நிச்சயம் அறிவீர்கள். இவற்றைச் சரியாகக் கணிக்காமல் விட்டதும், இம்மாதிரி நிகழ்வுகள் ஒரு விதிவிலக்குகள் என்று எண்ணி வாளாயிருந்ததும் முக்கிய விடயங்களாகத் தோன்றுகிறது.

ஷார்மினி: எதனை கணிக்கத் தவறவிட்டீர்கள்?

சுனிலா: இந்த முறை அரசின் வேறுபட்ட அணுகுமுறையை. குடிமக்கள் மாள்வது போரில் முன்னேற ஒரு தடையாக இருக்காது என்ற முடிவுடன் இந்த அரசு இருந்ததாக எண்ணுகிறேன். முந்தைய அரசுகள் ஒவ்வொரு முறையும் இனிமேல் நடவடிக்கை எடுத்தால் அது குடிமக்களை வெகுவாக பாதிக்கும் என்ற நிலையை எதிர்கொண்டபோது, இராணுவம் ஒரு அளவுக்கு மேல் முன்னேற முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால், 2006 ஆம் ஆண்டிலிருந்து இந்த அரசு தனது இராணுவ நடவடிக்கைகளில் மிகவும் முனைப்புடன் செயல்பட்டது - குடி மக்கள் மரிக்கத்தான் செய்வார்கள். அதனைப் பொருட்படுத்தத் தேவையில்லை என்ற தெளிவான திட்டத்துடன்.

ஷார்மினி: இந்த அரசுக்கு இது ஒரு புதிய துணிச்சலா? பன்னாட்டு அரசுகளின் அங்கிகாரத்துடன் அவர்கள் எண்ணுவதைச் சாதிக்கலாம் என்னும் முனைப்பு.

சுனிலா: இந்த வருடம் மார்ச் மாதம் நியூ யார்க் நகரில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு திரட்டும் பணியில் இருக்கையில் இலங்கையில் குடிமக்களுக்கு நேரப்போகும் நட்டம் பெருமளவு இருக்கப்போகிறது என்று தெளிவாகத் தெரிந்தது. பல்வேறு பன்னாட்டு வெளியுறவுத்துறை அதிகாரிகளிடத்தும், ஐக்கிய நாடுகள் சபையின் உயர் அதிகாரிகளிடத்தும் நான் பேசுகையில், அவர்கள் எல்லோருமே இந்த போர் இப்படித் தான் செல்லும்; மேலும் தற்போது ஒரு சாராரே வென்று கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார்கள். இந்த ஒரு காரணம் காட்டி, பல்வேறு உலக நாடுகளும் நம் எல்லோரையும் - தமிழர், சிங்களர், சிறிலங்காவில் அமைதியை விரும்பிய ஒவ்வொரு குடிமகன் என்று எல்லோரையும் - கைவிட்டு விட்டன.

ஷார்மினி: இத்தகைய அணுகுமுறையின் விலை மிக அதிகம் ..

சுனிலா: இந்தப் போரில் மிகப் பெரும் பாதிப்புக்குள்ளானது ஜனநாயகம் தான் என்று எண்ணுகிறேன்; ஏனெனில் கடந்த 3 - 4 ஆண்டுகளில் தொடர்ந்து நடந்தேறிய இராணுவத் திட்டங்களுடன் - கூடவே நடைவேறிய அரசியல் திட்டமும் - எல்லா முடிவுகளையும் பாராளுமன்றத்தின் அதிகாரங்களுக்கு அப்பால் வைப்பதே அந்த அரசியல் திட்டம் - இன்று நம்மிடம் உள்ள பாராளுமன்றமும், அமைச்சரவையும் நாட்டில் நடப்பது பற்றி துளியும் அறிந்திராத ஒரு நிலை. அனைத்து இராணுவ, பொருளாதார மற்றும் அரசியல் தீர்மானங்கள் ஜனாதிபதியிடம் நேரிடையாக வேலை பார்க்கும் குழுக்களால் மேற்கொள்ளப்படுகின்றன. இவர்கள் பாரளுமன்ற முறைகளுக்கு அப்பாலேயே செயல்படுகின்றனர். ஆகையினால் நிகழ்வுகளுக்குப் பொறுப்பு ஏற்பது, ஜனநாயக மரபுகள் போன்ற விடயங்களே இந்தப் போரினால் ஏற்பட்ட மிகப்பெரிய பாதிப்பு.

ஷார்மினி: இத்தகைய ஜனநாயக மரபுகள் எவை என்று சொல்ல முடியுமா?

சுனிலா: ம்ம், ஒரு எடுத்துக்காட்டுக்கு இதைக் கூறலாம் - கடந்த மூன்றரை வருடங்களாக இராணுவ நடவடிக்கைகள் எப்போதுமே ஜனாதிபதியின் அலுவலகத்துள் உள்ள ஒரு சிறிய சிறப்புக் குழுமத்தால் எடுக்கப்பட்டன. இந்தக் குழுமத்தை வழி நடத்துவது ஜனாதிபதியின் சகோதரரும் இராணுவ அமைச்சகத்தின் செயலாளரும் ஆக இருப்பவர். பல தருணங்களில் நாங்கள் பல அமைச்சர்களிடம் - இராணுவம் இவ்வாறு செயல் படப் போகிறது; அவ்வாறு நடவடிக்கை எடுக்கும் தறுவாயில் உள்ளது; நீங்கள் தலையிட்டு இவற்றை நிறுத்த முடியுமா - என்றெல்லாம் சொல்கையில், அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது பற்றி ஒன்றும் தெரிந்து இருக்கவில்லை. அரசின் வாதம் எப்போதுமே "விடுதலைப் புலிகள் போன்ற பயங்கரவாதிகளுடன் போரிடுகையில் இந்த அணுகுறை அவசியமே' என்னும் ரீதியில் இருக்கிறது. ஆனால், என் எண்ணத்தில் இதனால் ஏற்பட்ட பின்விளைவுகள் - எதற்கும் பதில் சொல்ல அவசியமில்லாத நிலை போன்ற பின்விளைவுகள். இதன் விளைவாக, ஒரு உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமென்றால், 2006 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்றுள்ள பொது மக்கள் படுகொலைகளுக்கு இராணுவம் பொறுப்பு ஏற்காத நிலை என்னும் உண்மையை நாம் எதிர்கொள்ள வேண்டிய நிலை. உங்களுக்குத் தெரியும் - பல்லாயிரக் கணக்கான மக்கள் சிறிலங்கா இராணுவ நடவடிக்கைகளால் உயிர் இழந்திருக்கிறார்கள் என்று - ஆயினும், அதற்குப் பொறுப்பேற்க ஒருவரும் இல்லை. மறுப்பு ஒன்றே நாம் காண்பது. ஏனெனில் ஒரு வரையறுக்கப்பட்ட அமைப்புக்குள் இவை நடக்கவில்லை - எங்களால் எமது கேள்விகளை எங்கே, எவ்வாறு முன்வைப்பது என்று புரியாத நிலை - பாதுகாப்பு அமைச்சகம் சென்றால் அது முழுதும் மறைக்கப் பட்டு, பூசி மெழுகப் படுகிறது.

ஷார்மினி: ஜனநாயகம் பாதிப்புக்குள்ளாவது மற்றும் ஊடகத்துறையின் பங்கு இவைகளைப் பற்றிப் பேசுகையில் ஊடகத் துறையினரும் உங்கள் போன்ற களப்போராளிகளும் வெகு காலமாக அச்சுறுத்தப் பட்டும், நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டும் உள்ளனர். இத்தகைய நீண்ட வரலாற்றை அவதானித்த உங்களைப் போன்றவர்களுக்கும், மனித உரிமைகளுக்காகப் போராடுபவர்களுக்கும் என்ன நடக்கிறது இங்கு?

சுனிலா: சிறிலங்க அரசு தனது இராணுவத் தாக்குதல்களுடன் கூடவே மிக வலிமையான பிரசார உத்தியை மேற்கொண்டுள்ளது - தங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத தொலைகாட்சி, வானொலி நிலையங்கள், நாட்டு மக்களைச் சென்றடையாத நிலை - மனித உரிமை நிறுவனங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் இவர்தம் நேர்மை மற்றும் நம்பகத்தன்மை இவற்றை மாசுபடுத்தி, ஊழல், பணக் கையாடல், முறைகேடுகள் என்று பலவகைகளில் இவர்களை தனிப்பட்ட முறையில் தவறாகச் சித்தரித்தல் என்று பல்வேறு உத்திகளைக் கையாண்டுள்ளது. பேச்சுரிமை, எழுத்துரிமை இவற்றை அச்சுறுத்துவதுடன் நில்லாது எந்த ஒரு அமைப்புமே சுதந்திரமாகச் செயல் பட முடியாத நிலை - பல்வேறு பொதுமக்கள் நல நிறுவனங்கள் பாராளுமன்ற உப-குழுக்கள் முன்பு தருவிக்கப் பட்டு, பல்வேறு கேள்விகளுக்கு உள்ளாக்கப்பட்டு, நிதியுதவி மறுக்கப்பட்டு, பன்னாட்டு மனித நேய நிறுவங்களின் வெளிநாட்டு ஊழியர்களின் வேலை செய்யும் அனுமதி நிராகரிக்கப்பட்டு அல்லது தாமதப் படுத்தப்பட்டு - என்று பலவித இன்னல்கள். ஒரு திட்டமிட்ட முறையில் சமுதாயத்தின் குரலை, உரிமையை மறுப்பது என்பது நடந்திருக்கிறது. குறிவைக்கப்பட்ட தனிப்பட்டவர்களை அச்சுறுத்தல்களுக்கும், சீண்டல்களுக்கும் ஆளாக்குதல் - சிறிலங்க அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் இணைய தளத்தைப் பார்த்தால் இவை நன்றாக விளங்கும் - ஏனெனில் அத்தளத்தில் பல்வேறு தனிப்பட்ட, குறிவைக்கப்பட்ட மனிதர்களைப் பற்றி எப்போதும் கட்டுரைகள், செய்திகள் தவறான முறையில் வெளிவரும். நாங்கள் எல்லோரும் அத்தகைய தாக்குதல்களுக்கு ஆளானவர்கள் தாம்.

ஷார்மினி: நீங்களும் இந்த நாட்டில் பாதுகாப்பாக உணரவில்லையா?


சுனிலா: இல்லை. நான் கடந்த வருடம் வெளியேறினேன். நான் சிறிலங்காவுக்கு வருவதும் போவதுமாக இருந்தாலும் சற்றும் பாதுகாப்புணர்வுடன் இல்லை. சிறிலங்கா மாதிரியான நாட்டில் உள்ள சிரமம் என்னவெனில் எனக்கு அபாயமென்றால், அது மற்றவர்க்கும் அவ்வாறே ஆவதுதான். ஆகையால், நான் வெளியேறுகிறேன் என்று அறிவித்த போது என் அலுவலகத்திலும், என் வீட்டிலும் ஒவ்வொருவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். அது எவ்வளவு சோகம் - என் அன்னை இரவில் நன்றாகத் துயில வேண்டுமென்றால் நான் விலக வேண்டும் என்னும் நிலை.

13 comments:

அக்னி பார்வை said...

என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை

Unknown said...

கொடுமை...!! கொடுமை...!!! அருகில் இருந்து கொண்டே சொந்தங்களை காப்பாற்ற முடியாத துஷ்ட்டர்கள் ஆகிவிட்டோம்.......!!!!


பகிர்விற்கு நன்றி.....!!!!!!

Prabhu said...

அவங்க ஊருல இருக்குறவங்களுக்கே அவங்க மேல நம்பிக்கையில்லயா?

காமராஜ் said...

குலை பதறும் நிகழ்வுகள் இது.
ஒரு அரசு இப்படி நடந்துகொல்லனுமா ?
கொல்லுதே..
எர்ஷாத்தின் பல்லை வைத்துகண்டுபிடித்தது,
ஹிட்லர் எப்படிப்போனார் எனத்தெரியாது,
மீண்டும் இது நடக்கும்.

நர்சிம் said...

அனுஜன்யா.. மிகவும் வேதனையாக இருக்கிறது. என்னத்தச் சொல்ல?மிக வேதனைப் பட வைத்த,வைக்கும் பதிவு.ப்ச்

ராமலக்ஷ்மி said...

அரசின் தவறான அணுகுமுறையினால் எத்தனை ஆயிரமாயிரம் அப்பாவி ஜனங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்:(!

சப்ராஸ் அபூ பக்கர் said...

தொடருங்கள்.....

அ.மு.செய்யது said...

பதைபதைக்க வைத்த பதிவு.

உலகப் போர்களின் தருணம் இருந்த பன்னாட்டு அமைப்பின்(League of nations) கையாலாகாத தன்மை தான் ஐ.நா உருவாக காரணமாக இருந்தது.

ஆனால் இன்று ஐ.நா முற்றிலும் அமெரிக்காவின் கைப்பாவையான பிறகு,

இனப்படுகொலைகள் இலங்கையில் நடந்தால் என்ன ??

காஸாவில் நடந்தால் என்ன ??

நாம் T-20ஐ பார்த்து பாப்கார்ன் கொரிக்க‌ற‌ வேலைய‌ பாக்க‌ வேண்டிய‌து தான‌ என்ற‌ நிலையாகிவிட்ட‌து.

வளர்மதி said...

நன்றி அனுஜன்யா.

DJ said...

த‌மிழ்ப்ப‌டுத்திய‌மைக்கு ந‌ன்றி அனுஜ‌ன்யா.

anujanya said...

@ அக்னி பார்வை

வாங்க தல. அதே மனநிலை தான் நம் அனைவருக்கும். நன்றி அக்னி.

@ மேடி

என்ன சொல்ல மேடி :((

@ பப்பு

இல்லை தான் என்று சொல்லும் நிலை. :(( ; புது இடத்துக்கு வருகிறேன்.

@ காமராஜ்

நன்றி தோழர். என்ன சொல்ல!

@ நர்சிம்

எஸ் :((((((

@ ராமலக்ஷ்மி

உண்மைதான். தெரிந்தே செய்தால் அது 'தவறு' மட்டும் தானா? நன்றி சகோ.

@ அபூ பக்கர்

வாங்க நண்பா. நன்றி.

@ செய்யது

வா செய்யது. ஐ.நா. - அது பெரிய ஜோக் என்று சொல்லணும்.

@ கார்க்கி

எஸ் :(((((((

@ வளர்

நன்றி வளர்.

@ DJ

நன்றி DJ.

அனுஜன்யா

ராமலக்ஷ்மி said...

'தவறான' மட்டுமல்ல, அநியாயமான அணுகுமுறையும். திருத்திக் கொண்டேன், நன்றி அனுஜன்யா.

sakthi said...

kangal kalanguthu...